இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் பல் சொத்தையாலும், 85 சதவீதம் பேர் ஈறு நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பற்சொத்தையும், ஈறு நோய்களும் வராமல் தடுக்க, பல் மருத்துவம் உதவுகிறது. அதற்கு அரசு அமைப்புகளும் தனியார் அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டுவது அவசியமாகிறது.
இந்திய மக்களிடையே பல் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு மிகமிகக் குறைவு. இந்திய மக்களில் 23.96 சதவீதம் பேர் மட்டுமே ஆண்டுதோறும் பல் மருத்துவரிடம் சென்று, தங்களது பற்கள் குறித்து நுண்ணாய்வு (Check Up) செய்து கொள்கின்றனர். தென்னிந்தியாவில் 30.02 சதவீதம் பேர் பற்கள் குறித்து நுண்ணாய்வு செய்து கொள்கின்றனர்.
இந்திய மக்களிடையேப் பல் மருத்துவம் தொடர்புடைய விழிப்புணர்ச்சி ஏன் குறைவாக இருக்கிறது?
* ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று, பற்கள் தொடர்பாக நுண்ணாய்வு செய்து கொள்வதற்கான செலவு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, கிராமத்து மக்களின் கீழ்நிலையிலான பொருளாதார நிலை பல் மருத்துவச் செலவிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.
* பொருளாதாரத்தில் வசதியுடையவர்களிடம், பற்களைப் பாதுகாக்க, ஆறு மாதத்துக்கு ஒரு முறை பல் மருத்துவமனைக்குச் சென்று நுண்ணாய்வு செய்து கொள்ள வேண்டுமென்கிற ஆர்வமும் விழிப்புணர்ச்சியும் இல்லை.
* தங்கள் உடல் நிலையில் கவனம் கொள்பவர்கள், பல்லும் உடலின் ஒரு பகுதிதான் என்று கருதுவதில்லை. மேலும், பல் வலி வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலையில் இருக்கின்றனர்.
* பல்லிற்கு இயற்கை வைத்தியங்களில் பார்த்துச் சரி செய்துவிடலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
* மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பல் மருத்துவர்கள் இல்லை.
* நகர்ப்பகுதிகளில் பல் மருத்துவமனைகள் அதிக அளவில் இருக்கின்றன. கிராமப்பகுதிகளில் பல் மருத்துவமனைகள் இல்லை.
* அரசு மருத்துவமனைகளில் பல் மருத்துவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது.
* பற்கள் நுண்ணாய்வு செய்வதற்கான பல் மருத்துவர்களின் கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது.
என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
பல் கவிதை
* சோளிகளை குலுக்கிப் போடாதே
மீண்டும் மீண்டும்
தாயங்களை உருவாக்கி பரிகசிக்காதே
எத்தனை முறை நான்
பரமபத பாம்புகளால் கடிபட்டு
அடிவாரம் வீழ்வது?
- ஜன்னத்துல் பிர்தௌஸ்
|
இந்தியாவில் உடல் நலம் காக்க விரும்பும் பலரும், பொதுவான உடல் நலம் காப்பதில் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், பல் மருத்துவத்துக்குச் சிறிது கூட ஆர்வம் காட்டுவதில்லை. பல் வலி வந்தால், அந்தப் பல்லை அகற்றிவிட்டால் போதும் என்கிற மனநிலையேப் பலரிடமும் இருக்கிறது. பல்லைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க எவரும் முன் வருவதில்லை. குறிப்பாக, பல் மருத்துவச் செலவுகள் அதிகம் என்கிற எண்ணமும் பலரிடம் இருக்கிறது. பல் மருத்துவத்தில் ஒரு நோயாளிக்குத் தேவையான சிகிச்சை, அதற்கான அமர்வு எண்ணிக்கை போன்ற சில காரணிகளே மருத்துவச் செலவினைத் தீர்மானிக்கின்றன.
பொதுவான உடல் நலத்திற்குக் காப்பீடு செய்து கொள்வது போன்று, பல் மருத்துவத்திற்கும் காப்பீடு செய்து கொள்ள முடியும் என்பதைப் பலரும் அறிந்திருக்கவில்லை.
பல் மருத்துவம் செய்து கொள்வதற்கான காப்பீடு எடுத்துக் கொள்ளும் முன்பு, அந்தக் காப்பீடு பல் மருத்துவ செலவை முழுமையாக ஏற்றுக் கொள்ளுமா? என்பதை முதலில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulaory and Development Authority of India - IRDAI) 2018 ஆம் ஆண்டு விதிமுறைகளில், பல் மருத்துவக் காப்பீடு குறித்து பல்வேறு தகவல்களைக் குறிப்பிடுகிறது. அதிலிருந்து நமக்குச் சரியான காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
பல் மருத்துவக் காப்பீட்டுக் கொள்கைகளில்,
* பல் மருத்துவத்தின் பொதுவான செலவுகள்
* பல் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான செலவுகள்
* பல் மருத்துவ மருந்துகளுக்கான செலவுகள்
* மற்றும் பிற செலவுகள்
வழங்கப்படுவதற்கான காப்பீட்டுத் திட்டத்தையேத் தேர்வு செய்திட வேண்டும்.
இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI), பல் மருத்துவக் காப்பீட்டில் நம்பிக்கையூட்டப் பல பரிந்துரைகளை காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கிறது.
இங்கு நாம் இந்தியாவில் செயல்பட்டு வரும் சில காப்பீட்டு நிறுவனங்கள் பல் மருத்துவத்திற்கு வழங்கும் காப்பீடு குறித்தத் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
1. ஐசிஐசிஐ புரூடென்சியல் நிறுவன உடல் நலச் சேமிப்புக் கொள்கை (ICICI Prudential Health Saver Policy)
பல் மருத்துவம் சார்ந்த அனைத்து செலவுகளையும் காப்பீடு செய்கிறது.
2. தி நியூ இண்டியா மருத்துவ உரிமைக் கோரல் கொள்கை (New India Mediclaim Policy)
இந்திய அரசுக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தத் திட்டம் மூலம் இரண்டு வருடங்களுக்கு மருத்துவ உரிமை வேண்டப்படாத நிலையில் பல ல்மருத்துவ செலவுக்கு திட்டம் A மூலம் ரூபார் 5000, திட்டம் B மூலம் 10000 வழங்கும் திட்டத்தைக் கொண்டிருக்கிறது.
3. தி ஹெச்டிஎப்சி எர்கோ உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் (HDFC ERGO Maxima Health Insurance Plan)
அழகு சாராத பல் மருத்துவச் செலவுகளை இந்தத் திட்டம் வழங்குகிறது.
4. டிஜிட் உடல்நலக் கூடுதல் காப்பீடு (Digit Health Care Plus Policy)
இந்தியப் பல் மருத்துவக் குழுவில் பதிவு செய்யப் பெற்ற மருத்துவரிடம் செய்யும் அழகு சாராத பல் மருத்துவ செலவுகளை இத்திட்டம் வழங்குகிறது.
5. பஜாஜ் அலையான்ஸ் வரி ஆதாய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Bajaj Allianz Tax Gain Health Plan)
பல் அறுவை சிகிச்சை மற்றும் வெளி மருத்துவ செலவுகளை இத்திட்டம் அனுமதிக்கிறது. செயற்கைப் பல் கட்டுதல் மற்றும் விபத்து சார்ந்த பல் மருத்துவம் இதன் கீழ் வராது.
6. அப்போலோ முனிச் மேக்ஸிமா திட்டம் (Apollo Munich Maxima Plan)
விபத்து சாராத, முக அலங்கார பல் மருத்துவச் செலவு வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் மட்டும் தரக்கூடியது.
7. அப்போலா முனிச் எளிய உடல்நலக் கட்டணம் உடல் நலக் கொள்கை (Apollo Munich Easy Health Premium Health Insurance Policy)
பற்களுக்கான ஊடுகதிர், பல் சொத்தை அடைத்தல், பல் அகற்றுதல், வேர் சிகிச்சை போன்றவைகளுக்காக ஆண்டுக்கு 5000 வரை வழங்கும் திட்டம் இது. இத்திட்டத்தின் பலனைப் பெற மூன்று வருடம் காத்திருக்க வேண்டும்.
8. பாரதி ஆக்ஸா திறன் உடல் நலக் காப்பீட்டுத் திட்டம் (Bharti AXA Smart Super Health Insurance Policy)
விபத்து சார்ந்த பல் காயங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
9. பிஎஸ்எல்ஐ சாராள் உடல் நலக் காப்பீட்டுத் திட்டம் (Birla Sun Life Saral Health Plan)
பல் மருத்துவ நுண்ணாய்வு, சிறு அறுவைச் சிகிச்சை போன்றவைகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டப் பலனைப் பெற ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியிருக்க வேண்டும்.
.
10. ஐ சி ஐ சி ஐ லம்பார்டு உடல் நலக் காப்பீட்டு கூடுதல் திட்டம் (ICICI Lombard Health Advantage Plan)
வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பல் மருத்துவ செலவு அனுமதிக்கப்படுகிறது.
11. எல்ஐசி உடல் நலப் பாதுகாப்புக் கூடுதல் திட்டம் (LIC's Health Protection Plus)
அனைத்துப் பல் மருத்துவச் செலவுகளும் அனுமதிக்கப்படுகிறது.
12. எஸ்பிஐ உடல் நலத் திறன் காப்பீடு (SBI Life Smart Care)
விபத்து சாராத அனைத்துப் பல் மருத்துவ செலவுகளும் அனுமதிக்கப்படுகிறது.
13. சோழா எம் எஸ் பயணக் காப்பீட்டு (Chola MS Travel Insurance)
பயணத்தின் போது ஏற்படும் விபத்தின் காரணமாக வரும் அனைத்துப் பல் மருத்துவச் செலவுகளையும் அனுமதிக்கிறது.
14. ஓகேர் பல் மருத்துவக் காப்பீடு (OCARE Dental Insurance)
இந்தியாவின் முழு முதல் பல் மருத்துவக் காப்பீடு திட்டம். இது ஒரு கூட்டுக் காப்பீட்டுத் திட்டம். வருடத்திற்கு 25,000 ரூபாய் காப்பீடு கிடைக்கும். ஆண்டிற்கு ரூ 1699/- செலுத்த வேண்டியிருக்கும். பல் அகற்றம், அனைத்து வகையான செயற்கைப் பல் கட்டுதல், பல் தொப்பி, பாலம் அமைத்தல், வேர் சிகிச்சை அனைத்தும் உள்ளடக்கம். ஆண்டுக்கு இருமுறை பல் நுண்ணாய்வு செய்வதற்கான செலவையும் ஏற்கிறது.
இந்தக் காப்பீடு முதலில் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கிராமப்புறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பல் மருத்துவக் கட்டணம்
எஸ். திகழன்பு, குனியமுத்தூர்.
சில பல் மருத்துவச் சிகிச்சை செய்து கொள்வதற்கு அதிகமான கட்டணம் பெறப்படுகிறதே. இந்தக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்களுக்குக் கடன் ஏதும் வழங்கப்படுகிறதா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
சில வகை சிகிச்சைகளுக்குப் பல் மருத்துவக் கட்டணம் அதிக அளவில் பெறப்படுகிறது என்பது உண்மைதான். இந்தக் கட்டணத்தை உடனடியாக செலுத்த முடியாதவர்களுக்கு SAVE- IN எனும் நிறுவனம் சிறிய வட்டித் தொகையில் கடனாக வழங்குகிறது. உதாரணமாக, நீங்கள் இருபதாயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்றால் சேவ் இன் (SAVE- IN) எனும் குறுஞ்செயலி மூலம் மாதம் இரண்டாயிரம் வீதம் பத்து மாதங்களுக்குத் தவணை முறையி செலுத்த முடியும். நீங்கள் இந்தக் கடனுக்குத் தகுதியானவர்தானா? என்பதனை சேவ் இன் குறுஞ்செயலி வழியாக, உங்களின் ஆதார் அட்டை, சிபில் மதிப்பெண்களைக் கொண்டு சோதித்து, கடனுக்குப் பொருத்தமானவர் எனும் கருதும் நிலையில் இந்நிறுவனம் கடன் வழங்குகிறது. இதன் மூலம் முழு மருத்துவக் கட்டணத்தைச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு ஷேவ் ஆப் நிறுவனம் வழங்கி விட்டு, வாடிக்கையாளர்களிடம் மாதாந்திர தவணைகளில் பெற்றுக் கொள்கிறது. இதற்குச் சிறிய அளவில் வட்டியும் செலுத்த வேண்டியிருக்கும். இத்திட்டத்தைப் பல் மருத்துவச் சிகிச்சை செய்து கொள்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சில பல் மருத்துவர்க்ள் தொடர்ச்சியாகத் தங்களது பல் மருத்துவமனைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், சிகிச்சைக்கான பணத்தை மாதாந்திரத் தவணையில் பெற்றுக் கொள்கின்றனர்.
|
சில அரசுத் திட்டங்களில் பல் மருத்துவச் செலவு மீளளிப்பு ((Medical Reimbursement) செய்யப்படுகிறது.
* யாஸ்ஹாஸ்வினி அட்டை (Yeshasvini Card)
* மேற்குவங்காள ஆரோக்கிய அட்டை (West Bengal Health Card)
* ராஜீவ் காந்தி ஜீவன்தஸி ஆரோக்ய யோஜனா (Rajiv Gandhi Jeevandayee Arogya Yojana)
* பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana)
* ஊழியர்களின் மாநில காப்பீடு (Employees State Insurance)
* இந்திய அரசின் உடல் நலத் திட்டம் (India Govt Health Scheme)
உள்ளிட்ட மேலும் சில திட்டங்களில் பல் மருத்துவம் பெறக்கூடிய மருத்துவமனைகளின் பெயர் பட்டியல் இடம் பெற்றிருக்கும். பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் செய்து கொள்ளும் பல் மருத்துவச் சிகிச்சைகளுக்குக் கட்டணத்தை மீளளிப்பு பெறலாம்.
பல் மருத்துவக் காப்பீட்டில் முழுக் காப்பீட்டுத் தொகை என்ன? மாதந்தோறும் எவ்வளவு செலுத்த வேண்டும்? பல் மருத்துவரை நம் விருப்பத்துக்கு மாற்றிக் கொள்ளும் தெரிவு உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பல் மருத்துவக் காப்பீட்டில் அறிந்து கொள்ள வேண்டிய மேலும் பல தகவல்கள் இருக்கின்றன. என்ன தகவல்கள் அவை...?