........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
2 |
|
a |
குறுந்தொடர் கதை கடல்
வாசுகி நடேசன் 4. நாங்கள் மீன்பிடிகாரர்கள்
அலை ஓசை மெல்ல மெல்ல அதிகரிக்கிறது. மீனவர்களை வரவேற்கும் அன்னையின் கீதம் போல் அந்த ஒசையில் ரிதம் கூடி நிற்கிறது. இனிமையான காலைப் பொலுதைத் தரிசிக்கக் கீழ்வானில் சூரியனும் தன் கதிர்கரங்களைப் பரப்பியபடி ஆவலுடன் புறப்பட்டு விட்டான். அவன் மேனியின் பொற்கிரணங்கள் கடல்மகள் உடல் தொட்டுப் பொன்முலாம் பூசிவிட்டிருந்தன. இயற்கையின் வினோதங்களை இரசித்தார்களோ இல்லையோ மீனவர்களின் முகங்களில் தொழிலுக்குச் செல்லும் போது ஏற்படும் உற்சாகக் களிப்பு வெளிப்படுகிறது. கபரி, ராசன், அன்ரனி மூவரும் போட்டின் கயிற்றை அவிழ்த்து அதைக் கடலில் தள்ளிச் செல்லுகிறார்கள். இளந்தாரிகளைத் தொடர்ந்து சூசை, டானியல், டேவிட் ஆகியோரும் கடலலை நடுவே நடந்து போட்டை அடைகிறார்கள். ஆறு பேரும் ஏறியதும் டேவிட் இயந்திரத்தை முடுக்கி விடுகிறான். இயந்திரத்தின் விசிறிகள் கடலைக் கடைய வெண்ணுரையைத் தள்ளியபடி படகு ஆழ்கடல் உழப் புறப்பட்டு விட்டது. அது துள்ளும் அலைகளின் எற்ற இறக்கத்துக்கு ஏற்ப மேல் எழுவதும் கீழ் விழுவதுமாய் விரைந்து செல்கிறது. சவுக்கடியாக அலைகள் இளைஞர் மேல் விழுகின்றன. அவற்றில் நனைவது கூட அந்த வேளையில் இன்பம் தருகிறது. ராசன் படகின் அணியத்தில் அமர்ந்திருந்து பரந்து விரிந்த கடலைப் பார்த்த வண்ணம் வருகிறான். எப்பொழுதும் பார்க்கும் கடல்தான். ஆனால் அவன் உள்ள எழுச்சியை பிரதிபலிப்பது போலக் கடலும் புதுக்கோலம் கொண்டுள்ளதாக அவனுக்குப் படுகிறது. நாரைகள் நீர் மீது கெந்திக் கெந்தி விளையாடுவது போலத் தோற்றம் தருகின்றன, அனால் நீரில் திடீரென அமுங்கி மீன்களைக் கவ்வி மேல் எழுகின்றன. இப்படித்தான் மேரியும் என் உள்ளத்தைக் கவ்விக் கொண்டாளோ? ராசன் மனதுக்குள் சிரித்துக் கொள்கிறான். மீனவர்களின் நண்பர்களான ஓங்கில் பறவைகள் வானில் சுதந்திரமாய்ப் பறந்து படகுகளுக்கு திசைகாட்டிச் செல்லுகின்றன. அவை போலத் தாமும் சுதந்திர புருசர்களாகவும் வாழ்வுக்கு அர்த்தமளிப்பவர்களாயும் வாழ வேண்டும் என்ற வேட்க்கை அவன் உள்ளத்தில் என்றுமில்லாது தோன்றுகிறது. காதல்தான் எத்தனை வலியது. சாதாரன மனிதனைக் கவிஞனாக மட்டுமல்ல சிந்தனை வாதியாகவும் மாற்றும் இரசவாதம் அதற்கு உண்டோ...? ராசன் மேரியின் தரிசனத்தை உள்ளத்தில் வைத்து ஆராதிப்பதாலேயே மவுனமாக வருகிறான் என்பது கபரிக்குப் புரிகிறது. அவனது மோன தவத்தை அதிகம் குலைக்க விரும்பாதவனாய் இடைக்கிடையே சீண்டுவதோடு விட்டு விடுகிறான். அதனால் அவன் அன்றனியோடேயே அதிகம் பேச்சுக் கொடுக்கிறான். அவ்விருவரதுப் பேச்சிலும் இளைஞருக்கேயுரிய கிண்டலும் கேலியும் இழையோடிக் கிடக்கின்றன. டேவிட் கலகலப்பாகப் பேசும், பழகும் சுபாவம் இல்லாதவன். அவனே அந்த அறுவர் கொண்ட குழுவுக்குத் தலைவன் போலவும் செயற்பட்டு வந்தான். காத்தமுத்துச் சம்மட்டியாருக்கு அவன் மீது அதிக நம்பிக்கை. அவனும் அந்த நம்பிக்கையை ஒரு போதும் இழக்க விரும்பியதில்லை. அதனால் அவன் மற்றவர்களை விடச் சம்மட்டியாரிடம் அதிக சலுகைகளையும் பெற்று வந்தான். அலையசைவுக்கு எற்பப் படகு ஆட அந்த ஆட்டத்துக்கு இணைந்து ஒத்திசைவாகத் தானும் அசைந்து படகினை இயக்குவதிலேயே டேவிட்டின் கவனம் முழுவதும் குவிந்திருந்தது. சூசையும் டானியலும் ஊர் உலகத்துக் கதைகளை அசை போட்டுக் கொண்டு வந்தார்கள். மதியம் அளவில் அவர்கள் ஆழ்கடலை அடைந்து விட்டார்கள். கபரிக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது.. “சாப்பிட்டிட்டுத் தொழிலைத் தொடங்குவம்” என்ற அவனது முன்மொழிவை அந்த நேரத்தில் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். தங்கள் தங்கள் பாசல்களைப் பிரித்து ஒருவரோடு ஒருவர் பரிமாறிச் சாப்பாட்டைத் திருப்தியாக முடித்துக் கொண்டார்கள். மேரியின் கைப்பாகம் தனிச்சுவை தருவதாக ராசன் எண்ணிக் கொண்டான். சாப்பிட்ட பின் சிறிது நேரம் கூட ஓய்வு எடுக்க டேவிட் விடவில்லை. நீண்ட நேரம் கடலில் நிற்பது கூட உகந்ததில்லை என்ற எண்ணமும் அவன் தொழிற்படக் காரணமாய் இருந்தது. டேவிட் வலையை எடுத்துக் கடலில் வீசத் தொடங்கி விட்டான். அவனுடன் மற்றவர்களும் இணைய வேண்டியதாயிற்று. வழமைக்கு மாறாக அன்று அவர்களது வலையில் மீன்கள் அதிகம்பட்டன. அது அவர்களுக்கு பெரும் திருப்தியையும் உற்சாகத்தையும் தந்தது. நேரம் போவது தெரியாமல் தொழில் ஆழ்ந்து போனார்கள். நேரம் நடுனிசியைத் தொட்டது. இருளின் கனதியில் ஆழ்ந்திருந்த கடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில மீனவர்களது படகுகள் புள்ளி வடிவில் தென்பட்டன. அவை பெரும்பாலும் இந்திய மீனவர்களுடையதாக இருக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டார்கள். துணிச்சல் கொண்ட ஒரு சிலரைத் தவிர ஈழத்து மீனவர்கள் இரவில் மீன்பிடிப்பதைக் கடந்த சில ஆண்டுகளாய்த் தவிர்த்து வந்தமையே அந்த எண்ண ஓட்டத்துக்குக் காரணமாய் அமைந்து இருந்தது. ஆழ்கடலில் அலை கூட அதிக ஆரவாரம் இல்லாமல் அமைதியாக இருப்பது போலத் தோன்றியது. அங்கு நிலவிய நிசப்த்தம் அதிக நேரம் நீடிக்கவில்லை. இரவின் அமைதியை விரட்டியபடி கெலிகொப்டர் ஒன்று இவர்களது படகைக் குறிவைப்பது போல மேலே சுற்றிவிட்டு வானில் மறைகிறது. அதன் வருகை நல்ல அறிகுறியாகப் படகில் இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. இதுவரை உற்சாகமாகத் தோழிலில் கண்ணாயிருந்தவர்களை அச்சம் இறுக்குகிறது. “என்ன டானியல் கோதாரியிலே போறவங்கள் வந்திட்டுப் போறாங்கள்...?” சூசையின் குரலில் கலவரம் அப்பட்டமாகத் தெரிகிறது. உள்ளத்தில் திடுக்குற்றாலும் பதறாது முடிவுகளை எடுக்கிறான் டேவிட். “அது அவங்கள் சும்மா போறாங்கள். நீங்கள் கவலைப் படாதுங்கோ... எதுக்கும் நாங்கள் இன்னும் பத்து நிமிசத்தில திரும்புவம். அன்றனி ராசன் வலையை உள்ளுக்குள்ள கெதியில இழுங்க.” அவர்கள் மிக வேகமாக வலையை உள்ளிழுத்த போதும் அவர்கள் கண்கள் மட்டும் நாற்திசையும் சுழன்று படகு ஏதாவது வருகிறதா என்பதையே அவதானிக்கின்றன. காங்கேசன் துறைப்பக்கமாகப் புள்ளி வடிவில் தோன்றிய அந்தப் படகு கொஞ்சம் கொஞ்சமாய் வியாபித்துப் பெரிதாகி வருவதை முதலில் கபரியேலே காணுகிறான். “அங்க பாருங்கோ நேவியின்ற பீரங்கிப் படகொண்டு வருகுது.” கிலியுடன் கபரி காட்டிய திக்கை எல்லோரும் நோக்குகிறார்கள். அந்தப் படகு இவர்கள் போட்டை நோக்கி மிகவேகமாக வருவது மட்டும் இவர்களுக்குத் துல்லியமாகத் தெரிகிறது. அதிர்ச்சியில் ஒருகணம் உறைந்து போனவர்கள் படகை மிக வேகமாகத் திருப்பிக் கரைக்குச் செல்ல எத்தனிக்கிறார்கள். ஆனால்...சாதரண மீனவப் படகால் அதிவிரைவான, ராடர் முதலிய நவீன கருவிகள் பூட்டப்பட்ட பீரங்கிப் படகுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. நேவி போட் அவர்களது போட்டுக்கு சிறிது தூர இடைவெளிக்கு வந்து விடுகிறது. அங்கு இருந்தவாறே மேல் வெடி வைக்கிறது. ஆயுததாரிகளான புலிகள் படகாக இருக்குமானால் ஒன்றில் எதிர்த்துத் தாக்குவார்கள். அல்லது தங்களை அழித்துக் கொள்ளுவார்கள். இதனை உறுதி செய்யவே இந்த இடைவெளி என்பது படகில் இருப்பவர்களுக்கு நன்கு புரிகிறது. மேலே வெடித்துச் சிதறும் றவைகள் இன்னும் சிறிது நேரத்தில் தங்கள் நெஞ்சுகளைப் பதம்பார்க்கப் போகின்றன என எண்ணும் போதே பயத்தால் உடலும் உள்ளமும் ஒருங்கே நடுங்குகின்றன. தங்கள் முன்னே தத்தளித்துக் கொண்டிருக்கும் படகு மீன்பிடிப் படகுதான் என்பதைத் தொலைநோக்குக் கருவியாலும் உறுதி செய்து கொண்டு தமது படகை மீனவர் படகிற்கு மிக அருகில் கொண்டு வந்து முற்றுகையிடுகிறார்கள். ஒரு நேவி ஏ,கே 47 ஐ நீட்டிய வண்ணம் இவர்கள் படகுக்குத் தாவுகிறான். உழைப்பினால் உறுதியான கட்டுமஸ்தான உடற்கட்டுடன் காணப்பட்ட இளைஞர்களைக் கண்டவுடன் ஏற்கனவே குடியினால் சிவப்பேறியிருந்த அவன் கண்கள் சினத்தால் மேலும் கோரம் அடைகின்றன. தமிழ் இளைஞர்கள் யாவரையுமே புலிகளாகவே காணும் படையினரின் குரோதம் விழித்துக் கொள்ள தனது துப்பாக்கியைக் கபரியின் நெஞ்சினை நோக்கி அழுத்திப் பிடிக்கிறான் அவன். “ஐயோ என்ற மகன்...அவன் அப்பாவி...” கதறியபடி முன்வந்த சூசையை ஒரு கையால் நெட்டித் தள்ளுகிறான் நேவி. தடுமாறி விழுந்த சூசை நரகத்துக்கே தான் தள்ளப்பட்டதாக உணருகிறான். “நாங்கள் மீன்பிடிகாரர். இங்க பாருங்கோ மீன்தான்”. தனக்குத் தெரிந்த சிங்களத்தில் தங்கள் நிலையினை நிரூபிக்க முற்பட்ட டேவிட் துவக்குப் பிடியால் தாக்கப்படுகிறான். அடி பலமாக முழங்கையில் படவே அதில் இரத்தம் சொட்டுகிறது.. தலை விறுவிறுத்து மயக்க நிலைக்கு உள்ளாவது போல் தோன்றுகிறது டேவிட்டுக்கு. இதற்கிடையில் படகில் மேலும் இரண்டு படைகள் குரங்குகள் போல் தாவுகின்றன .ராசன், அன்றனி, ஆகியோரின் நெஞ்சுகளை நோக்கி அவர்கள் துப்பாக்கிகள் நீளுகின்றன. கைகள் இரண்டையும் உயர்த்திப் பலிக்கடாக்கள் போல் உறைந்து நிற்கும் இளைஞர்களைப் பார்க்கப் படைகளின் உள்ளதில் கருணைக்குப் பதில் குரோதம் குமுறி எழுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் புலிகளிடம் சிக்கி உயிரிழந்த இருபது படையினருக்காக பழிவாங்க அவர்கள் மனம் துடித்துக் கொண்டிருந்தது. “தமில் பள்ளா.. கொட்டிப் பள்ளா... “ புரியாத தூசனை வார்த்தைகள் தாராளமாய் இளைஞர்களின் காதுகளை துவேசிக்கின்றன. எதிரியை உடலால் மட்டுமன்றி வார்த்தைகளாலும் முகத்தில் எச்சிலை விசிறி அவமானப்பாடுதும் கோரம் அங்கு பல்லிலித்துக் கொண்டிருந்தது. வார்த்தைகள் கூட பொங்கி எழும் குரோத உணர்வுக்கு வடிகாலமைக்கப் போதவில்லைப் போலும். துவக்குக் கத்தியால் இளைஞரின் நெஞ்சுகளைக் கீறி இரத்தக் கோலமிட்டு இரசிக்கிறது படை. அவர்களின் வேதனை கண்டு துடிக்கும் முதியவரின் கதறல் வெறியை மேலும் கூட்டும் பறையொலியாகவே படைக்குப் படுகிறது. இளைஞர்களைச் சுடுவதத்கு துவக்கின் நாக்கை இழுக்கச் சென்ற நேவியின் கரங்கள் கப்றனின் கட்டளையால் செயல் இழக்கின்றன. “இவங்களைக் காம்பில கொண்டு போய் விசாரிப்பம்.” கப்றனின் கட்டளையின் உள் அர்த்தத்தைப் புரிந்தவராய் படையினர் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரிக்கிறார்கள். நிராயுதபாணிகளான அவர்களைச் சம்பவ இடத்தில் வைத்துச் சுடுவதிலும் சித்திரவதை செய்த பின் சுடுவதில் அதிக சுகம் இருப்பதாக அவர்கள் கருதியதன் வெளிப்பாடுதான் அந்தச் சிரிப்பு என்பதை அங்குள்ளவர்களால் ஊகிப்பது கடினமாக இருக்கவிலை. தங்கள் உயிர் சிறிது நேரத்தில் பந்தாடப்படப் போகிறது என்பது இளைஞர்களுக்கு இப்பொழுது பொருட்டாகத் தெரியவில்லை. உயிரோடு அவர்கள் செய்யப் போகும் சித்திரவதை... நிமிடத்துக்கு நிமிடம் சாவின் எல்லையைத் தொட்டு வரும் அவலம்... உள்ளங்காலில் இருந்து உச்சம்தலை வரை பயம் ஊடுருவி உடல் விறைத்து நீள்வது போல் உணர்கிறார்கள். எத்தனையோ கெஞ்சல்கள். கதறல்கள். நிரூபிப்புக்கள் எவையும் பயன் தராத நிலையில் மூன்று இளைஞர்களும் படகு மாற்றம் பெறுகிறார்கள். அன்றைய உழைப்பான மீன்கள் முழுவதும் நேவியால் கொள்ளையிடப்படுகின்றன. தனது படை புலிகளிடம் வாங்கும் அடிகளுக்குக் களத்தில் நின்று சரியான பதில் கூறமுடியாத அவலத்துக்கு அப்பாவிகளைத் துன்புறுத்துவதன் மூலம் வடிகால் தேடிக்கொள்வது படையின் வழமையாகி விட்டது. தங்கள் பிள்ளைகள் தங்கள் கண்முன்னாலேயே காலனிடம் பறிபோவதைத் தடுக்கமுடியாத அவலம் முதியவர்களின் கண்களில் கண்ணீராக வடிகிறது. ஏக்கத்துடன் தம் பிள்ளைகளை அவர்கள் பார்த்து நிற்கிறார்கள். இளைஞர் மூவருக்கும் தங்கள் வேதனைக்கு அப்பால் தங்கள் இழப்பு கண்டு துடிக்கப் போகும் உறவுகளின் முகங்கள் தோன்றி உள்ளத்தை உருக வைக்கிறது. குமுறிவரும் அழுகையை உதடுகளை இறுகப் பல்லால் கடித்து அடக்கிக் கொள்கிறார்கள். இப்பொழுது படகு தள்ளாடியபடி கரை நோக்கிப் பயணிக்கிறது. மீன்களின் பாரத்தல் அல்ல. முதியவர்களின் மனப்பாரத்தால். கடல்மட்டும் எப்பொழுதும் போல அமைதியாக இரவின் நிசப்தத்தில் ஆழ்ந்துகிடக்கிறது. ( தொடரும்)
|
முகப்பு |