
"தற்போது எங்கு நோக்கினும் சுற்றுச் சூழலைப்
பாதுகாப்போம். மரம் வளர்ப்போம், மழை பெறுவோம். புவி வெப்பமயமாதல்; . பசுமைக்
குடில் வாயுக்கள் என்றெல்லாம் முழக்கங்கள் - தொடரோட்டங்கள். திடீர் திடீரென
அரசின் மரம் நடுவிழாக்கள். இன்னும் என்னென்ன முடியுமோ அத்தனை கூச்சலும்
குழப்பமும்.
ஆனால் உண்மையில் நடப்பதென்ன? எங்காவது யாராவது நட்ட மரம் வளர்ந்ததைப்
பார்த்துள்ளோமா? அல்லது நாமாவது ஒரு மரமாவது நட்டு வளர்க்க முயல்கின்றோமா?
இல்லையே.
சரி நம்மால் வளர்க்க முடிவதில்லை. இருப்பதற்கே இடம் இல்லை எனும் போது மரம்
வளர்க்க நாம் இடத்திற்கு எங்கே போவது?என்று கூறலாம்.
ஆனால் எல்லா வசதிகளும் உடைய அரசோ, பொது மக்களோ மரம் வளர்க்க சிறு முயற்சியாவது
செய்திருக்கின்றார்களா என்றால் இல்லை என்ற பதிலைத்தான் வருத்தத்துடன் கூற
வேண்டியுள்ளது.
சில ஆண்டுகட்கு முன்னர் தங்க நாற்கரச்சாலை ஒன்று அமைக்கப்பட்டது.
சென்னையிலிருந்து கல்கத்தா, கல்கத்தா தில்லி, தில்லியிலிருந்து மும்பை,
மும்பையிலிருந்து சென்னை என்று சுமார் 25,000 கிலோமீட்டர் தொலைவு வரை ஒரு
பெருஞ்சாலை அமைக்கப்பட்டது. எத்தனை லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டதோ அரசுக்கே
வெளிச்சம். முதலில் நான்கு வழிப்பாதையாக அமைக்கப்பட்ட அது தற்போது ஆறு
வழிப்பாதையாகவும் உருவெடுத்து வருகின்றது.
இதனால் இந்தியா முழுதும் போக்குவரத்து வசதி பெருகியது. பொருட்களை எடுத்துச்
செல்வதும் பெருகியது. பொருளாதார மேம்பாடு தொடர்கின்றது. இன்னும் என்னவெல்லாமோ
பற்பல பயன்கள் கிட்டியது. நாட்டு முன்னேற்றத்திற்கு பலவிதத்திலும் பயன்படும்
சாலைகள் அவை என்ற
கோசங்கள் முன் வைக்கப்பட்டன. இது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட
வேண்டிய ஒன்றே எனலாம். பல சிறு பெரு நகரங்களிலும் எழுந்துள்ள பிரமாண்டமான சாலை
மேம்பாலங்களைப் பார்க்கும் போது பெருங்கற்கோட்டைகளைப் போன்றே காணப்படுகின்றன.
போக்குவரத்தும் எளிமையாகி உள்ளது. இதெல்லாம் ஒத்துக் கொள்ளக் கூடியதே.
ஒரு
வளரும் நாடு என்றால் இவையனைத்தும் தேவை. உள்கட்டமைப்பு வசதிகள் நமக்கும் தேவை,
நம் நாட்டில் முதலீடு செய்யத் துடிக்கும் வெளிநாடுகளுக்கும் தேவை. பல பகுதிகளில்
நகரங்களும், கிராமஙக்ளும், ஊர்களும் இரு பிரிவாகப்
பிரிக்கப்பட்டுள்ளதையும்
காண்கின்றோம்.
ஆனால், சாலையின் இருமருங்கிலும் நம்
மூதாதையர்கள் நட்டு வைத்து கண்ணீரும்,
செந்நீரும், ஏன்? சிறுநீரும் பெய்து வளர்த்த புளிய மரங்கள்
எங்கே? யாருடைய
பேராசைக்கு அவை பலியாயின. இருபுறச் சாலைகளிலும் பல்லாயிரக்கணக்கான விளைநிலங்கள்,
பலருடைய வீடுகள், வழிபாட்டிடங்கள் எல்லாம் மறைந்தன. ஆனால்
மரங்கள்? எத்தனை
லட்சம் என்றே யாருக்கும்
தெரியாது. அரசுக்கும் இது
தெரியுமா என்பதும்
கேள்விக்குறிதான்.
அசோகர் மரங்களை நட்டார் என்று நாம் நம்முடைய வரலாற்றுப் பாடங்களில் சொல்லிக்
கொடுத்து விட்டு அம்மாணவர்களின் கண்ணெதிரிலே இத்தனை லட்சம் மரங்களை பலி கொடுத்து
விட்டு, சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுவதால் என்ன
பயன்?
மேலும் பல கல்வி நிலையங்களில் அம்மாணவர்களை விட்டே மரம் நடச் சொல்வதால் அவர்கள்
மனநிலை என்னவாகும் நாம் யோசிப்பதே இல்லை. ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக ஒரே மரத்தை
நடும் விந்தையையும் காண முடிகின்றது. இதனால் மாணவர்கள் மனத்தில்
பெரியோர்களில்
சொல் பற்றி என்ன வகையான மதிப்பீடுகள்
ஏற்படும்? புரியவில்லை. சில இடங்களில்
மரங்கள் அதிகம் வளர்ந்து விட்டதாகக் கூறி, அம்மரங்களை வெட்டி விட்டு பின்பு
மீண்டும் மரம் நடுவிழா நடத்தும் கேலிக்கூத்தும் அரங்கேறுகின்றது.
எனக்குத் தெரிந்த ஒருவர் இத்தகைய மரம் நடு விழாக்களில் மிக்க ஆர்வம் கொண்டவர்
போலக் காட்டிக் கொள்வார். ஆனால் தன் வீட்டில் நிழல் மறைத்து துணிகளைக் காய
வைக்க முடியவில்லை என்று கூறி ஓங்கி வளர்ந்திருந்த ஒரு பெரும் வேப்பமரத்தை
வெட்டிச் சாய்க்க வைத்தார். இதுதான் மரம் நடு விழாக்களில் பங்கெடுப்போர் லட்சணம்
என்று மனத்திற்குள்’ நினைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இதுபற்றிப் பேசப்போனதன்
பலன் அவர் என்னிடம் பேச்சை நிறுத்தி விட்டார்.
சாலையோரப் புளியமரங்களை நாம் பல்வேறு வகையான சாலைப் பணிகளுக்காகவும், விளம்பரப்
பலகைகளுக்காகவும், நிழலைத் தருகின்றது என்ற காரணத்திற்காகவும், வீட்டு மனையாக்க
வேண்டியும், இன்னும் பல சொல்லப்படாத காரணங்களுக்காகவும் வெட்டிச் சாய்த்து
விடுவதால் மரங்கள் மட்டும் மறைவதில்லை. இதன் பின் விளைவை நாம் எண்ணிப்
பார்க்கிறோமா என்றால் இல்லை.
மரங்கள் நிழல் தரும், கனி, காய் தரும், சுற்றுப்புறச்
சூழலைப் பாதுகாக்கும், மழை
வளம் பெருக்கும் என்பன மட்டுமல்ல, பல்லுயிர்ப் பெருக்கத்திற்குக் காரணமான
பறவைகள் வாழ கூடும் வீடும் தரும். இவை மட்டுமல்லாது மனிதர்களுக்கு உணவளிக்கும்
பெரும் பணியையும் அவை செய்கின்றன.
சிந்தித்துப் பாருங்கள். இலட்சக்கணக்கான புளிய மரங்கள் வெட்டப்பட்டதால்
பின்னாளில் ஏற்படப்போகும் விளைவுகளை. தற்போது தமிழகம் முழுதும் விளைநிலங்களை
வீடாக்கிவிட்டு அரிசிக்கு அண்டை மாநிலங்களிடம் கையேந்துவதைப் போல இன்னும் சில
காலம் கழித்து தென்னக மக்களின் முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றான புளிக்கு
அனைவரும் எங்கே
போவோம்? புளியில்லா உணவு வகைகளைச் சாப்பிடுபவர்களா
நாம்?
சரி பல்லாண்டுகாலம் உயிர் வாழ்ந்த வானோங்கி வளர்ந்த நிழல் தரும் மரங்கள்
வெட்டப்பட்டு விட்டன. ஆனால் புதிய பயன் தரும் மரங்கள் நடப்பட
வேண்டாமோ? அதுதான்
இல்லை. சாலையோரங்களில் நிழல் என்பதே இனிக் கிடைக்காமல் போகலாம். மேலும்
பிளாஸ்டிக்கால் ஆன ஒரு கூரை ஒன்றை நட்டுவிட்டால் போதும். அதை நிழல் குடை என்றும்
சொல்லிக் கொள்வர். பிறகு எப்படி வெயில் குறையும் மழை நிறையும் என்பதெல்லாம்
பெரும் கேள்விக்குறிகளே...!
சாலையோரத்தில் புளிய மரம் நடும் போக்கைக் கைவிட்டு சாலை நடுவில் வெறும்
பூமரமாகிய அரளிப்பூ மரத்தை நட்டு வளர்க்கின்றனர். இந்தக் கொடுமையை எங்கே சென்று
சொல்லுவதோ? யாரும் இதைப் பற்றி அக்கறை காட்டுவதாகக் கூடத்
தெரியவில்லை.
ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் வெட்டப்படாமல் இருந்தால்,
அதனால் ஏற்படும் நன்மைகள்
என்னென்ன? ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை
மதிப்பு சுமார் 30 லட்சமாகும். பத்து ஏர்கண்டிசனர்கள் 24 மணிநேரம் ஓடுவதால்
ஏற்படும் குளிர்ச்சியை ஒருமரம் தனி நிழல்
மூலம் தருகின்றது. சுமார் 20
பேருக்குத் தேவையான பிராண வாயுவை ஒரு
ஏக்கரில் வளரும் மரங்கள் தருகின்றன.
-
பிராண வாயுவின் மதிப்பு - 4.00 இலட்சம்
ரூபாய்
-
காற்றைச் தூய்மை செய்வது - – 7.00 இலட்சம்
ரூபாய்
-
மண்சத்தைக் காப்பது - 4.50 இலட்சம்
ரூபாய்
-
ஈரப்பசையைக் காப்பது - 4.00 இலட்சம்
ரூபாய்
-
நிழல் தருவது - 4.50 இலட்சம்
ரூபாய்
-
உணவு வழங்குவது - 1.25
இலட்சம்
ரூபாய்
-
பூக்கள் முதலியன - 1.25 இலட்சம்
இது சற்றுப் பழைய கணக்கீடு. தற்போதைய நிலவரப்படி இது பதின் மடங்கு
அதிகரித்திருக்கலாம். ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்படாத மக்களால் இந்தியாவில்
சராசரியாக ஒரு நிமிடத்திற்கு
ஒரு ஏக்கர் நிலம் மொட்டையடிக்கப் படுகின்றன என ஒரு
கணக்கெடுப்பு கூறுகின்றது.
இந்தியாவில் 1952 ஆம் ஆண்டில் இருந்த காடுகள் சுமார் 23 சதவீதம். அதனை 33
சதவீதமாக ஆக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போதோ 10
சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளன. புதிதாக நடப்படும் மரங்களோ வெறும் யூகலிப்டஸ்
மரங்கள்தான். அவையும் அடிக்கடி காகித ஆலைகளுக்காகவும் வேறு பல தேவைகளுக்கும்
வெட்டப்படுகின்றது. இம்மரங்களோ நிலத்தடி நீர் மிகுதியாக உறிஞ்சப்பட்டு
நிலமகள் நீரிழக்கின்றாள்.
எனவே தற்போதைய வீண் கொண்டாட்டங்களையெல்லாம் புறம் தள்ளிவிட்டு பின்வரும்
தலைமுறையை வாழ வைக்கும் வகையில் மரங்களை நட்டு வளர்ப்போம். நம்மையும், நம் பின்
தலைமுறைகளையும் காத்திடுவோம் என்று அனைவரும் உறுதி மேற்கொள்வதே நாம் அனைவரும்
செய்ய வேண்டிய ஒரே செயல்.

எஸ்.இளங்கோவன்
அவர்களது பிற படைப்புகள்

முந்தைய மனம் திறந்து பார்க்க
