வாவல் மீன் வறுவல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. வாவல் மீன் – 1/2 கிலோ
2. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
3. மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
4. எலுமிச்சம் பழச்சாறு - 1 மேசைக்கரண்டி
5. முட்டை - 1 எண்ணம்
6. சோள மாவு - 2 மேசைக்கரண்டி
7. மைதா மாவு - 2 தேக்கரண்டி
8. அரிசி மாவு - 2 தேக்கரண்டி
9. நல்லெண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. மீன் துண்டுகளைச் சிறிது மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைத்து, நன்கு கழுவி தண்ணீரை வடிய விடவும்.
2. முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் பிரித்தெடுக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, முட்டையின் வெள்ளைக் கரு, சோளமாவு, மைதா மாவு, அரிசி மாவு, உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.
4. பின்பு அதில், மீன் துண்டுகளைச் சேர்த்துக் கரண்டியில் கலக்கி, இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். அவ்வப்போது அதனைப் பிரட்டி விட்டுக் கொள்ளவும்.
5. அடுப்பில் தோசை கல் வைத்துக் காய்ந்ததும், அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் தேய்த்து விட்டு, ஊற வைத்த சில மீன் துண்டுகளைப் போடவும்.
6. இடையிடையே எண்ணெய் சிறிது விட்டு, வெந்த பின்பு திருப்பிப் போட்டுப் பொன்னிறமாக எடுக்கவும்.
7. இதே போன்று மீதமிருக்கும் மீன் துண்டுகளையும் குறைந்த எண்ணெயில் வறுத்தெடுத்து பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.