ரவா - காய்கறி கிச்சடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. ரவை - 300 கிராம்
2. வெங்காயம் - 1/2 எண்ணம்
3. தக்காளி - 1/2 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
5. கறிவேப்பிலை -சிறிது
6. புதினா இலை - 3 தேக்கரண்டி
7. கேரட் - 1 எண்ணம்
8. உருளைகிழங்கு - 1 எண்ணம்
9. காளிஃப்ளவர் - 1/2 கிண்ணம்
10. பட்டாணி - 1/2 கிண்ணம்
11. இஞ்சி - சிறிய துண்டு
12. பூண்டு - 3 பல்
13. சோம்பு - 1/2 தேக்கரண்டி
14. கிராம்பு - 1 எண்ணம்
15. பட்டை - 1துண்டு
16. கடுகு - 1/4 தேக்கரண்டி
17. கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி
18. உளுந்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
19. பிரியாணி இலை - சிறிது
20. மஞ்சள் தூள் - சிறிது
21. உப்பு - தேவையான அளவு
22. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
23. கிஸ்மிஸ் - 10 எண்ணம்
செய்முறை :
1. காய்கள் அனைத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. இஞ்சி, பூண்டு, சோம்பு, கிராம்பு மற்றும் பட்டை போன்றவைகளை விழுதாக அரைத்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு ரவையை நன்கு வறுத்து எடுக்கவும்.
4. அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, பிரியாணி இலையைப் போட்டுத் தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் நறுக்கி வைத்த வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. அத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
7. அதில் நறுக்கி வைத்த காய்கள், மஞ்சள்தூள் மற்றும் புதினா சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
8. நன்கு கொதித்ததும், ரவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டியாகி விடாமல் கிளறி விடவும்.
9. பாத்திரத்தை மூடி, மிதமான நெருப்பில் சில நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்.
10. கடைசியாக ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கிஸ்மிஸ் , முந்திரி போட்டு வதக்கி ரவா கிச்சடியுடன் கலந்து கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.