........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

மனம் திறந்து-64

சித்திரை முழுநிலவு நினைவுகள்

                                                                                                -சக்தி சக்திதாசன்.

சித்திரை பெளர்ணமி நாள். அன்னை எனும் தெய்வத்தை இழந்தோர்கள் புனிதநாளாக தமது அன்னையரை நினைந்து வழிபடும் நாள். இந்நாளில் நானும் எனது அன்னையின் நினைவுகளில் மூழ்குவதுண்டு. என்னடா இவன் சித்திரை பெளர்ணமி என்கிறான்! அன்னையின் நினைவுகள் என்கிறான்! ஆத்திகவாதத்தின் அடிமட்டத்திலிருந்து கூவுகிறானோ? என்றொரு எண்ணம் உங்கள் மனங்க‌ளில் ஏற்படக் கூடும்.

அன்னை எனும் தெய்வம் மதங்களைக் கடந்த ஒரு அன்பாலயத்தின் ஆத்மஜோதி. அந்த ஜோதிக்கு ஈடு இணையாக எதுவுமே கிடையாது. என் அன்னையின் நினைவுகளோ அன்றி அந்த நினைவுகள் கொடுத்த நிழல்களின் குளிர்மையால் விளையும் ஆனந்த அனுபவங்களோ என் நெஞ்சத்தை ஆக்கிரமிக்காத நாட்களே இல்லை எனலாம். இருந்தாலும் அன்னையரின் பெருமைகளை, அன்னையரை நோக்கி வழிபடும் கடமைகளை ஞாபகமூட்டும் நாட்களை எந்த மதமோ அன்றி எந்த மனிதரோ சுட்டிக் காட்டினாலும் அதை மிகவும் உன்னிப்பாக அவதானித்து ஒழுகக்கூடிய முறையில் ஒழுகுவது என் அன்னையின் மீது நான் காட்டும் அளவு கடந்த பக்திக்கு ஒரு முத்திரை எனும் எண்ணம் கொண்டவன் நான்.

என் அன்னை என்னோடு இப்புவியில் வாழ்ந்த காலங்களில் ஓர் உன்னதமான மகனாக எனக்குரிய கடமைகளைச் செய்திருக்கிறேனா? என்பது கேள்வியே! ஏனெனில் எனது மனதுக்குள் நான் எனது கடமைகளைச் சரிவரச் செய்திருக்கிறேன் என்று எண்ணினாலும் கூட என் அன்னையின் ஏக்கங்கள் அனைத்தையும் போக்கினேனா? என்பதை என் அன்னையே சொல்லக்கூடும். ஆனால் அவள் இப்போ காற்றோடு கலந்து விட்டாளே! ஆனால் என் அன்னையை அறிந்த மட்டும் நான் அவளுடைய ஏக்கங்கள் அனைத்தையும் போக்கி, லட்சியங்களை நிறைவேற்றியிருக்காமல் விட்டிருப்பினும் அதைச் சொன்னால் எங்கே எனது மனம் புண்பட்டு விடுமோ என்று சொல்லாது விட்டிருந்திருப்பாள்.

அதுதான் என்னுடைய தாயாரின் தாயுள்ளம். என்னுடைய தாய் மட்டுமல்ல அனைத்து தாய்மார்களினதும் அன்புள்ளம் அதுவே. அதுதான் தாய்மையின் மகத்துவம் தெய்வத்தின் அந்தஸ்தில் வைத்துப் போற்றப்படுகிறது.

இத்தகைய ஒரு உன்னத தினத்திலே என் அன்னையை எப்படி வழிபட்டால் என் மனம் திருப்தியடையும் என்று சிந்தித்தேன். எழுத்தே என் மூச்சு என்று கருதும் நான் என் மூச்சுக்காற்றின் கூறுகளை மலர்களாக்கி என் அன்னை என்னும் ஞாபகச் சிலையின் மேல் தூவி வழிபடுவதே சரி எனும் எண்ணத்தில் சில பக்கங்களைப் புரட்டினேன்.

பட்டினத்துச் செட்டி திருவெண்காடர் எனும் சித்தரின் ஞாபகம் வந்தது. அனைத்தையும் துறந்து துறவற‌ம் பூண்ட அவரின் அன்னை இப்பூவுலகை விட்டு மறைந்த போது,  வாழ்வைத் துறந்து துறவற‌ம் ஏகிய பட்டினத்துச் செட்டி வரமாட்டான் என எண்ணி ஊரார் அவர் தாயார் உடலை இடுகாட்டுக்குச் சுமந்து சென்று பாடையில் கிடத்தி விறகை அடுக்குகிறார்கள்.

என்னே ஆச்சரியம்! அந்த தாய்மையின் மகத்துவம் பட்டினத்தாரை விட்டு வைக்குமா என்ன? அங்கே நிற்கிறார் பட்டினத்தார். தன்னைச் சுமந்து பெற்ற தன் தாயின் பூவுடல் அவ்விறகுகளின் பாரத்தைத் தாங்குமா? என எண்னி அவ்விறகுகளை எடுத்து விட்டுப் பச்சை வாழை மட்டைகளை தன் தாயின் மேனி மீது அடுக்குகிறார்.

பட்டணத்துச் செட்டிக்கு பைத்தியம் தான்! வாழை மட்டையினால் தீ மூட்ட முடியுமா? ஊரார் வாய் கிசு கிசுத்தது,

பத்து மாதங்கள் அம்மா , நீயென்னை
பச்சை உடல் வருத்த‌
பக்குவமாய்ச் சுமந்தனையே!
பிள்ளையெனைப் பெற்றெடுத்த பொழுதினிலே
மலர்க் கைகள் தனிலே தாங்கி
பூ முலைகள் மூலம் பாலூட்டினையே தாயே!
நானுன்னைப் பார்க்கும் காலம்
இனியும் உண்டோ தெய்வமே!

-என்ற புலம்பலை அவர் பாணியில் பின்வருமாறு கூறுகிறார்.

ஐயிரண்டு திங்களாய் அங்கம் எல்லாம் நொந்துபெற்றுப்
பையல் என்ற போதே பரிந்து எடுத்துச் - செய்ய இரு
கைப்புறத்தல் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

அவர் மனம் ஆறவில்லை. முற்றும் துறந்த முனிவர் என்றால் என்ன? அவர் தாயும் அவரின் உறைவிடம் தானே, அன்பின் ஊற்றே அவர் தாய் தானே!

என்னைப் பெறுவதற்காய் என்
அன்புத்தாயே! நீ முன்பு
ஆண்டவ்னை வேண்டி தவமிருந்தாய்
அதையும் நான் அறிவேனே
வயிற்றினுள் எனத் தாங்கும் பாரம்
தாங்காமல் சரிந்து நின்று நீ
மாலையும் இரவும் சந்திக்கும் வேளையில்
மாபெரும் இறையை வணங்கியன்றோ!
என ஈன்றாய் அன்பு அன்னையே
உனதுடலை நான் எங்கனம்
எரியூட்டுவேன் சொல்லாயோ!

என்று கதறுகிறார் பாருங்கள்,

முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்தே
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.

ஒருநாள், ஒருவேளை எதையாவது சுமப்பது என்றாலே எம் மனம் பதைபதைக்கிறது ஆனால் அன்னையர் தமதுடலில் முன்னூறு நாட்கள் எமைச் சுமப்பது மட்டுமல்லாமல் எமக்காக . எம்மை நலமாக ஈன்றெடுக்க தாம் பத்தியம் காக்கின்றனரே அதற்கீடாகுமா? எதுவும் இவ்வையகத்தில்?

தோள்களில் சுமந்து, துளியில் தலாட்டி
கட்டிலில் வைத்து எத்துணை வகையில்
எம்மீது அன்பைச் சொரிந்து எமதன்னை
காக்கின்றாள்? முந்தானை என்னும் சிறகில்
மூடியல்லவோ எமை பாதுகாகின்றாள்
செல்வமகவென்றும் பார்ப்போரிடமெலாம் பாராட்டி
செழிப்பாக வளர்த்த என் அன்னையின் உடல் மீது
விறகை இட்டு அசலம் வளர்க்க முடியுமோ என்னால்?

ஞாபகங்களை எரித்து சித்தத்தை சீராக்கிய சித்தரின் மனதில் கூட அன்னையின் அன்பு விளையாடும் விதத்தைப் பாருங்கள்,

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்து என்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்.

தனது உடலை எனது அன்னை வருத்தினாள்
எதற்காகக் கேளீரோ!
எனை ஈன்று அன்புடன் தாலாட்ட அன்றோ!
கன்றை ஈன்ற தாய்ப்பசுவின் முலை முட்டி
கனலும் பசி தீர்க்கும் அத்தாயைப் போலல்லவோ
கனிவாக எனக்குப் பாலூட்டி வளர்த்த அன்னையவளுக்கு
நெருப்பால் அபிஷேகம் நான் செய்யத் தகுமோ?

ஆமாம் ஆசா, பாசங்களைத் துறந்து ஆதியும், அந்தமும் அற்றவனின் அடிதேடி ஓடிய அந்த அற்புதச் சித்தரின் மனதில் அன்பின் வித்தாம் தாய்மையின் பெருமைகள் கிளர்ந்தாடின வகையைப் பாருங்கள்,

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை
தந்து வளர்த்து எடுத்துத் தாழாமே - அந்திபகல்
கையிலே கொண்டு என்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யில் தீமூட்டு வேன்.
என்ன, என்ன‌ செல்லப் பெயர்களால்
என்னை அழைத்து, அணைத்து
உடுத்திய‌ழகு பார்த்த என் அன்புத் தாய்வளின்
உடலில் அழகு நகைகள் பூட்டி அலங்காரம் செய்து
பார்க்காமல் இன்று அவளின் வாய்க்குள்
இறுதி அரிசியை இரையாய்ப் போட முடியுமோ?

ஆமாம் வாழ்வெலாம் சோறுட்டிப் பார்த்த அந்தத் தாயின் வாயில் ஆக்காமல் போடும் வாய்க்கரிசிதான் நான் அவளுக்குப் போடும் இறுதிச் சாப்பாடோ எனக் கூப்பாடு போடும் பட்டினத்தார் வரிகளைப் பாருங்கள்,

அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசை இட்டுப் பார்த்து மகிழாமல் - உருசி உள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மகனே என அழைத்த வாய்க்கு.
ஒரு கை அரிசி எடுத்து அதையும் என் தாய்
தலிமேல் நான் போடுவதும் முறையோ ?
இருகை கொண்டு என் முகமதை அள்ளியெடுத்து
முழுமதியாம் அவள் வதனத்தின் மேல் வைத்து
கொஞ்சி மகிழ்ந்த என் அம்மா
அவளுக்கோ வாய்க்கரிசி நான் இடுவது ?

மீண்டும் தன்னைக் கொஞ்சி மகிழ்ந்த அன்னையின் இறுதிக்கடனை தான் முடிக்கும் வேளையில் எம் பட்டினத்துச் சித்தரின் மனதில் தன் தாய் தனைக் கொஞ்சி மகிழ்ந்த நினைவுகள் அலைமோதுவதை எப்படிக் கூறுகிறார் பாருங்கள்,

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே என அழைத்த வாய்க்கு.

நெஞ்சில் பொங்கி வந்த துயரத்தை, அன்புத்தெய்வத்தின் மறைவு கொடுத்த வேதனை இதயத்தை முட்டி மோதும் வகியை விளக்கும் அருமையான் பத்துப் பாடல்களைக் கொடுத்தும் பற்றவில்லை வாழை மட்டை. நகைத்தனர் ஊரார். கலங்கவில்லை நம் பட்டினத்தார். விருத்தத்தை விளாசினார்.

முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.

இதிலே கூறப்பட்டது என்ன?

முப்புறத்தையும் யார் பொசுக்கினாராம்? முக்கண்ணனார் முன்+ஜ ஆமாம் முதலும், முடிவுமற்ற ஆதிமூலமாகிய முக்கண்ணன் இட்ட தீ முப்புறத்தையும் பொசுக்கியதாம். பின்+ஜ, பின்னை ஆமாம் பெண் தெய்வமாகிய சீதாப்பிராட்டியின் தூய கற்புதான் இலங்கையில் தீயை இட்டது என்கிறார். அன்னையின் மறைவு கொடுத்த தீ அடிவயிற்றைக் கவ்வியது போன்ற அடக்க முடியாத் துயரம் சரி இச்சித்தன் இப்போது வைக்கும் இத்தீ மூளட்டுமே என்றது, அப்பச்சை வாழை மட்டை தீ பற்றிக் கொண்டதாம்.

அன்புள்ளங்களே! பட்டினத்தார் என்னும் அற்புதச் சித்தரின் அருமையான் பாடல்கள் பத்து அன்னையின் இறுதிக் கடனின் போது எமக்கீன்றவை அதனை எனது வரிகள் சில சேர்த்துத் தொகுத்துப் பார்ப்பது இச்சித்திரை பெளர்ணமித் தினத்திலே எனது அன்னைக்குச் செய்யும் ஓர் வழிபாடு என்னும் வகையிலே உங்களோடு இதைப் பகிர்ந்து கொண்டேன்.

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு