1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.
2. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.
3. உருளைக்கிழங்கை வேக வைக்க, தண்ணீருடன் சிறிது மஞ்சள்,எண்ணெய் சேர்த்து, வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
4. கீரை வகைகள் வேகும் போது அதிலிருந்து ஒரு வித நச்சுக் காற்று வெளியேறும். எனவே, வேகும் போது மூடி போட்டு மூடக் கூடாது. அவ்வாறு மூடினால் நச்சுக் காற்று கீரையிலேயேத் தங்கி உடலுக்கு கெடுதியை ஏற்படுத்தலாம்.
5. தோசைமாவு, இட்லி மாவு மிகவும் புளித்துவிட்டால்,ஒரு டம்ளர் பால் ஊற்றினால் போதும் புளிப்பை போக்கிவிடும்.
6. உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக இருக்கும்.
7. வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்து விட்டால், கண் எரிச்சல் ஏற்படாது.
8. மிளகாய் வத்தலை வறுக்கும் முன்பு, அதனுடன் அரை தேக்கரண்டி உப்பைச் சேர்த்தால் நெடி வராது.
9. துவரம்பருப்பை வேக வைக்கும்போது, பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால், சாம்பார் இரவு வரை ஊசிப்போகாமல் இருக்கும்.
10. வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கைக் கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.
11. பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
12. ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
13. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.
14. தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
15. ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.
16. வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.
17. கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது.
18. உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
19. பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காகஉணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம்.
20. பூண்டை வெயிலில் வைத்து எடுத்தால், தோலை எளிதில் உரிக்கலாம்.