கல கலா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மைதா மாவு - 200 கிராம்
2. வெண்ணெய்- 1 தேக்கரண்டி
3. சீனி - 1/4 கப்
4. தேங்காய்ப்பால்(கெட்டியானது) - 1/4 கப்
5. உப்பு - தேவையான அளவு
6. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. மைதா மாவுடன் உப்பு, சீனி, வெண்ணெய், தேங்காய்ப்பால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துச் சப்பாத்தி மாவு போல் பிசைந்து, மென்மையாவதற்குக் குறைந்தது மூன்று மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
2. மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
3. முட்கரண்டியின் பின் பகுதியில் இந்த உருண்டையை வைத்து மெதுவாக ஒரு பக்கமாக அழுத்தி இழுக்கவும், பின் அதைக் கையில் எடுத்து இடது கை ஆட்காட்டி விரலின் நுனியில் சுருட்டவும். இரண்டு முனைகளையும் சேர்த்து மெதுவாக அழுத்தவும். (மோதிர அப்பளம் போல் இருக்கும்)
4. இப்படியே அனைத்து உருண்டைகளையும் சுருளாகச் செய்து, தட்டு ஒன்றில் பரப்பி வைக்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மாவுச்சுருள்களை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
6. ஒரு பாத்திரத்தில் சீனியுடன் சிறிது தண்ணீர் மட்டும் கலந்து அடுப்பில் வைக்கவும். சீனி கரையும் வரை நன்கு கிளறவும்.
7. சீனிப்பாகு நன்கு சூடேறி நிறம் பழுப்பு வெள்ளையாக மாறும்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
8. பொரித்தெடுத்த சுருள்களை அப்பாத்திரத்தில் போட்டு சீனிப்பாகுடன் நன்கு கலக்கவும். சூடாக இருக்கும் பாகு, சுருளைச் சுற்றி எளிதாகப் பற்றிப் பூத்து நிற்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.