* பூரிக் கிழங்கு செய்யும் போது பொட்டுக்கடலையுடன் சோம்பு சேர்த்து அரைத்துக் கலந்தால் ருசியாக இருக்கும்.
* மாவு சற்றுப் புளித்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கி கடுகு போட்டு தாளித்து ஊத்தாப்பமாக ஊற்றி எடுக்கலாம், ருசியாக இருக்கும்.
* பொங்கல் செய்யும் போது தண்ணீர் அதிகமாகி விட்டதா? அத்துடன் சிறிது ரவையை வறுத்துக் கலந்து விட்டால் கெட்டியாகி விடும்.
* பெருங்காயம் கட்டியாகி இறுகி விட்டால், அதில் இரண்டு பச்சை மிளகாய் போட்டு வைத்தால் இளகிவிடும்.
* தோசை மாவு நீர்த்து இருந்தால் பாலில் இரண்டு ஸ்பூன் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து அதனுடன் கலந்து விட்டால் மேலும் நீர்த்துப் போகாது, புளிப்பும் தெரியாது.
* காய்கறிகளை வேகவைக்கும் போது அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்தால் காய்கறிகள் எளிதில் வெந்துவிடும்.
* சப்பாத்தி மாவு இரண்டு கிண்ணம், ஒரு வாழைப்பழம், அரை கப் தயிர், தேவைக்கேற்ற உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துப் பிசைந்தால் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.
* பொடி வகைகளில் உப்பு அதிகமாகி விட்டால், அதில் உள்ள பருப்பு எதுவோ அதைக் கொஞ்சம் வாணலியில் வறுத்து, தனியாகப் பொடி செய்து நன்கு கலந்து விட்டால் உப்பு குறைந்து விடும்.
* பூரிக்கு மாவு பிசையும் போது பிரட் துண்டுகளை நீரில் நனைத்துச் சேர்த்து பூரி செய்தால் மொறுமொறுவென இருக்கும்.
* பாகற்காய் வறுவல் செய்யும் போது, பாகற்காயை எண்ணெயில் பொரித்த பிறகு உப்பு, காரம் ஆகியவற்றைச் சேர்த்தால் மொறு மொறுப்பு குறையாது.
* நாட்டுச் சர்க்கரையை ஒரு உலர்ந்த பாட்டிலில் கொட்டி, அதில் ஒரு ரொட்டித் துண்டு போட்டு வைத்தால் சர்க்கரை நன்றாக உதிர்ந்து உலர்ந்து விடும்.
* வெங்காயப் பஜ்ஜி செய்யும் போது சிறிதளவு வெங்காயத்தை வதக்கி விட்டுப் பிறகு, பஜ்ஜி செய்தால் வெங்காயம் வட்ட வட்டமாக பிரிந்து வராது.
* பிரியாணி இலையைப் பிரியாணியில் போடும் பொழுது முழு இலை அல்லது பாதி இலையாக உடைத்துப் போட வேண்டும். சிறு சிறு துண்டுகளாக உடைத்துப் போட்டால் சாப்பிடும் போது தொண்டையில் மாட்டிக்கொள்ளும்.
* ரசம் தயாரிக்கும் போது, சுண்டக்காய் அளவு இஞ்சி சேருங்கள். ரசம் சூப்பராக இருக்கும்.
* இட்லிக்கு மாவாட்டும் போது ஒரே ஒரு ஆமணக்கு விதையைத் தோல் நீக்கி போட்டுப் பாருங்கள். இட்லி மெது மெது என்று இருக்கும்.
* அடைக்கு அரைக்கும் பொழுது மரவள்ளிக்கிழங்கை உரித்து, சில துண்டுகள் சேர்த்து அரைக்கலாம். உருளைக்கிழங்கையும் துண்டுகளாக்கிப் போட்டு அரைக்கலாம். அடை மொறுமொறுவென்று இருக்கும்.
* மிஞ்சி விட்ட பழைய சோற்றை உப்பு போட்டு பிசைந்து நாலைந்து மிளகாய் கருவேப்பிலை ஆகியவற்றை பொடி செய்து போட்டு கலந்து சிறிய உருண்டைகளாய் உருட்டி வெயிலில் காய வைத்து விடுங்கள். சோற்று வடகம் தயார்.
* பச்சைக் கொத்தமல்லித் தழையைப் பச்சையாகவே, துவையல் அரைக்கும் போது, போடுவதற்குப் பதிலாக ஒரு துண்டு மாங்காயைப் போட்டு அரைத்தால் சுவையும் மனமும் அதிகமாகும்.
* மோர்க் குழம்பு வைக்கும் போது அரை நெல்லிக்காய் அரைத்துப் போட்டால் சுவை மிகுதியாக இருக்கும்.
* மீதமான தேங்காய் சட்னியை கெட்டியான புளிப்பு மோரில் சேர்ந்து ஒரு கொதி விட்டால் சுவையான மோர் குழம்பு தயார்.
* கொள்ளு, காராமணி (தட்டப்பயறு) வேக வைத்த நீரை கீழேக் கொட்டாமல் சூப் செய்யப் பயன்படுத்தலாம்.
* வீட்டில் டீ தயாரிக்க நீரைக் கொதிக்க விடும்போது, ஒரே ஒரு புதினா இலையும் போட்டு கொதிக்க விட்டுப் பாருங்கள். டீயின் மனமும் ருசியும் அபாரமாக இருக்கும்.