அரிசி மாவு வடகம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி – 1 கிலோ.
2. ஜவ்வரிசி – 200 கிராம்.
3. பச்சை மிளகாய் – 100 கிராம்.
4. எலுமிச்சம் பழம் – 3 (பெரியது)
5. பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி.
6. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. பச்சரிசி, ஜவ்வரிசி இரண்டையும் நன்கு சுத்தம் செய்து மாவரைக்கும் எந்திரத்தில் அரைத்து வாங்கவும்.
2. அடி கனமுடைய பாத்திரம் அல்லது பிரஷர் குக்கரில் 12 கப் தண்ணீர்விட்டு கொதிக்கவிட வேண்டும்.
3. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த மாவை அதில் மொத்தமாகக் கொட்டிக் கிளறவேண்டும்.
4. மாவு வெந்து நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து இறுக மூடிவைக்கவும்.
5. பச்சை மிளகாயைக் காம்பு நீக்கி, அத்துடன் உப்பு சேர்த்து மெல்லியதாக அரைக்கவும்.
6. அரைத்த மிளகாயைச் சிறிதளவு தண்ணீரில் கரைத்துப் பெரிய சக்கை இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும்.
7. எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
8. மிளகாய்க் கரைசல், எலுமிச்சைச் சாறு இரண்டையும் கிளறிய மாவில் கொட்டி நன்கு கலக்கவேண்டும்.
9. நல்ல வெயில் கிடைக்குமிடத்தில் வெள்ளைத் துணியை விரித்து வைக்கவும்.
10. கலக்கி வைத்த மாவை இடியாப்ப உலக்கில் அடைத்துத் தேவையான அச்சைப் பயன்படுத்தி விரும்பிய வடிவத்தில் வடகத்தைத் துணியில் பிழிந்து விடலாம்.
11. வெயிலில் 3 முதல் 5 நாட்கள் காய வைத்துப் பின்னர் அதைக் காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைக்கவும்.
குறிப்புகள்:
1. தேவையான போது எண்ணெய்யில் பொறித்து எடுத்துச் சாப்பிடலாம்.
2. நிறம், வாசனை விரும்புபவர்கள் தேவையானவற்றை வாங்கி மாவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.