இனிப்பு போளி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மைதா மாவு - 2 கப்
2. தேங்காய்த்துருவல் - 1 கப்
3. வெல்லம் (பொடித்தது) - 1 கப்
4. சுக்குப்பொடி - 1/2 தேக்கரண்டி
5. ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
6. நெய் - 5 தேக்கரண்டி
7. நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. மைதா மாவுடன், உப்பு, மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து, சிறிது சிறிதாக நீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து அதன் மேல் சிறிது நல்லெண்ணையைத் தடவி, குறைந்தது அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
2. வெல்லத்தில் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும்.
3. வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கெட்டியாகும் வரைக் கிளறி விடவும்.
4. பின்னர், அத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும். இதனைத் தேங்காய்ப்பூரணம் என்பர்.
5. அடுப்பில் தோசைக்கல்லை வைத்துச் சூடாக்கவும்.
6. வாழை இலைத்துண்டில் சிறிது எண்ணையைத் தடவி, உருட்டி வைத்திருக்கும் மாவை வைத்துத் தட்டி, அதன் மேல் சிறிது தேங்காய்ப் பூரணத்தை வைத்து மூடி, அதை திருப்பி வைத்து, விரல்களால் சப்பாத்தி போல் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, அதை சுற்றி சிறிது நெய்யை ஊற்றி, இரு புறமும் சிவக்கச் சுட்டெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.