........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
2 |
|
a |
குறுந்தொடர் கதை கடல்
வாசுகி நடேசன் 6. விடுதலைக்காக...!
“அம்மா...அம்மா...” மேரியின் தொண்டைக்குள் மீன் முள் குத்தியது போலக் குரல் தடுக்கிறது. “ஒம் பிள்ளை” தவிப்புடன் மேரியை நோக்குகிறாள் மரியம்மா. “அம்மா...நான்... நான்...” “என்ன பிள்ளை சொல்லன்...” “அம்மா நான் போட்டு வாரன்.” மேரியின் குரலில் இப்பொழுது உறுதி. அது மரியம்மாவை ஏதோ செய்கிறது. அவள் வேதனையுடன் மேரியின் கைகளைப் பற்றுகிறாள். “எங்க பிள்ளை... நீயும் என்னை விட்டுட்டுப் போகப் போறாயோ...?” அவள் கண்கள் மகளிடம் எதையோ யாசிக்கின்றன... “ ஓம் அம்மா...” தாயின் தவிப்பு மேரியின் உறுதியான முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. “ எதுக்குப் பிள்ளை போறாய்,,,?” தாயின் இந்தக் கேள்வி மேரியிடம் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. ஆனாலுமவள் பதில் கூறுகிறாள். “விடுதலைக்காக...” மரியம்மாவின் கண்களில் திடீரென ஒளி கூடுகிறது. “அப்ப உன்ற கொண்ணனையும் விடுவிப்பியோ...?” அவள் ஆர்வத்துடன் மகளின் முகத்தைப் பார்க்கிறாள். மேரி இக் கேள்வியைச் சற்றும் எதிர் பார்க்கவில்லை.அவள் உள்ளத்தின் தடுமாற்றம் கண்களில் பட்டுத் தெறிக்கிறது. இந்தக் கேள்விக்கு மேரியால் எப்படிப் பதில் சொல்ல முடியும். அவள் மௌனமாகிறாள். “ஏன் பிள்ளை பேசாமல் நிக்கிற சொல்லன். கொண்ணனையும் விடுவிப்பியோ...?” மரியம்மா ஆவேசம் கொண்டவள் போல் மேரியிடம் திரும்பத் திரும்பக் கேட்கிறாள். மேரி பதில் ஏதும் கூறாதவளாய்... கூறமுடியாதவளாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகிறாள். “என்ற ராசனையும் விடுவிப்பியோ...? என்ற ராசா கபரி...” மரியம்மாவின் அழுகுரல் மேரியைத் துரத்திச் செல்கிறது. மரியம்மாவால் கபரியேலை மறக்க முடியவில்லை. அவனது மறைவு அவள் உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து போனாலும் அவ்வப்போது மேல் வந்து அவளை வேதனைப் படுத்துவது வழமைதான். ஆனால்... சுனாமி அனர்த்தத்தின் பின் மரியம்மாவின் மனச்சமநிலை குலைந்த நிலையில் ஆழ்மன எண்ணங்களே ஆட்சிபுரிந்தன. காலத்தால் ஆற்றப்பட்டதாக எண்ணிய புண்கள் மீண்டும் கோரமாய் தாக்கப்பட்டு அதில் சீழும் இரத்தமும் கசிந்து கொண்டிருந்தன ( தொடரும்)
|
முகப்பு |