முட்டைக் குருமா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. முட்டை – 3 எண்ணம்
2. வெங்காயம் – 1 எண்ணம்
3. தக்காளி – 2 எண்ணம்
4. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
5. கரம் மசாலாத் தூள் – 1 தேக்கரண்டி
6. பச்சை மிளகாய் – 3 எண்ணம்
7. பூண்டு – 4 பல்
8. மல்லித்தழை – சிறிது
9. உப்பு - தேவையான அளவு
அரைக்க
10. தேங்காய் – 3 மேசைக்கரண்டி
11. முந்திரிப்பருப்பு – 4 எண்ணம்
12. சோம்பு – 1 தேக்கரண்டி
செய்முறை:
1. முதலில் இரண்டு முட்டைகளை எடுத்துத் தேவையான உப்பு சேர்த்து வேகவைத்து அதனைத் தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.
2. தேங்காய் , முந்திரி , சோம்பைக் கொஞ்சம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
3. பின் வெங்காயம், தக்காளி, பூண்டை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை ஒடித்து வைத்துக்கொள்ளவும்.
4. கடாயில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும், அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளியையும் சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.
5. மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு (வேகவைத்த முட்டையில் உப்பு இருப்பதால், பார்த்துச் சேர்க்கவும்) சேர்த்து மசாலா வாசனை போகும் வரைக் கிளறி விடவும்.
6. அதனுடன் அரைத்த விழுது சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
7. குருமா நன்றாகக் கொதித்ததும், வேகவைத்த முட்டைகளைக் கத்தியால் ஆங்காங்கேக் கீறிவிட்டுக் குருமாவில் சேர்க்கவும்.
8. சில நிமிடங்கள் கழித்து இன்னொரு முட்டையை எடுத்து உடைத்துக் குருமாவில் ஊற்றி, மெதுவாகக் கலக்கி விடவும்.
9. தீயை மிதமான சூட்டில் வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு, மல்லித்தழை தூவி இறக்கவும் .
குறிப்பு: இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம், புரோட்டா, சப்பாத்தி போன்றவைகளுக்குச் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.