புளிச்சாதம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
புளிக் காய்ச்சல்
1. மிளகாய் வற்றல் - 12 எண்ணம்
2. மல்லி - 3 கரண்டி
3. வெந்தயம் - 2 தேக்கரண்டி
4. பெருங்காயம் - 1 சிறிய துண்டு
5. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
6. புளி - 100 கிராம்
7. உப்பு - தேவையான அளவு
தாளிக்க
8. நல்லெண்ணெய் - 100 மிலி
9. கடுகு - 1 தேக்கரண்டி
10. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
11. கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
12. பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
13. நிலக்கடலை - 50 கிராம்
14. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
செய்முறை :
1. மிளகாய் வற்றல், மல்லி, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை வெறும் வாணலியில் சூடு படுத்தி, வாசனை வரும் வரை வறுத்து, சிறிது மொரமொரப்பாகப் பொடி செய்யவும்.
2. புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்து வைக்கவும்.
3. புளிக்கரைசலுடன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருபு, கடலைப்பருப்பு, பெருங்காயம், நிலக்கடலை, இரண்டாகக் கிள்ளிய மிளகாய் வற்றல் ஆகியவற்றைப் போட்டு சிவந்ததும், புளிக்கரைசலை விட்டுக் கொதிக்க விடவும்.
5. சில நிமிடங்கள் கழித்து, நாம் திரித்து வைத்திருக்கும் பொடிகளைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கி, அதனுடன் உப்பு சேர்த்து, எண்ணெய் மேலே மிதந்து வரும் நேரத்தில் அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி விடவும்.
6. வேண்டிய அளவு சாதத்தை எடுத்து ஆற விட்டு ஒரு ஸ்பூன் பச்சை நல்லெண்ணெய் விட்டுக் கிளறிக் கொள்ளவும்.
7. அதனுடன் தேவையான புளிக் காய்ச்சல் சேர்த்துக் கிளறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.