விடுமுறை நாட்களைப் பயனுள்ளதாக்க முடியுமா?
வேணு சீனிவாசன்

விடுமுறை நாட்களின் உள்ளர்த்தத்தை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். விடுமுறை நாட்கள் என்பது எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறித்தனமாகப் பொழுதைக் கழிப்பதற்காகவோ அல்லது படுத்து உறங்குவதற்காகவோ மட்டுமில்லை. அதை உபயோகமாக பயன்படுத்தலாம். குடும்ப உறவுகளை வளர்ப்பதற்கும், பாரம்பரியமாக வரும் நல்ல பழக்கங்களை மீண்டும் புதுப்பிக்கவும் விடுமுறை நாட்களை உபயோகப்படுத்தலாம் என்பதை உணர்த்துங்கள்.
1. உங்கள் குடும்பத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம் என்பதை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகையின் போது பாட்டி, தாத்தா அத்தை மாமாக்கள் ஆகியோருடன் இருப்பது என்பது எவ்வளவு மகிழ்ச்சியானது என்பதைக் குழந்தை அறிந்து கொள்ள திட்டம் தீட்டுங்கள்.
2. சில விடுமுறைகளில் சொந்த ஊருக்குச் செல்வது, கிராமத்தில் நடக்கும் திருவிழாவுக்குச் செல்வது, மிகவும் நெருங்கிய நண்பரின் கிராமத்திற்குச் செல்வது, அருகில் இருக்கும் பாரம்பரியம் மிகுந்த கோவிலுக்குச் செல்வது, நீர்தேக்கம் மற்றும் அணைகள் ஆகியவற்றுக்கு செல்வது போன்றவை குழந்தைகளுக்கு மிகுந்த உற்சாகத்தை தரும்.
3. ஒரே மாதிரியான வேலையை ஆண்டு முழுவதும் செய்து அலுத்துப் போன கணவனுக்கும் மனைவிக்கும் கூட இத்தகைய வித்தியாசமான விடுமுறை நாட்கள் வாழ்க்கையில் ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தும். ஊருக்கு அருகில் இருக்கும் தோப்பு மற்றும் பண்ணை வீடுகளுக்குச் சென்று ஒரு நாள் விடுமுறையைக் கழிப்பது குழந்தைகள் மனதில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இயற்கையான சூழ்நிலை, அடர்ந்த மரங்கள், கண்களைக் கவரும் செடிகொடிகள், மலர்கள், பறவைகள் ஏற்படுத்தும் பல்வேறு சத்தம் போன்றவை கவலையை மறக்கச் செய்வதோடு, மனதிற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
4. உங்கள் குடும்பத்திற்கு என்று எந்தவிதமான பழக்க வழக்கமும் இல்லையா அதற்காக கவலைப்பட வேண்டாம். நீங்கள் ஆண்டுக்கு ஒருமுறை திரௌபதி அம்மன் கொடை விழாவுக்குச் செல்லவோ அல்லது தீமிதி விழாவிற்கு குடும்பத்தினருடன் செல்வதையோ வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இத்தகைய புதிய வழக்கம் குழந்தைகளுக்கு ஒரு புதிய மகிழ்ச்சிப் பாதையை திறந்து விடும் என்பதில் சந்தேகமேயில்லை.
குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்
1. விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கின்ற அதே நேரத்தில் மனதிற்கு திருப்தியைத் தருவதாகவும் அதை மாற்றிக் கொள்ளலாம். நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் குடும்பங்கள் எல்லோரும் விடுமுறையை இனிமையாகக் கழிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்யலாம். இவ்வாறு ஒரு பொது இடத்தில் அனைவரும் கூடும் போது குழந்தைகள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும், நட்பு கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.
2. குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் நேரத்தில், விட்டுக் கொடுத்தல், மற்றவரிடம் உள்ள நல்ல பழக்கங்களை அறிந்து கொள்ளுதல், மற்றவர்களுக்கு கீழ்படிதல், இணைந்து விளையாடுதல், சொல்லித்தருதல், உதவுதல், போன்ற நல்ல குணங்கள் வர வாய்ப்பு அதிகம். நாம் இவற்றை வீட்டில் சொல்லிக் கொடுப்பதை விட அவர்களாகவே கற்றுக் கொள்ள இது போன்ற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது மிக நல்ல பலன்களை விரைவில் கொண்டு வந்து சேர்க்கும்.
3. இது போலவே விடுமுறை நாட்களில் குழந்தைகளை அநாதை ஆசிரமம், சேவை மையங்கள், முதியோர் இல்லங்கள் போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து, சுட்டித்தனம் செய்யும் குழந்தைகள், அடம்பிடித்து , அழுது காரியங்களை சாதித்துக் கொள்ளும் பிடிவாத குணம் கொண்ட குழந்தைகள், பணத்தின் அருமை தெரியாமலே வளரும் குழந்தைகள் ஆகியோரின் மனதை மாற்ற இது மிகவும் அருமையான, ஆக்கப்பூர்வமான வழியாகும்.
4. ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் இல்லாமல் ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கும் மற்றவர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நமது அன்பும் அனுசரணையும் தேவைப்படுகிறது. அவர்களுக்கு நம்மால் முடிந்த பண உதவியோ அல்லது பொருள் உதவியோ செய்ய வேண்டும். இதனால் நம் மனதிற்கு நிம்மதி ஏற்படும். இது நமது கடமை. மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ்வது உயர்ந்த வாழ்க்கை போன்ற நல்ல விஷயங்களை குழந்தைகள் அறிந்து கொள்ள இதனால் வழி ஏற்படும்.
5. நாம் தேவையில்லாமல் துணிகளுக்கும், விளையாட்டு சாமான்களுக்கும் செய்யும் அநாவசிய செலவை மிச்சம் பிடித்தால் அந்தப் பணத்தில் நான்கு குழந்தைகள் ஒரு நாளைக்கு வயிறார சாப்பிடலாம் என்பதை நமது குழந்தைகளுக்கு அநாதை ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்வதன் மூலமாக புரியவைக்கலாம்.
6. இதனால் வீட்டில் ஏற்படும் அநாவசியமான தேவையற்ற செலவுகள் குறையும். மற்ற குழந்தைகளின் தினசரி வாழ்க்கையே இவ்வளவு போராட்டமாக இருக்கிறது. இதில் நாம் ஆடம்பரமாக வாழ அநாவசிய செலவுகள் செய்வது தவறு என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.
7. யானையின் வாயில் செல்லாமல் சிதறி விழுகின்ற சோற்று உருண்டையால் ஆயிரக்கணக்கான எறும்புகள் பசி இல்லாமல் வாழும். இது தான் இயற்கை நியதி என்பதைப் போல, வீண் ஜம்பத்திற்காகவும், வெற்று ஆடம்பரத்திற்காகவும் நாம் செலவழிப்பதில் ஒரு பகுதியை முதியோர் இல்லங்களுக்கும், குழந்தைகள் காப்பகத்திற்கும் தருவதால் அங்கே வாழ்கின்றவர்களது வாழ்க்கை ஒளிமயமாகும் என்பதை இத்தகைய விடுமுறை பயணங்கள் மூலமாக நாம் புரியவைக்க முடியும். இது நமது குழந்தைகளின் வாழ்க்கைப் பாதையில் பல வெளிச்சப் புள்ளிகளை அள்ளி வீசும். அநாதை இல்லங்களை பார்வையிடும் ஆயிரக்கணக்கான குழந்தைகளில் இருந்து ஒரே ஒரு அன்னை தெரசா, ஒரே ஒரு ஏழைகளுக்காக வாடும் வள்ளலார் தோன்றினால் கூட போதும் அல்லவா ? அது நமது வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமைதானே.
சேவை மனப்பான்மை ஏற்படுத்தும் நன்மைகள்
1. தன்னிடம் இருக்கின்ற ஒரு பொம்மையை வசதி குறைந்த அல்லது பெற்றோரை இழந்த மற்றொரு குழந்தைக்கு கொடுப்பதன் மூலமாக சேவையின் பெருமையை நமது குழந்தை கற்றுக் கொள்கிறது.
2. நாம் விளையாட்டிற்காக அல்லது பொழுது போக்கிற்காக செலவழிக்கும் நேரத்தையும், பணத்தையும் மற்றவர்களுக்கு உதவிசெய்ய செலவழிப்பது மிகவும் உயர்ந்தது. நமது உடனடித் தேவைகளை விட மற்றவர்களின் பசியை , கண்ணீரைப் போக்குவது மிகவும் உயர்ந்த செயல் என்பதை இதன் மூலமாக குழந்தைகள் வெகு எளிதாக கற்றுக் கொள்வார்கள்.
3. வறுமையைத் தாங்குதல், தேவையைக் குறைத்தல், செலவழிப்பதற்கு முன் அதன் அவசியம், போன்ற குணங்களை குழந்தைகள் கற்றுக் கொள்ள அவர்களை நாம் சமூகசேவைகள் செய்ய அனுமதிக்க வேண்டும்.
4. பலதரப்பட்ட வாழ்க்கைத் தரங்களில் உள்ள மனிதர்களுடன் அவர்கள் பழக இது வழி ஏற்படுத்தும். ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த சமுதாயம், கவனிக்கப்படாதவர்கள், வசதி வாய்ப்புக்களைப் பெறாதவர்கள், கல்வி அறிவு பெறாதவர்கள், வயதானவர்கள், பெற்றோர்களினால் ஒதுக்கப்பட்ட குழந்தைகள், பள்ளிக்குச் செல்லும் வாய்ப்புப் பெறாத குழந்தைகள், வயதானவர்கள் என்று பலதரப்பட்ட மக்களை அவர்கள் சந்திக்கும் போது வாழ்க்கையின் பலவிதமான சூழ்நிலைகளையும், துன்பங்களையும், தொல்லைகளையும் அவர்கள் அறிந்து கொள்ள முடியும்.
5. இதன் மூலமாக நாம் இவர்களை விட நல்ல நிலையில் இருக்கிறோம். நமக்கு உதவி செய்ய பெற்றோர், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் இருக்கிறார்கள். நாம் மிகவும் அதிருஷ்டம் செய்தவர்கள். நம்மிடம் இருக்கின்ற வசதிகளை வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும். இவற்றை ஏற்படுத்திக் கொடுத்த கடவுளுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவிக்கவேண்டும். இல்லாதவற்றை பெரிதாக நினைத்து சலிப்படைவதோ, எரிச்சல் அடைவதோ, குறை கூறுவதோ அல்லது துன்பப்படுவதோ, அதற்காக குடும்பத்தில் சச்சரவு செய்வதோ கூடாது என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.
6. மேலும் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் எனவே நம்மால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு உடலாலும், பொருளாலும், பணத்தாலும் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் அவர்களது மனத்தில் ஆழமாகப் பதியும். இது குழந்தைகள் வளர வளர தானும் வளர்ந்து அவர்களை பெரிய சேவைகளில் ஈடுபட்டு செயலாற்ற வைத்துவிடும்.
7. எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் ஏழைகளுக்கு, முதியோர்களுக்கு, ஆதரவு இல்லாத குழந்தைகளுக்கு உதவி செய்யும் போது உதவி பெற்றவர்களின் முகம் மகிழ்ச்சியால் மலரும். அதை பார்க்கும் போது நமது மனமும் மகிழ்ச்சி அடையும். இதை ஒரு முறை ஓரு குழந்தை அனுபவித்து விட்டால் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான விலைமதிப்பே இல்லாத நேரம் அது தான் என்பதை தெரிந்து கொள்ளும். அதற்குப் பிறகு அந்தக் குழந்தை தன்னால் முடிந்த உதவிகளை தேவைப்பட்டவர்களுக்குச் செய்யத் தயங்காது.
8. உங்களது தகுதிக்கும், வசதிக்கும் ஏற்ற வகையில் ஒரு சேவை மையத்தையோ அல்லது அநாதை விடுதியையோ தேர்வு செய்து குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். இதனால் அந்த விடுதியில் உள்ளவர்கள் பயனடைவதோடு, உங்கள் குழந்தைகளும் மிகுந்த பயனடைவார்கள். அவர்கள் விலைமதிக்க முடியாத வாழ்க்கைப் பாடங்களை விளையாட்டாகக் கற்றுக் கொள்வார்கள்.
இதனால் நீங்கள் வசிக்கும் சமுதாயத்திற்கும் நன்மைகள் ஏற்படும். உங்களைப் பார்த்து மற்ற குடும்பத்தினரும் இந்த நல்ல வழியைப் பின்பற்ற வாய்ப்புக்கள் உருவாகும்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.