நாட்டுக்கோழி குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. நாட்டுக்கோழி - 1 கிலோ
2. வெங்காயம் – 3 எண்ணம்
3. தக்காளி – 2 எண்ணம்
4. இஞ்சி, பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
5. தயிர் – 2 மேசைக்கரண்டி
6. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
7. மல்லி – 2 மேசைக்கரண்டி
8. சீரகம் - ½ மேசைக்கரண்டி
9. தேங்காய் – 2 மேசைக்கரண்டி
10. பூண்டு – 3 பல்
11. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
12. மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
13. கரம் மசாலாத்தூள் – ½ தேக்கரண்டி
14. உப்பு – தேவையாள அளவு
15. நல்லெண்ணெய் – தேவையான அளவு
16. மல்லித்தழை – சிறிது
செய்முறை:
1. மல்லித்தழை, வெங்காயம், பச்சை மிளகாய் மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
2. நாட்டுக் கோழியை நன்றாகச் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
3. மல்லி, சீரகம், தேங்காய் மற்றும் பூண்டு ஆகியவற்றைக் கடாயில் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
4. வதக்கியவை ஆறியதும் மிக்சியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
5. அடுப்பில் வாணலியை வைத்துக் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
6. பின்பு அவற்றில் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.
7. அதனுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
8. தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்த விழுது, கரம் மசாலா, உப்பு மற்றும் தயிர் ஆகியவற்றைச் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.
9. அதன் பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளை மசாலா சிக்கனில் படும்படி நன்றாக பிரட்டிவிட்டுக் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 20 நிமிடம் வரை கோழிக்கறியை வேகவைக்கவும்.
10. கோழிக்கறி நன்றாக வெந்ததும் இறக்கிக் குழம்பின் ((chicken kulambu)) மேல் மல்லித் தழைகளைத் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.