மட்டன் சமோசா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கொத்திய ஆட்டுக்கறி – 200 கிராம்
2. வெங்காயம் – 3 எண்ணம்
3. மைதா மாவு – 1 கப்
4. இஞ்சி - சிறு துண்டு
5. பூண்டு - 4 பல்
6. சோம்பு - 1/2 தேக்கரண்டி
7. பட்டை - சிறிது
8. இலவங்கம் – சிறிது
9. நல்லெண்ணெய் – தேவையான அளவு
10. டால்டா – 100 கிராம்
11. சோடாஉப்பு – ஒரு சிட்டிகை
12. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
13. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
14. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கொத்திய கறியை அலசி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
2. கறி வெந்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தில் பாதியையும், உப்பையும் சேர்த்து மேலும் சிறிது நேரம் வேகவைத்து இறக்கி வைக்கவும்.
3. இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, லவங்கம் ஆகியவற்றைச் சிறிது நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் மீதமுள்ள வெங்காயத்தையும், நசுக்கி வைத்துள்ள மசாலாவையும் போட்டு, வேக வைத்த கறியையும் சேர்த்து வதக்கவும்.
5. நீர் சுண்டி கறி சிவந்தவுடன் வாணலியை அடுப்பிலிருந்து இறக்கிக் கறியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
6. மைதா மாவைச் சலித்து, கால் தேக்கரண்டி உப்பு கரைத்த நீரைத் தெளித்து, டால்டாவைக் காய்ச்சி ஊற்றிப் பூரிக்குப் பிசைவது போல் பிசைந்து வட்டமாகத் திரட்டிக் கொள்ள வேண்டும்.
7. திரட்டிய பூரிகளை, கத்தியினால் இரண்டு சம பாகங்களாக அறுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு அரை பூரியை எடுத்து அதன்மத்தியில் அரை தேக்கரண்டி கறி வறுவலை வைத்து, பூரியை முக்கோணமாக மடித்து விட வேண்டும்.
8. இவ்வாறு எல்லாப் பூரிகளையும் சம்சாவாகச் செய்து கொள்ள வேண்டும்.
9. ஒரு வாணலியில் டால்டாவை ஊற்றிக் காய்ந்ததும், சிறு நெருப்பில் இரண்டு அல்லது மூன்று சமோசாவாகப் போட்டுச் சிவந்தவுடன் எடுத்துவிட வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.