தேங்காய் லட்டு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. துருவிய தேங்காய் - 2 கப்
2. பால் - 400 மி.லி
3. சர்க்கரை - 1/2 கப்
4. நெய் - 4 தேக்கரண்டி
5. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
6. உலர் திராட்சை - 10 எண்ணம்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
2. பால் நன்கு கொதித்து வந்ததும், தீயைக் குறைத்து வைத்து இரண்டு நிமிடங்கள் காய்ச்சிக் கொள்ளவும்.
3. ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் துருவிய தேங்காயைச் சேர்த்து கிளறி விட்டு வதக்கவும்.
4. தேங்காய் நன்றாக வறுபட்டு உதிரியாக வரும் பொழுது, நாம் முதலில் காய்ச்சிய பாலை அதனுடன் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கிளறி விட்டு வதக்கிக் கொள்ளவும்.
5. அதன் பிறகு சர்க்கரையை அதனுடன் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
6. சர்க்கரை உருகி தேங்காயுடன் நன்றாகக் கலந்து, ஊற்றிய பால் முற்றிலும் வற்றும் வரை நன்றாகக் கிளறி விடவும்.
7. பின் கடாயைக் கீழே இறக்கிக் குளிர வைத்து கொள்ளவும்.
8. மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி, முந்திரிப் பருப்பு மற்றும் உலர் திராட்சைகளைத் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
9. தேங்காய் கை பொறுக்கும் சூட்டிற்கு குளிர்ந்தவுடன், வறுத்த முந்திரிப்பருப்பு மற்றும் உலர் திராட்சையைச் சேர்த்து நன்றாகக் கலந்து விட்டு சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.