ரசகுல்லா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பால் - 3 லிட்டர்
2. வினிகர் - 50 மி.லி
3. சோள மாவு - 25 கிராம்
4. சீனி - 3 கிலோ
5. மைதா - 1 தேக்கரண்டி
6. உணவு நிறப்பொடி - 1 தேக்கரண்டி.
செய்முறை:
1. முதலில் பாலை நன்கு கொதி வரும் வரை காய்ச்சி இறக்கவும்.
2. காய்ச்சிய பாலுடன் 50 மில்லி வினிகரை 50 மி.லி தண்ணீரில் கரைத்துப் பாலுடன் சேர்க்கவும்.
3. இப்போது பால் திரிந்து பஞ்சு பஞ்சாகத் திரண்டு வரும். அப்போது சிறிது தண்ணீரை அதில் ஊற்றி ஒரு கரண்டியால் இலேசாகக் கிளறிவிடவும்.
4. தற்போது பால் திரிந்து தனியாகவும், தண்ணீர் தனியாகவும் இருப்பதை நாம் பார்க்கலாம்.
5. தண்ணீரைத் தனியாக எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். (அடுத்தடுத்த முறைக்கு பாலை திரியச் செய்ய வினிகருக்கு பதில் இந்த தண்ணீரை பயன்படுத்தலாம்)
6. திரிந்த பாலை ஒரு மெல்லிய துணியில் கொட்டி வடிகட்டிக் கொள்ளவும். நீர் முழுவதும் வடிவதற்காக அதனை அப்படியே கட்டித் தொங்கவிடவும்.
7. சுமார் ஒரு மணி நேரம் சென்றபின் அந்த துணியை அவிழ்த்துப் பார்த்தால், திரிந்த பால் நீர் வற்றி சற்று கெட்டியாகக் காணப்படும். அதனை மேலும் சற்று கெட்டியாக்க அத்துடன் சோளமாவைச் சேர்த்துப் பிசையவும்.
8.அத்துடன் நாம் விரும்பிய நிறத்தினைச் சேர்த்து பிசைந்து கொள்ளலாம். நல்லத் தரமான வண்ணத்தை சேர்க்கவும்.
9.பிசைந்து வைத்ததைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
10. மூன்று கிலோ சீனிக்கு ஒன்றே கால் லிட்டர் தண்ணீர் ஊற்றிப் பாகு காய்ச்சவும். பாகு கொதித்து வரும் போது அதில் கால் லிட்டர் பால் ஊற்றி மிதமான நெருப்பில் சூடுபடுத்தவும். மேலாகத் திரண்டு மிதக்கும் கசடுகளைக் கரண்டி கொண்டு எடுத்து விடவும்.
11. தெளிவான பாகில் மூன்றில் ஒரு பங்கினை ரசகுல்லா ஊறவைப்பதற்குத் தனியாக எடுத்து விடவும்.
12. பிறகு திரிந்த பாலில் இருந்து பிரித்து எடுத்த புளித்த தண்ணீரில் இரண்டு மேசைக்கரண்டி எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மைதாவைக் கரைத்து பாகில் சிறிது தெளிக்கவும்.
13. இப்போது பாகு நன்கு நுரைத்துப் பொங்கி வரும். பொங்கி வரவில்லையெனில் மேலும் சிறிது கரைசலைத் தயாரித்துத் தெளிக்கவும்.
14. நுரைத்து வரும் பாகில் உருட்டி வைத்துள்ள ரசகுல்லாக்களைப் போட்டு வேகவிடவும். ரசகுல்லாக்கள் அனைத்தும் பாகில் நன்கு வேக வேண்டும். அளவில் பெரியதாகவும், மிருதுவாகவும் மாறும் வரை கரண்டியால் அவ்வபோது கிளறிவிட்டு வேகவிடவும்.
15. பின்னர் அடுப்பில் இருந்து பாத்திரத்துடன் அப்படியே இறக்கி, பாகை அள்ளி அள்ளி ரசகுல்லாக்களின் மேல் விட்டுச் சற்று ஆறவிடவும். இப்படி செய்வதன் மூலம் ரசகுல்லா இன்னும் மிருதுவாக மாறும்.
16. அதன் பின்னர் ரசகுல்லாக்களை எடுத்து, முன்பு தனியே எடுத்து வைத்துள்ள பாகில் போட்டு ஊறவிடவும்.
17. சுமார் 4 மணி நேரமாவது ஊறிய பின்பு எடுத்துச் சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.