நெல்லிக்காய் சாதம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சாதம் - 1 கோப்பை
2. பெரிய நெல்லிக்காய் - 6 எண்ணம்
3. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
4. கடுகு - 1/4 தேக்கரண்டி
5. உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
6. கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
7. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
8. பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
10. நெய் - 1 தேக்கரண்டி
11. நல்லெண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு
13. கறிவேப்பிலை - 2 கொத்து.
செய்முறை :
1. நெல்லிக்காயை பொடியாகத் துருவி, கொட்டையை எடுத்து விடவும்.
2. வேக வைத்த சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளவும்.
3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள் போட்டு தாளிக்கவும்.
4. அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளறி, சிறிது நேரம் (2 அல்லது 3 நிமிடம்) வதக்கியதும், நெல்லிக்காய் வாசம் வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்.
5. அடுப்பில் இருந்து இறக்கிய நெல்லிக்காய் கலவையுடன் ஆற வைத்த சாதம் சேர்த்து, சாதம் குலையாமல் நன்கு கிளறவும்.
6. தனியே சிறிது நெய்யில் பொட்டுக்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கிளறிய சாதத்துடன் சேர்த்து லேசாக கிளறி பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.