கிராமப்பகுதிகளில் விவசாய நிலங்களின் வரப்பு ஓரங்களிலும், கிணற்று மேட்டிலும் சாதாரணமாக, கொடுக்காப்புளி மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதனை, கோணப்புளி, கோணக்காய், சீனிப் புளியங்காய், கொரிக்கலிக்கா என்றும் அழைக்கின்றனர். பழந்தமிழர்கள், இதனை உக்காமரம் என்கிற பெயரில் அழைத்திருக்கின்றனர். இம்மரத்திலிருந்து கிடைக்கும் கொடுக்காய்ப்புளியின் சதைப்பகுதி உண்ண உகந்தது. இதனை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்.
* கொடுக்காப்புளியை சுமார் 100 கிராமிற்கு மேல் எடுத்துக் கொண்டால் தொண்டையைக் கட்டும் அளவிற்கு வறட்சித் தன்மை கொண்டது என்றாலும் 17 சதவீதம் நீர்ச் சத்து உடையது. அறவே மாவுச் சத்து அற்றது என்பதால் நிறைய நுண் சத்துக்களைக் கொண்டுள்ளது. புரோட்டின், கொழுப்புச் சத்து, நியாசின், தயாமின் போன்ற அரிய சத்துக்களைக் கொண்டது.
* கொடுக்காப்புளி, நீர் ஈர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது. மேலும், நீரிழிவால் ஏற்படும் மிகை நீர்ப் பெருக்கைக் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய திறன் கொண்டது.
* நரம்புகளில் மிகுந்திருக்கும் வெப்பத்தைத் தணித்து வாத நோய்களைத் தீர்க்கிறது. மூட்டு வலியைத் தணிக்க வல்லது.
* செரிமானப் பிரச்சினைகளைத் தீர்க்க வல்லது.
* கர்ப்பிணிப் பெண்களுக்கு பிற நீர்ப்பழங்களை விட கொடுக்காப்புளி பலவிதமான நுண் சத்துக்களை ஈடேற்றக் கூடியதாக இருக்கும். அதன் துவர்ப்புச் சுவை கர்ப்பப் பையைப் பலப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
* ஒரு கைப்பிடியளவு கொடுக்காப்புளி இலைகளைப் போட்டு, 200 மில்லி அளவு நீர் விட்டு அரைத்து வடி கட்டி மிடறு மிடறாகப் பருகினால் வயிற்றுப் புண்களை ஆற்றுவதோடு குடலில் படிந்துள்ள கசடுகளை நீக்கும். அத்துடன் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் கூட்டும்.
* வயிறு, குடல் போன்ற செரிமானப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துவதால், வாயுத் தொல்லை, தொடர் ஏப்பம் போன்ற அஜீரணக் கோளாறுகள் நீங்கும். உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.
* கொடுக்காப்புளியின் விதை கறுப்பாக இருக்கும். அதன் மேல் தோலை நீக்கினால் உள்ளே இருக்கும் வெள்ளை நிறத்திலான பருப்பினை எடுத்து, குறைவாக நீர் விட்டு அரைத்து முகத்திலிருக்கும் பருக்களின் மேல் பூசினால் பருக்கள் மறையும். பருக்களைக் கிள்ளி விட்டு உண்டான கரும்புள்ளிகளும், தூக்கக் கேடு, மன அழுத்தம், கவலை ஆகியவற்றால் உண்டான கண்ணுக்குக் கீழே உருவான கருவளையமும் மறையும்.