ரெய்கி என்கிற வார்த்தையைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ரெய்கி என்பது ஒரு மாற்று மருத்துவம். அது உடல் வழியிலான, உணர்வு வழியிலான, மன வழியிலான நோய்களைக் குணப்படுத்துகிறது என்கின்றனர். ஜப்பானியப் புத்தத் துறவியான மிகாவோ உசாய் (1865-1926) என்பவர் முதன் முதலில் ரெய்கியை உருவாக்கினார். ரெய் (Rei) என்றால் உலகம் கி (Ki) என்றால் உயிர்களின் சக்தி. மனித உயிர்கள் உலகம் மற்றும் இயற்கை சக்திகளைச் சார்ந்து வாழ்வதாகக் கூறுகிறது. ரெய்கி ஒரு ஆற்றல் சார்ந்த குணப்படுத்தும் மருத்துவ முறை என்கின்றனர். மிகாவோ உசாய் தன் வாழ்நாளில் 2000 பேருக்கு ரெய்கியை கற்றுக் கொடுத்தார்.
ரெய்கி மருத்துவர் மருத்துவம் பார்க்கும் போது மந்திரக்கோல் வைத்திருப்பாரா? வினோதமான மொழியில் மநதிரங்கள் உச்சரிப்பாரா? என்றால், இரண்டும் இல்லை. ரெய்கி என்கிற என்கிற கூடுதல் மருத்துவச் செய்முறையில் ரெய்கி மருத்துவர் நோயாளியின் உடலை மெதுவாகத் தொட்டு குணப்படுத்துதலை விரைவுப்படுத்துவார். தொடுதலின் வழியிலான இம்முறை, ஒரு தாய் தன் குழந்தைகளைத் தொட்டுத் தூக்குவது, ஒரு குழந்தை தன் தாயைத் தொட்டுக் கொள்வது, காதலர்கள் ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்வது, மிருகங்கள் ஒன்றுக்கு ஒன்று மூக்கால் உரசி கொள்வது, ஆங்கில முறைப்படி மக்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கொள்வது, தொடுதலின் மகத்துவமான சான்றுகளாகக் கொள்ளப்படுகின்றன.
ரெய்கி மருத்துவர் தன் உடல் ஆற்றலை நோயாளிக்கு இடமாற்றம் செய்கிறார். ரெய்கி மருத்துவரின் கைகள் நோயாளியின் பல உடல் பாகங்களுக்கு ஒரு படவருடி (Scanner) போலப் பயணிக்கின்றன. ரெய்கி மருத்துவரின் ஆற்றல் நோயாளி இயற்கையாக குணமாவதை ஊக்குவிக்கிறது. ரெய்கி மருத்துவம் உடலின் சமநிலையைப் பத்திரப்படுத்துகிறது. ரெய்கி மருத்துவம், உடல் ஆற்றல் தங்கு தடை இல்லாமல் நதி போல் ஓட ஊக்குவிக்கிறது.
பல் கவிதை
* நீ சிரிக்கும் போது
லட்சம் பூக்கள் மலர்கின்றன
நிறுத்தி விடாதே,
காதல் தேனீக்களின்
தேன் நயாகரா
தொடர்ந்து கொட்டட்டும்
- முகமது பாட்ஷா
|
ரெய்கி மருத்துவம் கீழ்க்காணும் நோய்களை நீக்கி நலம் பெறச் செய்யும் என்று சொல்லப்படுகிறது.
1. மாரடைப்பு (Heart Attack)
2. உள் மூலம், வெளி மூலம், பவுத்திர மூலம் (Hemorrhoids)
3. விக்கல் (Hiccups)
4. மூக்கில் இரத்தம் ஒழுகுதல் (Nose Bleed)
5. நுரையீரல் காற்றுக்குமிழி அடைப்பு நோய் (Emphysema)
6. பராகச் சுரப்பி பிரச்சனைகள் (Prostate Problems)
7. விரி சுருள் சிரை நோய் (Varicose Problems)
ரெய்கி மருத்துவம் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்துகிறது என்பதற்கு அறிவியல் முறையிலான ஆதாரங்கள் உண்டா? என்று கேட்டால், இல்லை.
ரெய்கி மருத்துவம் போன்றே, உலகில் பல மாற்று மருத்துவ முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை;
1. குத்தூசி மருத்துவம் (Accupuncture)
2. ஹோமியோபதி (Homeopathy)
3. ஆயுர்வேதம் (Ayurvedic)
4. சித்த மருத்துவம் (Siddha)
5. மலர் மருத்துவம் (Flower Medicine)
6. இயற்கை மருத்துவம் (Naturopathy)
7. கைநுட்பச் சிகிட்சை (Manual Theraphy)
8. வர்ம மருத்துவ முறை (Chiripractic)
9. மூலிகை மருத்துவம் (Herbal Medicine)
10. உடலைப் பிடித்து விடுதல் (Massage)
11. டாய் சி சீன உடற்பயிற்சி மருத்துவம்.
மேற்காணும் அலோபதி தவிர்த்த மாற்று மருத்துவ முறைகளில் ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் போன்ற மருத்துவ முறைகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்டு, மருத்துவ முறையினைப் பொதுமக்களிடையேப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. மற்ற மருத்துவங்கள், அனுபவத்தின் வழியில், மக்களின் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன.
இம்மாற்று மருத்துவ முறையினை புதுயுக மருத்துவம், பாவனை மருத்துவம், வழக்கத்துக்கு மாறான மருத்துவம், முழுமையான மருத்துவம், இழை விளிம்பு மருத்துவம், மரபுசாரா மருத்துவம் என்று பல பெயர்களில் அழைக்கின்றனர்.
சரி மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றாக இருக்கும் ரெய்கி மருத்துவத்துக்கும் பல் மருத்துவத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்துப் பார்ப்போம்.
இந்திய மருத்துவக் குழு ரெய்கி மருத்துவத்தை ஒரு முழுமையான மருத்துவச் சிகிச்சையாக அங்கீகரிக்கவில்லை. ரெய்கி மருத்துவம் ஒரு ‘மருந்து போலி விளைவு’ என்றேக் கருதப்படுகிறது. ரெய்கி என்பது, பொதுவாக ஒரு பணக்கார மருத்துவம் என்றேச் சொல்லலாம். இம்மருத்துவ முறையில் தனி அமர்வுக்கு அதிகக் கட்டணமும் கூட்டு அமர்வுக்கு குறைவான கட்டணமும் பெறப்படுகிறது.
ரெய்கி மருத்துவ முறையினை,
1. மரபு வழியிலான ஜப்பானியர் ரெய்கி
2. மேற்கத்திய முறை ரெய்கி
என்று இரண்டாக வகைப்படுத்துகின்றனர்.
ரெய்கியை ஒரு குணப்படுத்தும் ஆற்றல் முறையாக பல் மருத்துவத்தில், பல் மருத்துவத்துக்கு முன்னும், மருத்துவத்தின் போதும் மருத்துவத்துக்குப் பின்னும் பயன்படுத்தப்படுகிறது.
ரெய்கி பல் மருத்துவத்தில் வலி மற்றும் பதட்டத்தை தணிக்க, நலமடைவதை விரைவுப்படுத்த, ஈறு நோய்களை மட்டுப்படுத்த, குளிர் புண்களை துரத்தியடிக்க உதவுகிறது. பல் மருத்துவத்தில் ரெய்கி மன அமைதி, ஆறுதலை வழங்குவதாகப் பல் நோயாளிகள் நம்புகின்றனர்.
புத்தகம் எழுதுவது கூடுதல் தகுதியா?
பி. அகமது ஷரீப், மதுரை.
ஒரு பல் மருத்துவர் மருத்துவம் பற்றி தமிழில் புத்தகம் எழுதுவது, அவருக்கான கூடுதல் தகுதியா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
தான் கற்றுக் கொண்டதை பிறருக்குச் சொல்லித் தருவதும், அதனை நூலாக்கம் செய்து தருவதும் மிகச் சிறந்த பணியாகும். அவர் கல்வி நிறுவனத்திலும், அனுபவத்திலும் கற்றுக் கொண்டதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதையும், நூலாக வெளியிடுவதையும், அவருக்கான கூடுதல் தகுதி என்று நினைப்பதை விட, நமக்கான கூடுதல் உதவி என்றேச் சொல்லலாம். பொதுவாக, மருத்துவம் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆங்கில மொழியிலேயே அதிக அளவில் இருக்கின்றன. அதனைத் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துப் புத்தகமாகத் தருவதும், தன்னுடைய பணி அனுபவங்களுடன் தொழில்நுட்பங்களைப் புதிய புத்தகமாகத் தருவதும் வரவேற்கத்தக்கதே. கதை, கவிதை எழுதுவதை விட, மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான நூல்கள் எழுதுவது மிகக் கடினமானது. மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான புத்தகம் எழுதுவதற்கு, தான் கற்றுக் கொண்டதைக் கடந்து, கூடுதல் தகவல்களுக்கான தேடல்கள், மொழியறிவு, எளிய முறையில் விளக்குதல் என்று எத்தனையோ திறன்களும் தேவையாக இருக்கிறது. அதனைச் செய்வது உண்மையில் அவருக்கான கூடுதல் தகுதி என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமிருக்க முடியாது.
|
இந்தியாவில் ரெய்கி மருத்துவம் அங்கீகரிக்கப்படாத நிலையில், அதனைப் பல் மருத்துவத்தில் பயன்படுத்துவது சரியா? என்று கேள்வி எழலாம்.
உலகில் குறைந்தது பத்து லட்சம் ரெய்கி மருத்துவர்கள் வரை உள்ளனர். ரெய்கி பல் மருத்துவம், கூட்டாண்மை நிறுவனமாகச் (Corporate) செயல்படும் பல் மருத்துவமனைகளில் ரெய்கி மருத்துவ முறை குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகிறது.
ரெய்கி மருத்துவம் மட்டுமில்லாது, நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் எந்தவொரு முறையையும் பல் மருத்துவத்தில் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. இருப்பினும், பல் மருத்துவத்தினை முறையாகச் செய்திடுவது இங்கு அவசியமாகிறது. உதாரணமாக, நோயாளியிடம் அன்புடன் பேசி, அவரின் கருத்தறிந்து செயல்படல் அவரின் நம்பிக்கைக்கு ஆதாரமாக இருக்கும்.