உலகில் வாழும் பல்வேறு உயிரினங்களின் நாக்குகள் உணவு சுவையறிவதற்கு மட்டுமின்றி, உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாகவும் இருக்கின்றன. இதே போன்று, மனிதனின் நாக்கு உணவுச் சுவைகளை அறிந்திடுவதற்கு மட்டுமின்றி, அவனுடைய உணர்வுகளைப் பேச்சாக வெளியிடுவதற்கும் பயன்படுகின்றது.
கிராமப் பகுதிகளில் அதிகமாகப் பேசுபவளை, ‘அவளுக்கு வாய் ரொம்ப நீளம்’ என்றும், அதிகமாகச் சாப்பிடுபவனை, ‘அவனுக்கு நாக்கு நீளம்’ என்றும் வேடிக்கையாகச் சொல்வதைக் கேட்டிருக்கலாம். இச்சொற்றொடர்களில் நாக்கு அதிகமாகச் சாப்பிடுபவர்களை மட்டும் குறிப்பிடுவது தவறானதே, நாக்கு உணவின் சுவையை உணர்வது மட்டுமின்றி, உள்ளத்து உணர்வினையும் வெளிப்படுத்துகிறது என்றால் அது மிகையில்லை. இதனையும் கிராமப்பகுதிகளில், “பல்லக்கு ஏறுவது நாவாலே, பல்லு உடைவதும் நாவாலே” என்று சொலவடையாகச் சொல்வார்கள். இந்தச் சொலவடைக்கு, “ஒவ்வொரு மனிதனும் தனது நாவை இரண்டு வகையாகக் கட்டுப்படுத்த வேண்டும். முதலாவது, தேவையானவற்றை மட்டுமே பேச நாவைக் கட்டுப்படுத்த வேண்டும். அதனால், அவனது உடல் மட்டுமின்றி, உள்ளமும் பாதுகாப்பாக இருக்கும். இரண்டாவது, உணவை உண்ணுவதில் நாவைக் கட்டுப்படுத்த வேண்டும். நாவிற்குச் சுவையாக இருப்பதையெல்லாம் அளவிற்கு அதிகமாக சாப்பிடாமல் இருந்தால், உடலும் உள்ளமும் நலமாக இருக்கும்” என்று பொருள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த சானல் டேப்பர் என்கிற பெண்ணுக்கு 3.8 அங்குலம் அல்லது 9.75 செமீ நீளமுள்ள நாக்கு உள்ளது. இதே போன்று, அமெரிக்காவைச் சேர்ந்த 20 வயது மாணவர் பிரேடன் மெக்கல்லோவுக்கு நாக்கின் சுற்றளவு 6. 3 அங்குலம் அல்லது 16 செமீ என்று இருக்கிறது. ஒரு சராசரி நாக்கின் பலம் 40-80 கிலோ என்று பாசுக்கல் அளவில் இருக்கிறது.
பற்களுக்கான குறள்கள்
* இரணமான பற்சொத்தை வந்தால் புன்னகையை
கணமேனும் காணுதல் அரிது.
* எப்பொருள் எப்பொழுது உண்டாலும் பின்னர்
தப்பாமல் கொப்பளிப்போம் வாயை.
- தேஜஸ் சுப்பு என்கிற கனலி
|
மனிதர்களில் சிலருக்கு இருக்கும் நாக்குழறல் அல்லது பேச்சுக் குழறலை ஆங்கிலத்தில் Dysarthria என்கின்றனர். இதனைக் கீழ்க்காணும் 7 வகைகளில் பிரிக்கின்றனர்.
1. தொய்வான பேச்சுக் குறைபாடு (Flaccid Dysarthria) - இது மூளைத்தண்டு நரம்பணுக் கரு வாதம் (Bulbar Palsy) எனும் நோயால் ஏற்படுகிறது.
2. வலிப்பு தொடர்புடைய பேச்சுக் குறைபாடு (Spastic Dysarthria ) - இது பாலிமுகுள வாதம் (Psedobulbar Paralysis) எனும் நோயால் ஏற்படுகிறது.
3. ஒழுங்கற்ற பேச்சுக் குறைபாடு (Ataxic Dysarthria) - இது சிறுமூளத் தள்ளாட்டம் (Cerebellar Ataxia) எனும் நோயால் ஏற்படுகிறது.
4. உடலியக்கக் குறைபாட்டால் வரும் பேச்சுக் குறைபாடு (Hypokinesia Dysarthria) - இது நடுக்கு வாதம் (Parkinson's Disease) எனும் நோயால் ஏற்படுகிறது.
5. உடல் மிகையியக்கத்தால் வரும் பேச்சுக் குறைபாடு (Hypeskinetic Dysarthria) - இது இயல்பிறுக்க மாறுபாடுகள் (Dystonia) எனும் நோயால் ஏற்படுகிறது.
6. உடலியக்க குறை மற்றும் மிகை இணைந்து வரும் பேச்சுக் குறைபாடு (Mixed Dysarthria) - இது நடுக்கு வாதம் மற்றும் இயல்பிறுக மாறுபாடுகள் சேர்ந்த நோயால் ஏற்படுகிறது.
7. ஒருதலைப்பட்சமான மேல் இயக்க நரம்பணு குறைபாடுகளால் வரும் பேச்சுக் குறைபாடு (Unilateral Upper Motion Neuron).
நாக்கில் எட்டு வகையான தசைகள் உள்ளன. உள்ளியல்பான நான்கு தசைகள், நாக்கின் வடிவத்தை அவ்வப்போது மாற்ற உதவுகின்றன. வெளிப்புற நான்கு தசைகள் நாக்கின் நிலையை மாற்றியமைக்க உதவுகின்றன. உள்ளியல்பான நான்கு தசைகள் எலும்புடன் இணைக்கப்படவில்லை. வெளிப்புற நான்கு தசைகள் எலும்புடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.
உலகிலிருக்கும் மக்களில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரேகைகள் இருப்பதாகச் சொல்லப்படுவது போன்றே, மனிதனின் நாக்கும் தனித்துவமானது. ஒருவர் நாக்கு போல மற்றொருவருக்கு இருப்பதில்லை. இங்கு, ஒவ்வொரு மனித உடலுக்குள்ளும் இருக்கிற லட்சக்கணக்கான தொழில்நுட்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தக் கூடியவையாக இருக்கின்றன.
நாக்கைக் கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்.
1. நாக்கின் நிறம்
2. நாக்கின் நகர்ச்சி விதம்
3. நாக்கின் மேற்புற இழை நய அமைப்பு மாறுபாடுகள்
4. நாக்கின் முக்கியமான தனி அமைப்புகள்
5. நாக்கின் நீளம், அகலம், தடிமன் அளவுகள்
6. நாக்கின் வடிவம் (சுத்தியல் வடிவ நாக்கு, செவ்வக நாக்கு, சதுர நாக்கு, நீள் வட்ட நாக்கு, மழுங்கிய முக்கோண நாக்கு, கடுமையான முக்கோண நாக்கு)
7. நாக்குப் பிளவு, நாக்கு வெடிப்பு, வழவழப்பான வெல்வெட் நாக்கு.
தற்போது கையில் வைத்திருக்கும் திறன்பேசிகளின் செயல்பாடுகளுக்கான பாதுகாப்பிற்கு கைரேகைகள், கருவிழிகள் பயன்படுத்துவது போன்று நாக்கையும் உயிரியளவுக் (Biometric) குறியீடாகப் பயன்படுத்தலாம்.
நாக்கு அச்சு (Tongue Print) என்பது ஒரு அதிநவீன உயிரியளவியல் உறுதிப்பாடு அல்லது சான்றளிப்பு என்று கொள்ளலாம். நாக்கில் ஆள்மாறாட்டம் செய்யவே முடியாது. ஆண், பெண் நாக்கின் வெளிப்புறத் தோற்ற நிலைகளையும் மாறுபாடுகளையும் பற்றித் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அண்மையில் 20 நபர்களின் நாக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. முதலில் அவர்களின் புறத்தோற்றம் கணிக்கப்பட்டது. அதன் பின், 20 நபர்களின் நாக்கின் முன்புற மேற்பரப்பை எண்ணிம ஒளிப்படமாக (Digital Photo) தனித்தனியாக எடுத்தனர். இதே போன்று, அவர்களின் நாக்குகளை பல் மருத்துவத்தில் பயன்படுத்தும் கால்சியம் ஜிப்சம் கலவை அச்சில் பதித்து எடுத்தனர். நாக்கின் ஒளிப்படங்களையும் நாக்கு அச்சுக்களையும் இரு வேறு வழிகளில் தனித்தனியாக ஆய்வு செய்தனர்.
முன்பு செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில், நாக்கின் வடிவம், நாக்கில் பிளவுகளின் இருப்பு இல்லாமை, நாக்குப் பிளவுகளின் விநியோக முறை போன்றவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், மிகப் பொதுவான நிலை, நாக்குகளின் மத்தியில் பிளவுகள் காணப்படுவதே. பன்மையிலான செங்குத்து பிளவுகள் ஆண்கள் நாக்கிலும், ஒற்றை செங்குத்துப் பிளவுகள் பெண்கள் நாக்கிலும் காணப்பட்டன. பிளவுகள் ஆண்கள் நாக்கில் மேலோட்டமாகவும், பெண்கள் நாக்கில் ஆழமாகவும் தெரிந்தன. பெரும்பாலான ஆண், பெண் நாக்குகள் ஆங்கில எழுத்தான U வடிவில் இருந்தன. இருப்பினும், 25 சதவீதப் பெண்களின் நாக்குகள் ஆங்கில எழுத்தான V வடிவில் அமைந்திருந்தன.
ஒரு உயிரியல் அள்வீட்டில் மனித நாக்கில் உயிரியளவியல் வரியோட்டம் கருவியில் நாக்கைப் பதிவு செய்து, அந்தக் கருவி நாக்குக்கு உரியவரின் உயிரியளவியல் தரவுகளைச் சேகரிக்கிறது. சேகரித்த தரவுகளை நாக்கு அச்சுப் பட வருடி எனலாம். இந்தப் பட வருடியில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் எண்ணிமத் தகவல்களாக மாற்றப்பட்டு கணினியின் உதவியுடன் சரி பார்க்கப்பட்டது.
இதில், இரட்டையர் என்று சொல்லப்படுபவர்களின் நாக்கு கூட ஒன்று போல இருப்பதில்லை என்றும், நாக்கு ஒருவருக்கொருவர் நிலையான மற்றும் மாறும் நிலைகளைக் கொண்டிருக்கிறது என்றும் கண்டறியப்பட்டது.
நாக்கு உயிரியல் அளவு குறித்து ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பெற்ற போதும், 2007 ஆம் ஆண்டு லியூ எட் அல் குழு, நாக்கு அச்சு ஒப்பீட்டு முறையை கண்டுபிடித்தது. இனி வரும் காலங்களில் பற்கள் அச்சு (Dental Print), நாக்கு வரைபடங்கள் போன்றவையும் தடய அறிவியலில் முழுமையாகப் பயன்படுத்தப்பட இருக்கிறது.
பல்லிடுக்கு நூல் சுத்தம் - கேள்வி பதில்
ம. திவாகரன், திருச்சி
டென்டல் பிளாஸிங் (Dental Flossing) செய்வது நல்லதா, கெட்டதா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
நாள்தோறும் இரு முறை பல் துலக்கினாலே ஈறுகள் புண்ணாகும் என்கின்றனர். இந்நிலையில், பல் தழுவுதல் அல்லது பல்லிடுக்கு நூல் (Dental Flossing) சுத்தம் தேவையற்றது என்றும், அதனால் பற்களுக்குச் சில பாதிப்புகள் வரலாம் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், பல் மருத்துவர்கள் சங்கம், பல் தழுவுதலைக் கவனமாகச் செய்தால், பற்களுக்கிடையிலிருக்கும் கிருமிகளை நீக்கி, பற்சொத்தையைத் தடுக்கும். ஈறுகளையும் பற்களின் மேற்பூச்சைப் பாதுகாக்கும் என்று பல் தழுவலுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளது. பல் தழுவுதல் என்றால் ஒரு மெலிதான நைலான் நூலை இரு கைகளால் பிடித்து, இரு பற்களுக்கிடையே வைத்து, அவ்விடுக்கிலுள்ள உணவுத் துகள்களை அகற்றுதல் எனக் கொள்ளலாம். பல் தழுவுதலில், மெழுகு தழுவுதல், நீர் தழுவுதல், வாசனை திரவியத் தழுவுதல், நூல் தழுவுதல் என்று பல முறைகள் இருக்கின்றன. ஓரல் பி கிளைடு புரோ ஹெல்த் (Oral-B Glide Pro-Health) எனும் முறையில் பல் தழுவுதல் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. நல்ல தகுதியான பல் மருத்துவரைக் கொண்டு, பல் தழுவுதல் செய்து கொள்வது சிறப்பு என்றே நாங்கள் கருதுகிறோம்.
|
நாக்கு ஆய்வுகளையெல்லாம் படித்துக் குழப்பமடைந்திருக்கும் வேளையில், ஒரு சிறுபயிற்சி.
நாப்பயிற்சி (Tongue Twister) எனப்படும் சில நீளமான தமிழ் வாக்கியங்களைப் பிசிறு தட்டாமல், குழறாமல், உளறாமல் சொல்லத் தங்களால் முடிகிறதா? என்று பாருங்கள்...!
‘குண்டூரில் குடியிருக்கும்
குப்புசாமியின் குமரன் குப்பன்
குளத்தில் குளித்துக்
கொண்டிருக்கும் போது
குதிரையின் குந்தியை
குச்சியால் குத்தினான்
குதிரை குத்தியோ குத்தியென்று
குதித்தது’
என்று வேகமாகச் சொல்லிப் பாருங்கள்...!
என்னது, சரியாகச் சொல்லி விட்டீர்களா...? அப்படியென்றால், கீழ்க்காணும் வாக்கியத்தையும் சிறிது வேகமாக,
‘சரக்கு ரயிலைக்
குறுக்கு வழியில்
நிறுத்த நினைத்த
குறுக்கு மைனர்
சறுக்கி விழுந்தும்
முறுக்கு மீசை இறங்கவில்லை’
சொல்லிப் பார்த்துக் கொண்டிருங்கள்...