அயிரை மீன் (Spined Loach) என்பது ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் பொதுவாகக் காணப்படும் நன்னீர் மீன் இனம் ஆகும். குளம், வாய்க்கால் மற்றும் சேறுகள் நிறைந்த சிறு ஆறுகள் போன்றவற்றில் வாழும் இம்மீன்களைப் பற்றிய பல்வேறு குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.
உருவத்தில் மிகச் சிறிய அளவில் இருக்கின்ற இம்மீன்கள் உணவுக்குப் பயன்படுத்தப்படும் மீன் வகைகளில் ஒன்றாக இருக்கின்றன. அயிரை மீன்கள் உடலின் எந்தப் பகுதியும் நீக்கப்படுவதில்லை. இம்மீன்கள் சேற்றுப்பகுதியில் வசிப்பதால் இதன் உடலில் இருக்கும் மேல் தோல் சிறிது நிறமாகும்படி, ஏதாவது ஒரு பாத்திரத்தில் மீன்களுடன் கல் உப்பு போட்டு, அப்பாத்திரத்தோடு சேர்த்துத் தேய்த்து, அதன் பின்னர் நீர் ஊற்றிச் சுத்தம் செய்யப்படுகிறது. இப்படி இரண்டு அல்லது மூன்று முறை சுத்தம் செய்து பயன்படுத்தப்படுகிறது.
இந்த அயிரை மீன்களின் உடல் பகுதிகள் அனைத்தும் உண்ணக்கூடியதாக இருக்கின்றன. மீன்களின் முட்கள், எலும்புகள் பயமின்றி, இந்த மீன்களை குழந்தைகள், வயதானவர்கள் என்று அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். இந்த மீன்களைப் பொறித்துச் சாப்பிட்டால், மீனிலிருக்கும் சுவை அனைத்தும் நீங்கிவிடும் என்பதால் குழம்பு வைத்து மட்டுமேச் சாப்பிடுகின்றனர்.
இம்மீன்கள் சளி, ஜலதோசம் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் அனைத்தையும் நீக்கக் கூடியது என்கிற நம்பிக்கை கிராமப்பகுதி மக்களிடையே அதிகமிருக்கிறது. கிராமப்பகுதி மக்களின் நம்பிக்கையை மருத்துவ ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.
பொதுவாக, அனைத்து வகையான மீன்களிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமிருக்கும். ஆனால், அயிரை மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலத்துடன் ஒமேகா-6 கொழுப்பு அமிலமும் கூடுதலாகச் சேர்ந்திருக்கின்றன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இயல்பான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது. இதே போன்று, ஒமேகா−6 ஆனது தோல் தொடர்பான முழுமைத் தன்மை, சிறுநீரகச் செயல்பாடு மற்றும் மகப்பேறு போன்ற செயல்பாடுகளுக்கும் ஆதரவானதாக இருக்கிறது. எனவே, மற்ற மீன்களை விட அயிரை மீன்கள் கூடுதல் சிறப்புடையதாக இருக்கிறது.
அயிரை மீன்கள் இரத்த நாளங்களுக்கு மிகவும் நல்லது. இரத்த ஓட்டத்தைத் தடையின்றி சீராக்கி, இரத்த அழுத்தப் பிரச்சனை வராமல் தடுக்கிறது. உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அயிரை மீனை அடிக்கடி சமையல் செய்து சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தப் பாதிப்புகள் குறையும். இதேப் போன்று, நீரிழிவு நோயாளிகள் அயிரை மீனைச் சாப்பிடுவதால் நீரிழிவுப் பிரச்சனையினால் வரும் பாதிப்புகளும் குறைகின்றன.
அயிரை மீனைச் சாப்பிடுபவர்களுக்கு கண் நோய்ப் பாதிப்புகள் வருவதில்லை. மாலைக்கண் நோயுடையவர்களுக்கு, அயிரை மீன் சிறந்த மருந்தாக இருக்கிறது. அயிரை மீனிலுள்ள உயிர்ச்சத்து ஈ (Vitamon E) சத்தானது, தோல் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இம்மீனிலுள்ள கால்சியம் சத்துகள் எலும்புகளையும், பற்களையும் வலுவாக்குகிறது. இம்மீன்கள் கர்ப்பிணிகளுக்கும், வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கும் நல்ல உடல் நலத்தைத் தரக்கூடியது.
அயிரை மீன்கள் அதிக மருத்துவக் குணமுடையதாக இருப்பதால், இதனை வாங்கி உண்பவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட சில தென் மாவட்டங்களில் இந்த மீன்கள் கிடைக்கின்றன. இந்த மீன்கள், மற்ற ஆற்று மீன்களை விட, விலையும் மிக அதிகமாகவே இருக்கிறது. தேனி மாவட்டத்தில் இம்மீன்கள் அதன் தரத்திற்கேற்ப, ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை விலைக்குக் கிடைக்கிறது. தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட அசைவ உணவகங்களில் குறிப்பிட்டக் காலங்களில் இம்மீன் குழம்பு சிறப்பு உணவாகக் கிடைக்கிறது.
அரிய மருத்துவக் குணம் நிறைந்த அயிரை மீன் சாப்பிட்டு, நம் உடல் நலத்தை மேம்படுத்திக் கொள்வோமா?