........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
2 |
|
a |
குறுந்தொடர் கதை கடல்
வாசுகி நடேசன் 11. புத்துயிர் பெற்ற மரியம்மா!
மேரி எத்தனையோ களங்களைக் கண்டவள்தான். தன்னோடு நெருங்கிப் பழகிய தோழிகளை இழக்க நேர்ந்த போது அவள் மனதில் கலக்கம் உண்டகாமல் இருப்பதில்லை. ஆனால்... அதிலிருந்து அவள் விரைவில் விடுபட்டுவிடுவாள். போராளிகளுக்கு வழங்கப்படும் பயிற்சி அத்தகைய மனநிலையை அவர்களுக்குக் கொடுத்திருந்தது. போர்க்களங்களில் கண்ட அவலத்திலும் சுனாமி அனர்த்தம் போரளிகள் உட்பட அனைவரையும் கதிகலங்க வைத்துவிட்டது. அதற்கு மேரியும் விதிவிலக்கல்ல. மேரி தனது தந்தை சகோதரர்களின் இழப்பை அறிந்த போது மனதளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகத்தான் செய்தாள். எனினும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு முல்லைத்தீவுப் பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காய் கடந்த ஏழு நாட்களாய் ஒருநாளைக்குப் பதினைந்து மணித்தியாலத்துக்கு மேல் வேலை செய்திருக்கிறாள். பிணங்களைத் தூக்கிக் கூட்டாகப் புதைத்துப் புதைத்து ஒருவகையில் அவள் மனம் விறைத்து வைரித்துப் போய்விட்டது. பலரது கொடூரமான அனுபவங்களைக் கேட்டதால்தான் என்னமோ தனது குடும்பத்துக்கு எற்பட்ட அவலத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அவளுக்கு வந்திருந்தது. ஆனால் அந்தப் பக்குவ உணர்வு தாயைப் பார்த்தவுடனே உடைந்து சிதறியது. தாயின் கோலங்கண்டு அவள் உள்ளம் ஆடிவிட்டது. அவள் உள்ளிருந்து கட்டுப்படுத்த முடியாது கேவல்கள் தோன்றி அழுகையாக வெடித்தது. அவள் தாயைக் கட்டிக் கொண்டு சில பொழுதுகள் கதறியழுது விட்டாள். ஆரம்பத்தில் மரியம்மாவால் மேரியைக் கூட அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால் மேரியின் பரிசம் பட்டவுடன் அவளது தாய்மை விழித்துக் கொள்கிறது. உடம்பில் புதிய இரத்தம் ஊற்றெடுப்பது போல் ஓர் உணர்வு... மேரியின் அழுகையுடன் மரியம்மாவின் அழுகையும் சங்கமிக்கிறது. கரைகாணாத இருண்ட நரகத்தில் நடந்து கொண்டிருந்த அவளுக்கு முன் முதல் முதலாக ஓர் ஒளிக்கீற்று... கடந்த ஏழு நாட்களின் பின் கனவு நிலையிலில்லாது நனவு நிலையிலேயே புன்னகை ஒன்று அவள் இதழ் கடையில்ஸஸஸஇதுநாள் வரையில்லாத ஒளி கண்களில்... பெரிய உழியழிவைக் கண்டபின் இயற்கை ஓர் சமநிலையடையுமே அத்தகைய சமநிலை மரியம்மாவிடம் ஏற்படுகிறது. இன்றுவரை மனநோயாளியாகத் தங்களால் கணிப்பிடப்பட்ட மரியம்மாவில் மேரியின் வருகை ஏற்படுத்திய மாற்றம் கண்டு உளவளத் துணையாளர்களும், வைத்தியர்களும் அதிசயத்து நிற்கிறார்கள். உறவுப் பிணைப்புக்கள் வலுகட்டாயமாக அறுக்கப்பட்ட போது வலுவிழந்திருந்த மரியம்மா இன்னுமொரு பிணைப்பு இருப்பதுகண்டு புத்துயிர் பெற்றுவிட்டாளா...? மனம் என்பது மிக நுண்ணியது. அணுவைத் துளைத்து அதன் கூறுகளைச் சரியாகக் கணகிட்ட மனிதனால் மனதின் ஆழத்தை அளவிட முடியவில்லை என்பதை அந்த நேரத்தில் மருத்துவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. எது எவ்வாறாயினும் மீண்டும் தொடங்கும் மிடுக்காய் தோன்றியிருக்கும் இந்த மாற்றம் நிலைக்க வேண்டும் என அங்கிருந்த அனைவரும் மனதார இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கின்றனர். நாமும் அவர்களுக்காகப் பிரார்த்திப்போமாக...! ( முடிவுற்றது)
|
முகப்பு |