மைசூர் பாகு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு – 1 கப்
2. நெய் – 1 1 /4 கப்
3. எண்ணெய் – 3 /4 கப்
4. சர்க்கரை – 2 கப்
5. பால் - 1/4 கப்
6. சோடா உப்பு - 1சிட்டிகை.
செய்முறை:
1. கடலை மாவைக் கட்டி இல்லாமல் நன்கு சலித்துக் கொள்ளவும்.
2. ஒரு அகலமான தட்டில் நெய் தடவித் தனியாக வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை ஊற்றிக் காய வைத்துத் தனியாக வைக்கவும்.
4. அடி கனமான பாத்திரத்தில் நன்கு சூடு செய்து கொண்டு அதில் ஒரு கப் கடலை மாவைப் போட்டு வறுக்கவும்.
5. கடலை மாவின் பச்சை வாசனை போகும் வரை தீய விடாமல் சிவக்க வறுக்கவும்.
6. வறுத்த மாவில் சிறிதளவு நெய் மற்றும் எண்ணெய்யைச் சேர்த்து நன்றாக கலந்து தனியே வைக்கவும்.
7. அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து சூடு செய்யவும். சர்க்கரை நன்கு கரைந்ததும் வடிகட்டியைப் பயன்படுத்தி தூசி இல்லாமல் நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.
8. சர்க்கரைப்பாகு கம்பிப் பதத்திற்கு வரும் வரை நன்றாகக் கலக்கவும்.
9. பிறகு அதில் நெய் மற்றும், எண்ணெய் சேர்த்துக் கலந்து வைத்துள்ள கடலை மாவை ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
10. கடலை மாவு முழுவதும் பாகில் கலந்தவுடன், சுட வைத்துள்ள நெய், எண்ணெய் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும்.
11. நெய், எண்ணெய் கலவையை முழுவதுமாக நன்கு கலக்கும் வரை கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும்.
12. மாவு பதம் கெட்டியானதும், நெய் பாத்திரத்தின் ஓரங்களில் வடிந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது சோடா உப்பு தூவி ஒரு கிளறு கிளறி, அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி விடவும்.
13. இறக்கிய கலவையை முன்பே நெய் தடவி தயாராக வைத்திருக்கும் தட்டில் கொட்டிச் சமமாகப் பரப்பவும்.
14. சிறிது மாவை எடுத்து விரலில் அழுத்தி பிடித்தால் விரலில் மாவு ஒட்டாமல் இருக்க வேண்டும். இதுதான் சரியான பதம்.
15. மாவைச் சமமாக பரப்பி சிறிது நேரம் ஆறவிடவும்.
16. நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் கழித்துத் தேவையான வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம்.
17. மாவு சூடு ஆறிய பின்பு மைசூர் பாகை எடுத்துத் தேவையான பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.