போதி மரத்துக்கு அடியில் 449 நாட்கள் அமர்ந்து புத்தர் தியானம் செய்து அறம், ஒழுக்கம், மரணம், சொர்க்கம், நரகத்தை பற்றிய உயர்ந்த ஞானம் அடைந்தார். அந்த உயர் ஞானத்தின் விளைவாக புத்தருக்கு 40 பற்கள் முளைத்திருந்தன. பிறவியிலேயேச் சிலருக்கு வழக்கமான பற்களின் எண்ணிக்கைக்கு குறைவாக பற்கள் முளைக்கும். இதனை ‘காணாமல் போன பற்கள்’ (Hypodontia) என்பர். ஆறுக்கும் மேற்பட்ட பற்கள் (அறிவுப் பற்கள் தவிர்த்து) முளைக்காமல் போனால், அதனை, ‘பற்கள் குறை’(Oligodontia) என்பர். ஒட்டு மொத்தமாக பற்களே முளைக்காமல் போயிருந்தால் அதனை, ‘பல் முளையாமை’ (Anodontia) என்பர். இம்மாதிரியான பல் பிரச்சினைகளுக்கு மரபியல் காரணங்களும் சுற்றுச்சூழல் காரணங்களும் ஏதுவாய் அமைந்திருக்கும்.
32 பற்களை விட அதிகமாக யாருக்காவது கூடுதலாக பற்கள் முளைத்தால் அதனை, ‘பற்கள் மிகைப்பு’ (Hyperdontia) என்பர். கூடுதல் பல்லை ‘மிகையான பற்கள்’ (Super Numery Teeth) என அழைப்பர். மேல்தாடையிலோ, கீழ்தாடையிலோ கூடுதலாக முளைத்திருக்கும் பல்லை நிரந்தரமாக அகற்றுதலேச் சிறப்பு. உலகமக்களின் 3.8 சதவீதம் பேர்களுக்குக் கூடுதல் பற்கள் முளைக்கின்றன. சிலருக்குக் கீழ்வரிசை முன்னம் பற்களில் இரட்டைப் பற்கள் (Double Teeth) முளைத்திருக்கும். இரட்டைப் பற்கள் இரண்டு வகைப்படும். அவை;
1. இரட்டைப்பல் (Germinated Teeth) - பல் கிரீடம் பிரிந்திருக்கும் வேர்ப்பகுதி பங்கிடப்பட்டிருக்கும்.
2. ஒன்றாகிய பல் (Fused Teeth) – இரட்டைபற்கள் இணைந்து ஒரே பல்லாய் காட்சியளிக்கும்.
பல் கவிதை
* நீ புன்னகைக்க
மறந்த நாட்களில்
உன் 32 பற்களும்
கோரைப் பற்களாக
மாறி விடுகின்றன
கண்மணி!
- முகமது பாட்ஷா
|
இதேப் போன்று, மனிதர்களுக்குப் பற்களே இல்லாதிருந்தால் என்னவாகும்?
1. உணவு உண்ணுதல் மற்றும் செரிமானம் – பற்களே உணவை உடைத்தும் நொறுக்கியும் செரிமானத்துக்கு தேவையான கூழ் ஆக்குகின்றன. பற்கள் இல்லை என்றால் உணவில் சத்து குறைபாடு ஏற்படும்.
2. பேச்சு - தகவல் தொடர்பில் பற்களும் நாக்கும் உள்வாய் பகுதியும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பற்கள் இல்லாவிட்டால் தகவல் தொடர்பில் மாபெரும் வீழ்ச்சி ஏற்படும்.
3. முக அமைப்பு - பற்கள் இல்லை என்றால் தாடை எலும்புகள் சுருங்கி முகத்தோற்றம் அருவெறுப்பாகும்.
4. வாய் ஆரோக்கியம் - பற்கள் இல்லாவிட்டால் ஈறு நோய்கள் ஏற்படும்.
5. சமூக மனோதத்துவத் தாக்கம் - பல் இல்லாமை சுயமதிப்பையும் சமூக தொடர்புகளையும் பாதிக்கும்.
6. பரிணாம பாதிப்பு - பல் இல்லாத சமுதாயத்தில் உணவு உண்ணும் முறை மற்றும் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும்.
மொத்தத்தில் மனிதருக்கு பல் இல்லை என்றால் அது சரிவிகித சத்துணவு, தகவல் தொடர்பு, முக அழகு, சமூகத் தொடர்பு முதலியவற்றில் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தும். அத்துடன் உயிரியல் மற்றும் மனோதத்துவச் சவால்களையும் அது உருவாக்கும்.
கோழி, கிளி போன்ற சில பறவைகள் அலகுகளால் இரையை உடைத்து விழுங்குகின்றன. இதேப் போன்று ராட்சச எறும்புத்தின்னி, நீளநாக்குகளின் உதவியுடன் எறும்புகளையும் கரையான்களையும் சுருட்டி விழுங்குகிறது. ஆமைகள், தாடை இல்லாத விலாங்கு, ஈல் போன்ற விலங்கு, கடல் பசு, மெல்லுடலிகளில் ஆக்டோபஸ் என்று எத்தனையோ உயிரினங்கள் பற்களின்றி உயிர் வாழ்கின்றனதே என்று நாம் நினைக்கலாம். அந்த உயிரினங்களின் வாழ்க்கைக்கேற்றபடி, அதற்கான பற்கள் தேவை மாற்றம் பெற்றிருக்கிறது.
ஆனால், மனிதர்கள், ஈறுகளை வைத்து உணவை மென்று தின்ன முயன்றால் ஏராளமான ஈறு நோய்கள் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. பற்கள் இல்லாவிட்டால் இதய நோய், நீரழிவு நோய், எலும்பு பொடிவு நோய் வரும் வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.
ஷான் பாப்டிஸ்ட் லாமார்க் என்பவர், ‘பயன் மற்றும் பயனில்லாமை கருத்தியல்’ (Use and Disuse Theory) ஒன்றை உருவாக்கினார். இந்தக் கருத்தின்படி, ஓர் உயிர்னம் தொடர்ந்து தன் உடலுறுப்புகளில் ஒரு உறுப்பைப் பயன்படுத்தாமலேப் பல தலைமுறைகளைக் கடந்தால், பயன்படுத்தாத அந்த உறுப்பு அருகிப் போகும்.
மேலும் அவர், ஒட்டகச்சிவிங்கிகள் இரைக்காக தங்கள் கழுத்தை நீட்டி நீட்டி நீண்ட கழுத்தை பெற்றுள்ளன என்கிறார். நீந்தும் பறவைகளின் கால் விரல்களுக்கிடையே கால் ஜவ்வு படர்ந்திருப்பதை ஆதாரமாகக் காட்டினார். தொடர்ந்து, நம் உணவுப் பழக்கம் மாறிக்கொண்டே வருவதால் கடித்து உடைத்து நொறுக்கித் தின்னும் பற்கள் தேவையில்லாமல் போகின்றன. அதனால் இன்னும் 500 முதல் 1000 ஆண்டுகளில் நமக்கு 32 பற்களுக்கு பதில் 20 பற்கள் மட்டுமே முளைக்கும் நிலை வரும் என்று கருதப்படுகிறது.
பற்கள் இல்லாவிட்டால் அழகு இல்லையா?
ஆர். அப்துல் பத்தாக், உக்கடம்
பொக்கைவாய் தாத்தாக்கள் சிரிப்பு பார்க்கக் கண்கொள்ளக் காட்சிதானே...! பற்கள் இல்லாத நிலையும் வயதிற்கேற்ற அழகுதானே...? செயற்கைப் பல் கட்டிக் கொள்ளாமல் இயற்கையோடு ஒத்துப் போகலாமே...?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
பொக்கை வாய் சிரிப்பு, காதலுக்கோ காமத்துக்கோ உதவாது. பொக்கைவாய் என்பது முற்றிய வயோதிகத்தின் சமாதான வெள்ளைக்கொடி. எதனிலும் அழகைக் காணலாம், எதிலும் அவலட்சணத்தையும் காணலாம். அது அவரவர் தனிப்பட்ட பார்வை மற்றும் மனோபாவம் சார்ந்தது. பொக்கை வாயாய் இருந்து விட்டால் வாழ்நாள் குறுகிப் போகும். செயற்கைப் பற்கள் கட்டி வாழ்ந்தால் வாழ்நாள் அதிகரிக்கும் இது மருத்துவப் பார்வை.
|
இனி, பால்பற்கள் முளைக்கும் போது, பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும் போது, நிரந்தரப் பற்கள் விழுந்து செயற்கைப் பற்களைப் பொருத்தும் போது ‘யூஸ் அண்ட் டிஸ்யூஸ் தியரி’யின் படி 32 பற்கள் இருபதாய் குறையும் போது, எந்த நிலையிலும் ஒரு பல் மருத்துவரின் மருத்துவ உதவி தேவையாகவே இருக்கும். தற்போதைய நிலையில், பல் இல்லாத மனிதர்களைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
இறைவனின் உன்னதமான படைப்புகளில், மனிதர்களுக்கு அமைந்திருக்கும் பற்கள், மனிதர்களின் உணவுச் செரிமானம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுவதுடன், முக அழகையும் அதிகரித்துக் காண்பிக்கிறது என்றால அது மிகையில்லை.