சிக்கன் மஞ்சூரியன்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி – 500 கிராம்
2. முட்டை – 1 எண்ணம்
3. சோள மாவு – 6 மேசைக்கரண்டி
4. சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி
5. இஞ்சி – 25 கிராம்
6. குடை மிளகாய் – 1 எண்ணம்
7. பெரிய வெங்காயம் -2 எண்ணம்
8. பூண்டு – 10 பல்
9. பச்சை மிளகாய் – 3 எண்ணம்
10. வெங்காயத்தாள் – 2 எண்ணம்
11. எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
12. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. சுத்தம் செய்த கோழிக்கறியை நீளத் துண்டுகளாக வெட்டிச் சிறிது நேரம் வேக வைத்துத் தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரைத் தனியாக எடுத்து வைக்கவும்.
2. வேகவைத்த கோழிக்கறியுடன் 4 மேசைக்கரண்டி சோளமாவு, 1 மேசைக்கரண்டி சோயா சாஸ், முட்டை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டிச் சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
3. வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைத் தோலுரித்துப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
4. குடை மிளகாயைக் கழுவி, விதைகளை நீக்கி மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
5. வெங்காயத் தாளினை நீளவாக்கில் குறுக்காக வெட்டி வைக்கவும்.
6. மீதமுள்ள சோளமாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
7. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், ஊற வைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
8. ஒரு வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டினைப் போட்டு இலேசாக வதக்கவும்.
9. அத்துடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
10. அதன் பிறகு சோயா சாஸ், தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
11. பிறகு கரைத்து வைத்துள்ள சோள மாவினை ஊற்றிக் கலக்கி குழம்பு கெட்டியாகும் வரை நன்கு கலக்கி வேகவிட வேண்டும்.
12. அதில் நறுக்கின குடை மிளகாய், வறுத்து வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளைச் சேர்த்துச் சில நிமிடங்கள் வேக விடவும்.
13. கடைசியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத் தாளினை மேலாகத் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.