மாம்பழம் பெரும்பான்மையாக, பழமாகவே உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு, பழச்சதை துண்டு செய்யப்பட்டு உண்ணப்படுகிறது. பழச்சதை நன்றாக கூழாக்கப்பட்டு, மாம்பழச்சாறாகவும் பருகப்படுகிறது. இந்தியாவின் சில இடங்களில், மாம்பழக்கூழில் சர்க்கரை சேர்த்து உலர்த்தப்பட்டு சிறு துண்டுகளாக மிட்டாய் போலவும் உண்ணப்படுகிறது. மாம்பழத்தைச் சாப்பிடுவதால் நமக்குக் கிடைக்கும் பயன்கள் பல இருக்கின்றன. மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன.
* ஒரு கப் மாம்பழத்தில் உடலுக்கு தினசரி தேவைப்படும் வைட்டமின் சி அளவில் 67 சதவிகிதம் அடங்கியுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
* மாம்பழம் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாக இருப்பதால், இது உடல் நலத்திற்கான செரிமான அமைப்பைப் பராமரிக்க உதவுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது.
* மாம்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இருப்பினும், இதன் இனிப்புச் சுவை நீரிழிவு நோயுடையவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
* மாம்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலம் கழிப்பதை எளிதாக்குகிறது.
* மாம்பழங்களை உணவில் சேர்ப்பதன் மூலம், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.
* மாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் உடல் பருமனாக இருப்பவர்களின் ரத்தக் குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
* மாம்பழங்களில் நோய் எதிர்ப்பு சக்திகள் நிறைந்துள்ளன, அவை புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. மாம்பழங்களை உட்கொள்வது, மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற சில வகையான புற்றுநோய்களைத் தடுக்க உதவுகின்றன.
* மாம்பழத்திலுள்ள வைட்டமின் ஏ சத்து ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உதவுகிறது. வயதான தோற்றத்தைத் தடுக்கவும், தோல்ச் சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
* மாம்பழம் பீட்டா கரோட்டின், உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இந்த ஊட்டச்சத்து ஆரோக்கியமான கண்களைப் பராமரிக்கவும், பார்வை இழப்புக்கு வழி வகுக்கும் வயது தொடர்பான மாகுலர் சிதைவைத் தடுக்கவும் உதவுகிறது.
* மாம்பழத்தில் லூடின் மற்றும் ஜெக்ஸாந்தின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. இவை நமது விழித்திரையில் படும் கூடுதலான வெளிச்சத்தைத் தடுத்து கண்களை பாதுகாக்கிறது.