குஸ்கா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பாஸ்மதி /சீரக சம்பா அரிசி - 2 டம்ளர்
2. பல்லாரி வெங்காயம் - 150 கிராம்
3. பச்சை மிளகாய் - 6 எண்ணம்
4. முந்திரிப்பருப்பு - 20 எண்ணம்
5. தேங்காய்ப் பால் - 1 டம்ளர்
6. இஞ்சி - 1துண்டு
7. பூண்டு - 10 பல்
8. எலுமிச்சை - 1 /2 பழம்
9. புதினா - சிறிது
10. ஏலக்காய் - 3 எண்ணம்
11. பட்டை -1துண்டு
12. கிராம்பு - 4 எண்ணம்
13. எண்ணெய்/வெண்ணெய் - 75 மி.லி.
14. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. பல்லாரி வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
2. பச்சைமிளகாயில் மூன்று மிளகாயை இரண்டாகக் கீறிவைக்கவும்.
3. இஞ்சி, பூண்டை அரைத்து வைக்கவும்.
4. பச்சைமிளகாய் 3, முந்திரிப்பருப்பு 10 ஆகியவற்றை விழுதாக அரைத்து வைக்கவும்.
5. தேங்காயை அரைத்துப் பால் எடுக்கவும்.
6. பட்டை, கிராம்பை வறுத்துப் பொடி செய்யவும்.
7. அரிசியை கல் நீக்கிக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
8. ஒரு பாத்திரத்தில் பாதி எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு சிவந்து முறுகும் வரை வதக்கி, எடுத்து வைக்கவும்.
9. மீதியிருக்கும் 10 முந்திரிப்பருப்புகளை வறுத்து எடுக்கவும்.
10. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், ஏலம் உரித்துப் போட்டுச், சிவந்ததும் கீறிய பச்சை மிளகாய் போடவும்.
11. சிறிது நேரத்தில், இஞ்சிப்பூண்டு விழுது போட்டு வதக்கி, பின் அதிலேயே, அரைத்த முந்திரி கலவை, உப்பு போட்டு, 4 டம்ளர் நீர், 1டம்ளர் தேங்காய்ப் பால் ஊற்றவும்.
12. அதில் எலுமிச்சைச் சாறு பிழிந்து விடவும்.
13.. நீர் கொதித்ததும், அரிசியைப் போடவும். 10 நிமிடத்திற்குள், அரிசி பாதி வெந்துவிடும். நீரும் சுண்டி அரிசியுடன் பிரட்டிக் கொண்டிருக்கும் போது, வறுத்து வைத்துள்ள, வெங்காயம், பட்டை கிராம்பு பொடி, புதினா, முந்திரி போட்டு கிளறிவிட்டு மூடி வைத்து வேக விடவும்.
14. சாதம் அடி பிடித்து விடாமல், குழைந்து போய் விடாமல் பார்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.