........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 214

ஜனநாயகக் கடமை...?

மலர்வனத்தில் பூப்பது போல்
பல வர்ணக் கொடிகளெல்லாம்
காற்றினிலே பறக்குதமா !

நினைவு தெரிந்த நாள் முதாலாய்
நிறைந்து விடும் வயிறென்ற
வாய்மொழியை ஏற்றுக் கொண்டு
வாக்குகுகளின் வழியாக
கோட்டைக் கதவுகளைத் திறந்த
ஒரு கையின் சொந்தக்காரன்

தலைமுறைகள் பல இங்கே
வந்து போனதம்மா
வாக்குக் கேட்க வாந்தோர்கள்
வரும் வாகனங்களின் வகைகள்
மாறியதேயழிய என்றும் எம்
வாழ்க்கையது மாறவில்லை

தேர்தல் வருகுது ! தேர்தல் வருகுது !
குடுகுடுப்பைக்காரன் கையில் கிடுகிடுக்கும் உடுக்கை போல , ஊடகங்கள் யாவும்
உறக்கமின்றி அலறுதம்மா
உண்ணுவதற்கு உணவுதேடி
என் வீட்டுத் திண்ணையிலே
ஏக்கத்துடன் அழுகின்ற குழந்தையின்
கண்ணீரைத் துடைக்கும் போதுதான்
பார்க்கின்றேன்......
வாக்குச்சாவடியில்
பூசிய அடையாள
மையின் நிறத்தை......

மணப்பந்தல் போல அலங்கார மேடை
மாலைசூடிய மகத்தான தலைவன்
மீண்டும் மீண்டும் தாராளமாய்
வாக்குறுதிகள் வீசுகின்றார்.

அதோ அந்த கடற்கரையினிலே
காற்றினிலே அறுந்த பட்டமென
பறக்கின்றதே ! ஓ அது.....
போன தேர்தலின் வாக்குறுதிகளோ ?

பசிமயக்கம் கண்ணைச் சுழட்டுது
கதறும் குழைந்தைகளின் ஓலம்
காதுகளில் வலியை கரைத்து ஊற்றுகின்றன
காய்ந்த கண்ணீர்க் கோடுகள்
கன்னத்தில் கவலையின்
வரைபடத்தை அழகாய் வரைந்துள்ளன.

சரி! நேரமாகிவிட்டது
நாளை வாக்களிக்க வேண்டும்...
தூங்கப் போகிறேன்... ஏனெனில்
ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது
ஒவ்வொரு மனிதனினதும்
சமுதாயக் கடமை...!

ஆனால்...
அவர் வயிற்றுக்கு
ஒருவேளை சோறிடுவது
யார் கடமை ....?
படித்தவர்களே !
கொஞ்சம் சொல்வீர்களா...? 

-சக்தி சக்திதாசன், லண்டன்.
 

 
m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.