........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-49

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

49. உழைப்பும் வாய்ப்பும் வீணாகலாமா?

நாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே எதையாவது செய்து விட்டு, பின்னால் இப்படிச் செய்து விட்டோமே என்று பலரும் வருத்தப்படுகிறார்கள். எந்தச் செயலையும் செய்யும் முன்பு அது குறித்து எந்த ஆலோசனையுமின்றி எவரிடமும் கலந்தாலோசிக்காமல் தன் விருப்பப்படி செயல்படுகின்றனர். இதனால் இவர்கள் கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்தாமல், அதனால் வரும் இழப்பையும் சேர்த்துச் சுமக்கின்றனர். மேலும் இவர்கள் யாரிடமும் நல்ல பெயர் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இந்தத் தவிப்பால் இருப்பதையும் இழக்கின்றனர்.

தன் விருப்பத்தின்படி செயல்படும் பலர் அடுத்தவர் சொற்களை ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் இவர்கள் செயலுக்கு எவ்விதமான எதிர்ப்பையும் விரும்புவதில்லை. தன்னிச்சையாகத் தான் செய்யும் செயலே சரி என்று செயல்படுகிறார்கள். இவர்கள் உழைப்பும், இவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பும் இவர்களாலேயே வீணாய்ப் போய்விடுகிறது. எல்லாம் முடிந்து ஏமாளியாகி விட்ட பின்பு தான் அப்படிச் செய்திருக்கலாமே, இப்படிச் செய்திருக்கலாமே என்று நினைத்து மனவருத்தம் அடைகிறார்கள். இந்த மனவருத்தத்திலிருந்து மீள முடியாமல் தளர்ந்து போய் விடுகிறார்கள். இது சரியா?

மீனவன் ஒருவன் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து விட்டான்.

அது கடலுக்குப் போகிற அளவுக்கு சூரிய வெளிச்சமில்லாமல் இருந்தது. சரி இன்று வேகமாகப் போவோம் என்று நினைத்தபடி வீட்டிலிருந்து மீன்பிடிச் சாதனங்களுடன் கடலை நோக்கிச் சென்றான்.

அப்படிப் போய்க் கொண்டிருந்த போது துணிப்பை ஒன்று காலில் இடறியது.

அந்தப் பையை எடுத்துப் பார்த்த அவன் தன்னுடன் வைத்துக் கொண்டான்.

படகில் தான் கொண்டு வந்த பொருளையும் அந்தத் துணிப்பையையும் வைத்தான்.

படகு செல்லத் தொடங்கியது.

துணிப்பையைப் பிரித்தான் அதிலிருந்த கற்களில் ஒவ்வொன்றாய் எடுத்துத் தண்ணீருக்குள் போட்டுக் கொண்டே வந்தான்.

கடைசிக் கல்லைத் தண்ணீரில் வீசப் போனான். சூரிய வெளிச்சத்தில் அந்தக் கல் மின்னியது.

அப்போதுதான் தெரிந்தது அது வைரக்கல் என்று.

அவன், "சே! இவ்வளவு நேரம் நான் கல்லுன்னு நினைச்சு வைரத்தைக் கடலில் வீசி எறிந்து விட்டேனே" என்று வருத்தப்பட்டான்.

எந்தச் செயலுக்கும் முன் யோசனை ஒன்று வேண்டும். அந்தச் செயலுக்குப் பலரின் ஆலோசனையும் வேண்டும். அப்படியில்லாமல் தன் வழி தனி வழி என்றிருப்பவர்களுக்கு நல்ல பெயர் மட்டுமில்லை, நல்ல நிலையும் நீடிப்பதில்லை.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-48                                                                                                                           வழிமுறை-50 

                              

 
                                                                                                                                                                                                                 முகப்பு