........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-63

குங்குமப்பூ அழகா? ஆரோக்கியமா?

ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே. இதற்காகக் குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம் போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.

குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5-ஆம் மாதத்திலிருந்து 9-வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள். இது நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

குங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil - Kungumapoo
English - Saffron
Malayalam - Kunguma Poo
Telugu - Kumkuma poova
Sanskrit - kumkuma
Botanical Name - Crocus sativus

இது குமராஸ் இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்த தாள்களே ஆகும். செம் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் நிறம் மாறும். இந்த குங்குமப் பூவானது வடமேற்கு நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிராகிறது. ஒருவித வாசனையோடு சிறிது மினுமினுப்பாய் தோன்றும்.

விந்துநட்டந் தாகமண்டலம் மேகசலஞ் சூலைகபம்
உந்துசுரம் பித்தங்கால் உச்சிவலி - முந்துகண்ணில்
தங்குமப்பூ வோடுறுநோடய் சர்த்தியவை நீங்கவென்றால்
குங்குமப் பூ ஓரிதழைக் கொள்  (அகத்தியர் குணபாடம்)

குங்குமப் பூவைக் கண்டால் கூறுகொண்ட பீனசநோய்
தங்குசெவித் தோடஞ் சலதோடம் - பொங்கு
மதுரதோ டந்தொலையும் மாதர் கருப்ப
உதிரதோ டங்களறும் ஒது (அகத்தியர் குணபாடம்)

இரத்தம் சுத்தமடைய

குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் முதல் 9 ஆம் மாதம் வரை கொடுப்பார்கள். இரத்த சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.

குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின் போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு

பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.

மேலும் சில பயன்கள்

  • குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.

  • குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.

  • கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

தரமான குங்குமப்பூ 1 கிராம் சுமார் ரூ.500/-க்கு விற்பனையாகிறது. போலி குங்குமப்பூவும் சந்தையில் மலிவான விலையில் கிடைக்கிறது. உண்மையான குங்குமப்பூவைத் தேர்வு செய்து வாங்குவதில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. உண்மையான குங்குமப்பூவைத் தேர்வு செய்து வாங்கிப் பயனடையலாம்.

-ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.

ஜெயஸ்ரீ மகேந்திரன் அவர்களது மற்ற படைப்புகள

   முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.