மனித உடலில் இரத்த ஓட்டத்திற்கு இரண்டு வகையான இரத்தக் குழாய்கள் செயல்படுகின்றன . இதயத்திலிருந்து சுத்திக்கரிக்கப்பட்ட இரத்தத்தை உடல் முழுவதும் கொண்டு செல்லும் குழாயானது தமனி(Artery) எனவும், உடலிலிருந்து அசுத்த இரத்தத்தைச் சுத்தப்படுத்த இதயத்திற்குக் கொண்டு செல்லும் குழாயானது சிரை(Vein) என்றும் அழைக்கப்படுகிறது .இந்த சிரைக்குழாயின் உள்ளே அமைந்துள்ள வால்வுகள் பாதிப்பதால் இரத்தமானது இதயத்திற்குச் செல்வது தடைப்படுகிறது .இதனால், இரத்தமானது சிரைகளில் தேங்குவதால் சிறையின் உட்பகுதியானது தடித்து கடினமான நிலையை அடைந்து சுருண்ட நிலைக்கு மாறுகின்றது. தேங்கிய இரத்தமானது நிறம் மாறிக் கருநீல நிறம் பெறுகிறது. முக்கியமாகக் கால் மூட்டிலிருந்து கணுக்கால் மூட்டு வரையிலும், காலின் பின்புறம் உள்ள கண்டைக்கால் சதைப்பகுதியிலும் பரவலாக ஏற்படுகிறது. இந்நோயினைச் ‘சுருள் சிரை நோய்’(Vericose Vein) என்கின்றனர்.
நோய்க்கான வாய்ப்புடையவர்கள்
சிரை வால்வுகளில் பிறவியிலேயே ஏற்படும் குறைபாடுகள், வயது, கர்ப்பிணிப் பெண்கள், மாதவிடாய் நின்ற பெண்கள், பாலினச் சுரப்பிக் குறைபாடுள்ள பெண்கள், அதிக அளவில் குழந்தை பிறப்பைத் தடுப்பதற்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் பெண்கள், மரபியல் ரீதியான காரணங்கள், உடல் பருமன், நீண்ட நேரம் நின்றுகொண்டோ அல்லது அமர்ந்தோ வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
அறிகுறிகள்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வலி, எரிச்சல், கண்டைகால் சதை துடிப்பு, வீக்கம், சில நேரங்களில் இரத்தக்குழாய்களில் சிறு வெடிப்பு ஏற்பட்டு இரத்தம் கசிதல், இரத்தக்குழாய்கள் சுருண்டு சிலந்தி வலைப்பின்னல் போல் காட்சியளிப்பது, புண்கள், இரத்தம் உறைவு ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.
பரிசோதனைகள்
சிரையின் பாதிப்பின் தன்மையைக் கண்டறிய Venogram மற்றும் நுண் அலை ஒலிப்பரிசோதனை (Duplex Ultrasound ) ஆகியவை செய்யப்படுகின்றன.
சிகிச்சையின் நோக்கம்
வால்வுகள் கோளாறினால் சிரைக்குழாய்களில் ஏற்பட்டுள்ள இரத்த அடைப்புகளை நீக்கி, இரத்த ஓட்டத்தைத் தடையில்லாமல் இதயத்திற்குக் கொண்டு செல்ல மேம்படுத்துவதே சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். இதுபோன்று நரம்புகள், தசை, வலிகளைக் குறைப்பது.
மருத்துவ சிகிச்சைகள்
பாதிக்கப்பட்ட சிரைக்குழாய்களைத் திறந்தமுறை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்குதல் (Stripping or Vein removel ), ஸ்கெலரோதெரபி (Scelerotherapy ) மற்றும் Radio Frequency Abalation (RFA ) எனும் சில முறைகள் மருத்துவச் சிகிச்சைக்காகக் கையாளப்படுகிறது.
நோய் வராமல் பாதுகாக்க
இந்நோய் பாதிப்பை தொடக்க நிலையிலேயே சரி செய்வதற்கு உடலியக்கப் பயிற்சிகள் முக்கியப் பலன் அளிக்கிறது. நோய்த் தொடக்க நிலையில் உள்ளவர்களும், இந்நோய் வராமல் தடுக்க நினைப்பவர்களும் பின்வரும் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டால் நல்ல பயனைப்பெறலாம்.
1. நடைப்பயிற்சி
குறைந்தது ஒருநாளைக்கு 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் வலி மற்றும் வீக்கம் குறையும். இரத்த ஓட்டம் சீரடையும். இதயத்திற்குத் தடையில்லாமல் இரத்தம் செல்ல உதவும்.
2. கால்களுக்குண்டான பயிற்சிகள்
நிலை 1 - சமதரையில் கால்களை நீட்டி நேராகப் படுத்துக் கொண்டு, ஒரு காலை மட்டும் முட்டியை மடக்காமல் நீட்டி மேலே கொண்டு சென்று குறைந்தது 15 வினாடிகள் அந்தரத்தில் நிறுத்த வேண்டும். பின்னர், மெதுவாகக் காலைப் பழைய நிலைக்குத் தரைக்குக் கொண்டு வர வேண்டும். இதே போல், இரண்டு கால்களுக்கும் மாற்றி மாற்றிக் குறைந்தது 15 நிமிடங்கள் பயிற்சி கொடுக்க வேண்டும்.
நிலை 2 - கால்களை நீட்டி மல்லாந்து படுத்த நிலையில், முட்டியை மடக்கி, நெஞ்சுவரைக் கொண்டு சென்று நிலை நிறுத்தி, கணுக்காலை அந்தரத்தில் மேலும் கீழும் அசைக்க வேண்டும். இரண்டு கால்களுக்கும் இந்தப் பயிற்சியை அளிக்கவேண்டும். குறைந்தது இந்நிலையில் 15 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நிலை 3 - நேராக நின்று கொண்டு, இரண்டு கால்களில் உள்ள விரல்களின் நுனியால் நிற்க வேண்டும். குதிகால் பாதமானது தூக்கிய நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பின் மெதுவாகச் சமநிலைக்குத் திரும்ப வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால், கண்டைக்கால் தசை பலம் பெறுவதுடன் வலியும் குறையும். தடைபட்டுள்ள இரத்த ஓட்டம் சீராகும்.
நிலை 4 - தரையில் கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டு, இரண்டு கால் முட்டிகளை மடக்கி, அந்தரத்தில் மிதிவண்டி மிதிப்பதைப் போல் பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் முழங்கால்களிலிருந்து இடுப்புப் பகுதி வரை இரத்த ஓட்டம் மேம்படும்.
நிலை 5 - உட்காரும் போழுதோ அல்லது படுத்திருக்கும் பொழுதோ கால்களைக் குறைத்து 10 நிமிடங்கள் தலை மட்டத்திற்கு மேல் உயர்த்தி வைத்திருந்தால், சிரைகளிலிருந்து இரத்தம் இதயத்திற்கு எளிதாக சென்றடையும். இரத்தம் குழாய்களில் தேங்குவதும் குறையும்.
மேலும் மிதிவண்டி ஓட்டுதல், நீச்சல் பயிற்சி, ஜாக்கிங், உட்கார்ந்து எழும் பயிற்சி, சில எளியமுறை ஏரோபிக் பயிற்சிகளை இயன்முறை மருத்துவரின் ஆலோசனையுடன் செய்து கொள்ளலாம் .
நோயுடையவர் கவனத்திற்கு
இந்நோய் தொடக்க நிலையில் உள்ளவர்கள் கீழ்க்கண்டவற்றைக் கடைபிடிப்பது நல்லது.
* அதிக அளவில் தண்ணீர் பருகவேண்டும். இதனால் இரத்தம் சிறைகளில் தேங்குவதை தவிர்க்கலாம்.
* உட்காரும் பொழுது, கால் மேல் கால் போட்டு அமரும் நிலையைத் தவிர்க்க வேண்டும்.
* குதிகால் அதிக அளவில் உயர்த்தும் வகையிலான காலணிகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
* நீண்ட நேரம் உட்கார வேண்டிய நிலையிலோ அல்லது நிற்கும் நிலையிலோ, சிறிது நேரம் அந்த நிலையினை மாற்றிக் கொள்ள வேண்டும்.
* நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள், குறைவான அளவு உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணவேண்டும்.
* கால்களில் சுருட்டிக் கொண்டிருக்கும் சிறைக்குழாய்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அழுத்த உறைகளை (Compression Stockings) அணியவேண்டும்.