சங்கரா மீன் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சங்கரா மீன் – 1/2 கிலோ
2. புளி – எலுமிச்சை அளவு
3. மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி
4. தேங்காய் சிறியது – 1/2 மூடி
5. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
6. தக்காளி – 2 எண்ணம்
7. இஞ்சி – சிறிய துண்டு
8. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
9. கடுகு – 1 தேக்கரண்டி
10. உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
11. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
12. சீரகம் – 1/2 தேக்கரண்டி
13. சோம்பு – 1/2 தேக்கரண்டி
14. நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
15. உப்பு – தேவையான அளவு
16. கருவேப்பிலை – சிறியது
17. மல்லித்தழை – சிறியது
செய்முறை:
1. மீனை மஞ்சள் தூள் கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்திருந்து, பின்னர் அதனைச் சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் புளியைப் போட்டு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்துப் பின்னர் கரைத்து வைக்கவும்.
3. வெங்காயம், தக்காளி, இஞ்சி, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை நல்ல பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
4. தேங்காயைத் துருவி, சில நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு விழுதாக அரைத்து வைக்கவும்.
5. புளிக்கரைசலுடன் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு போட்டு நன்றாக குழி கரண்டியால் கலக்கவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், சோம்பு போட்டுத் தாளிக்கவும்.
7. தாளிசத்துடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலையைப் போட்டு நன்றாக வதக்கிக் குழம்பு வைக்கும் பாத்திரத்தில் போடவும்.
8. பின்பு குழம்பு பாத்திரத்தை தட்டு வைத்து மூடி அடுப்பில் வைத்து, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
9. சிறிது நேரம் கழித்து தட்டை எடுத்து பார்க்கவும். நல்ல தள தள என்று கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காயைக் குழம்பில் சேர்க்கவும்.
10. பத்து நிமிடம் கொதித்தவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை ஒவ்வொரு துண்டாக போடவும்.
11. மீனை போட்ட பிறகு ரெண்டு கொதி வந்தவுடன் நல்லெண்ணெய்யை ஊற்றி, மல்லித்தழையினைத் தூவி அடுப்பை அணைத்து விட்டு இறக்கிப் பின்னர் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.