இனிப்பு அப்பம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. புழுங்கல் அரிசி - 2 கப்
2. கோதுமை மாவு - 1 கப்
3. வெல்லம் - 3 கப்
4. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. புழுங்கலரிசியைக் கழுவி இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
2. வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுச் சூடாக்கிக் கரைந்தபின், வடிகட்டி நன்றாக ஆறிய பிறகு கோதுமை மாவுடன் சேர்க்கவும்.
3. இதை அரைத்த புழுங்கலரிசி மாவுடன் சேர்த்துப் பஜ்ஜி மாவு பக்குவத்திற்குப் பதமாகக் கரைக்கவும்.
4. ஒரு சிறிய வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும், எண்ணெய் பொங்காமல் இருக்கச் சிறிய நெல்லிக்காயளவு புளியைப் போட்டுக் கருத்ததும் எடுத்து விடவும்.
5. ஒரு சிறிய கரண்டியால் மாவை எடுத்துச் சூடான எண்ணெயில் விடவும். எண்ணெயில் மாவு ஊற்றியதும் முதலில் அடியில் தங்கி, மேலே மிதந்து வரும்.
6. திருப்பி விட்டு வெந்ததும் எடுத்து எண்ணெய் வடிவதற்காக ஒரு வலை தட்டில் வைக்கவும்.
7. ஒரு பேப்பரின் மேல் வைத்து அதிக எண்ணெய் உறிஞ்சப்பட்டதும் ஒரு அகலத்தட்டில் பரவலாக வைக்கவும்.
குறிப்பு: நன்றாக ஆறியதும் டப்பாவில் எடுத்து வைத்து இரண்டு நாட்கள் வரை சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.