சவ்வு என்பது ரப்பர் போன்ற இழு நிலை அதிகம் கொண்ட ஒரு பகுதி, இது உடலில் உள்ள மூட்டுப் பகுதிகளில் அமைந்து நம் எலும்புகளை இயக்கங்களின் போது வழி நடத்துகிறது. இந்த இழுநிலை குறையும் போதோ அல்லது வேகமாக இயங்கும் போதோ, சவ்வுக் காயங்கள் ஏற்படுவது வழக்கம். பொதுவாக சவ்வு அடிபடுதல் அல்லது விலகுவதற்கு காரணங்கள்;
1. தொடர்ந்து ஏற்படும் அதிக அளவிலான இயக்கம்
2. விளையாட்டுகளில் ஈடுபடும் போது
3. முரட்டு தனமான செயல்பாடுகள்
4. வழுக்கி விழுதல்
5. சாலை விபத்துக்கள்
6. முதுமை
இது போன்ற பொதுவான காரணங்களால் சவ்வு விலகுதல், அடிபடுதல், கிழிந்து போகுதல் ஏற்படுகிறது. மருத்துவர்கள் காயத்தின் தன்மைகளுக்கு ஏற்ப இதற்கு சிகிச்சை அளிப்பார். சவ்வு பற்றிய விளக்கம் உங்களுக்கு போதுமான அளவுக்கு கொடுக்கப்பட்டு உங்களை மருத்துவர் சிகிச்சைக்குத் தயார்படுத்துவது அடுத்த கட்ட நடவடிக்கை. மருத்துவம் வளர்ச்சி அடையாத காலங்களில் இது போன்ற பிரச்சனைகளின் போது மக்கள் நாட்டு வைத்தியர்களிடம் சென்று சிகிச்சை பெறுவது பொதுவான நடைமுறையாக இருந்து வந்தது. இதனால் சில நேரங்களில் மட்டுமே பயன் கிடைக்கும். இது போன்ற முறைகள் அடிபட்டவரின் சவ்வுகளில் ஆழமான காயங்களை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் அவர்களை நோயாளியாக மாற்றிவிடும். இந்த மருத்துவ யுகத்தில் பல்வேறு தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்தில் இது போன்ற நாட்டு வைத்திய மருத்துவ முறைகளைத் தவிர்ப்பது நல்லது. சவ்வில் ஏற்படும் காயங்களை மருத்துவர்கள் மூன்று வகையாகப் பிரித்து சிகிச்சை மேற்கொள்வார். முதல் கட்ட பிரச்சனைகளுக்கு இங்கே என்ன மருத்தவ முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்...
நம் உடலில் உள்ளே தினமும் காயங்கள் ஏற்பட்டுக் கொண்டோதான் உள்ளது. பெரும்பாலான காயங்கள் அதன் விளைவுகளை வெளியே தெரிவிப்பதில்லை. இது போன்ற காயங்களை நம் உடலில் உள்ள இயற்கையான காயங்களை ஆற்றும் தன்மை சரி செய்துவிடும். இதை நோயெதிர்ப்பு சக்தி என்றும் கூறலாம். இதை ஆங்கிலத்தில் Natural Healing Process என்பார்கள். ஆனால் சில நேரங்களில் மேற்சொன்ன காரணங்களால் சவ்வில் ஏற்படும் காயங்கள் அடிபட்டவரை மிகுந்த கஷ்டத்திற்கு ஆட்படுத்தும். பொதுவாக அடிபட்டவர் வலியில் துடிப்பதைக் காணலாம். கால்பந்துப் போட்டிகளை நீங்கள் தொலைகாட்சியில் காணும் போது, இது போன்ற காயங்கள் ஏற்பட்டதும் விளையாட்டு வீரர் வலியில் துடிப்பதை பார்த்திருப்பீர்கள்.
இது போன்ற சவ்வில் ஏற்படும் சிறிய காயங்கள் இடறி விழும் போது ஏற்படுவது வழக்கம். இருட்டில் நடக்கும் போது பள்ளம் தெரியாமல் கால் வைத்து விழுவது, குளிக்கும் அறையில் வழுக்கி விழுவது, படியில் பயணிக்கும் போது விழுதல் போன்ற பொதுவான காரணங்களால் ஏற்படும். ஒருவர் விழுந்ததும் அவருக்கு சவ்வில் அடிபட்டு விட்டதை அறிவது எப்படி?
1. சவ்வில் அடிபட்டவரால் எழுந்து நடக்க முடியாது. அதாவது, காலைக் கீழே வைத்து ஊன்றி நடக்க முடியாது.
2. தாங்க முடியாத வலி
3. அடிப்பட்ட சிறிது நேரத்தில் வீக்கம் கட்டுதல்
4. அடிப்பட இடம் சிவந்து போகுதல்
5. அடிப்பட்ட அல்லது வீக்கம் உள்ள இடங்களைத் தொடும் போது அடிபட்டவர் அலறுவது
இந்த சவ்வு விலகுதல் குதியகால் மூட்டு (Ankle) மற்றும் கீழ் தொடை மூட்டு (Knee) பகுதியில் பொதுவாக ஏற்படுகிறது. இதனை குணப்படுத்துவதற்கு முதல் கட்ட சிகிச்சை அதாவது முதலுதவி மிக முக்கியம். அடிப்படவரை நடக்க விடாமல் அல்லது அவரை அடிபட்ட காலைக் கீழே வைக்காமல் தாங்கிப் பிடித்து அமர வைப்பது. அமர வைத்ததும் அவருக்கு மேலே சொன்ன பிரச்சனைகள் உள்ளதா என நீங்களே பரிசோதிக்கலாம். பரிசோதித்த பின்னர் அவருக்குப் பிரச்சனை இருப்பது உறுதி செய்யப்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது. அப்படி போக முடியாத பட்சத்தில் கீழ்காணும் சில மருத்துவ முறைகளைக் கடைபிடியுங்கள்
அடிப்பட சவ்வை முதலில் பாதுகாக்க வேண்டும் இதனால் சவ்வு மீண்டும் அடிபடாமல் இருக்கவும் அல்லது கொஞ்சமாக கிழிந்த பகுதி முழுவதும் கிழியாமல் தடுக்கவும் முடியும்
1. அடிபட்டவருக்கு போதுமான அளவு ஓய்வு கொடுக்க வேண்டும்
2. சில நாட்களுக்கு நடக்காமல் இருப்பது மிக முக்கியம். இதனால் அடிப்பட சவ்வு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவும் அடிபட்ட காயத்தை ஆற்ற உதவும்
3. குளிர்ச்சியான பனிக் கட்டியைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பது மிக மிக முக்கியம். பனிக்கட்டியை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது ஒரு கைக்குட்டையில் போட்டும் கொடுக்கலாம். இது சவ்வில் ஏற்படும் அலற்சி மாற்றத்தை தடுத்துக் காயம் விரைவாகக் குணமடைய வழி வகுக்கும். குறைந்தது சுமார் இருபது நிமிடங்களிலிருந்து பதினைந்து நிமிடங்கள் வரை இந்த ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை பனிக்கட்டியிலான ஒத்தடம் கொடுப்பது, காயத்தினால் ஏற்பட்ட விளைவுகளைத் தடுப்பதோடு காயம் வெகு வேகமாக குணமடையவும் வழிவகுக்கும்
4. அடிப்பட மூட்டுப் பகுதியை உயர்த்தி வைக்க வேண்டும். இதனால் அடிபட்ட பகுதியில் ஏற்படும் வீக்கம் கட்டுப்படுத்தப்படும்
5. அனைத்தும் முடிந்த பின்னர் இலகுவான துணி (பேண்டேஜ்) கொண்டு இறுக்கிக் கட்டிப் பாதுகாப்பு கொடுப்பது மிக நல்லது.