கோழிக்கறி முட்டைப் பிரியாணி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பிரியாணி அரிசி – 1/2 கிலோ
2. கோழிக்கறி – 1/4 கிலோ
3. முட்டை – 3 எண்ணம்
4. பெரிய வெங்காயம் – 3 எண்ணம்
5. தக்காளி – 2 எண்ணம்
6. சின்ன வெங்காயம் – 5 எண்ணம்
7. பச்சை மிளகாய் – 6 எண்ணம்
8. இஞ்சி – சிறிய துண்டு
9. பூண்டு – 10 பற்கள்
10. சோம்பு – 1/2 தேக்கரண்டி
11. தேங்காய் (துருவியது) – 1 தேக்கரண்டி
12. தயிர் – 100 மி.லி
13. முந்திரிப்பருப்பு – 8 எண்ணம்
14. பட்டை, கிராம்பு, ஏலக்காய் – சிறிது
15. பிரியாணி இலை – சிறிது
16. புதினா இலை – சிறிது
17. மல்லித் தழை – சிறிது
18. எண்ணெய் – 100 மி.லி.
19. நெய் – 2 தேக்கரண்டி
20. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. அரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
2. கோழிக்கறியைச் சுத்தம் செய்து சிறிது தயிர் சேர்த்துப் பிசறி வைக்கவும்.
3. பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைக்கவும்.
4. சோம்பு, தேங்காய், சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பாதி பட்டை, ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய், பாதி மல்லித் தழை, பாதி புதினா, 2 பச்சை மிளகாய் மற்றும் முந்திரி ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
5. பெரிய பாத்திரத்தில் பாதி நெய் மற்றும் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலையைச் சேர்த்துப் பொரிந்தவுடன் வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
6. வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் மீதமுள்ள கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து வதக்கவும்.
7. அனைத்தும் வதங்கியதும் சிக்கனைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை வதக்கவும்.
8. பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தயிர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
9. கோழிக்கறி நன்கு வதங்கியதும் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
10. முட்டை பொடிப் பொடியாக ஆகும் வரை நன்கு கிளறவும்.
11. அதில் அரிசியைத் தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்த்துக் கிளறவும்.
12. அரிசியிலுள்ள ஈரப்பதம் நன்கு குறைந்ததும் எட்டு டம்ளர் சுடுதண்ணீர் ஊற்றி, நன்கு கொதி வந்ததும் மூடி போட்டு வேக வைக்கவும்.
13. அரிசி முக்கால் பதம் வெந்ததும், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
14. சில நிமிடங்கள் கழித்து பிரியாணியில் மீதமிருக்கும் நெய்யை ஊற்றி, அதில் மேலாக மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.