கோழிக்கறிக் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி - 1/2 கிலோ
2. வெங்காயம் - 3 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. மிளகாய் பொடி - 2 மேசைக்கரண்டி
6. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
7. மல்லிப்பொடி - 1 மேசைக்கரண்டி
8. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
9. பட்டை, கிராம்பு, மிளகு - சிறிதளவு
10. சோம்பு - 1 தேக்கரண்டி
11. இஞ்சி , பூண்டு (நறுக்கியது) - சிறிது
12. சிகப்புக் கலர் பொடி - சிறிது
13. பொட்டுகடலை மாவு - 1 தேக்கரண்டி
14. கருவேப்பிலை - சிறிது
15. மல்லித்தழை - சிறிது
16. உப்பு - தேவையான அளவு
17. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் கோழிக்கறியை நன்றாகச் சுத்தம் செய்து கழுவி எடுத்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் பிளந்து வைக்கவும்.
3. சோம்பு, பட்டை, கிராம்பு அரைத்துப் பொடியாக வைக்கவும்.
4. குக்கரில் சுத்தம் செய்த கோழிக்கறி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் பொடி, இஞ்சிப்பூண்டு விழுது, சிறிது கருவேப்பிலை, உப்பு , 1 தேக்கரண்டி எண்ணெய், பட்டைக்கிராம்புப் பொடி ஆகியவற்றைப் போட்டு பத்து நிமிடம் வரை ஊற வைக்கவும்.
5. பின்னர் அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிரட்டி விட்டுப் பின்னர் குக்கரை நன்றாக மூடி வேக வைக்கவும்.
6. குக்கரில் ஆவி வந்தவுடன் வெயிட்டை போடவும்.
7. மூன்று விசில் வந்தவுடன் இறக்கிவிடலாம். இப்பொழுது கறியுடன் மசாலாக்கள் எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்து இருக்கும்.
8. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடான பிறகு சோம்பு, சிறிது மசாலா பொடி (பட்டை, கிராம்பு) , நறுக்கிய இஞ்சி பூண்டு ஆகியவைகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
9. வதங்கிய பின் குக்கரில் இருக்கும் கோழிக்கறியை அதில் சேர்க்கவும்.
10. அதனுடன் சிறிது கலர் பொடியை சேர்த்து நன்றாகப் பிரட்டி விடவும். வெந்த கோழிக்கறியிலும் தண்ணீர் இருக்கும் என்பதால் தண்ணீர் சேர்க்க வேண்டியதில்லை.
தேவைப்படும் நிலையில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
11. சிறிது நேரம் மூடி வைத்துப் பிறகு, அதனுடன் பொட்டுக்கடலை மாவைச் சேர்த்து பிரட்டிவிடவும்.
12. பின்னர் தண்ணீர் சுண்டியவுடன் மல்லித்தழையைத் தூவி இறக்கி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.