ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் நமது பாவ புண்ணிய கணக்குகள் சித்ரகுப்தனால் எழுதப்படுகிறது. எனவே சித்ரா பவுர்ணமியன்று சித்ரகுப்தனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். சித்ரா பவுர்ணமி அன்று காலை விரதத்தை ஆரம்பித்து சித்ரா குப்தாய என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
மாலையில் பவுர்ணமி நிலவு உதயமானதும் சித்ரகுப்தனுக்குப் பூஜை செய்ய வேண்டும். பிறகு ஏழைகளுக்கு முடிந்த அளவிற்கு தானம் செய்ய வேண்டும். பேனா, பென்சில், நோட்டு இவற்றைப் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்.பயத்தம் பருப்பு, எருமைப் பாலும் கலந்த பாயசத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
பின் உப்பு சேர்க்காமல் ஆகாரம் உண்டு விரதமிருந்தால் சித்ரகுப்தன் மகிழ்ந்து நம் பாவ புண்ணிய கணக்கை எழுதும்போது புண்ணிய கணக்கை அதிகப்படுத்தியும் பாவத்தைக் குறைத்தும் எழுதுவார். இதனால் மரணத்திற்குப் பின் நாம் நரகவேதனையிலிருந்து விலகி இறைவன் வாசம் செய்யும் சொர்க்கத்தில் வாழலாம் என்பது நம்பிக்கை.
இதற்கு ஒரு புராண கதை உண்டு.
சிறுவன் ஒருவன் படிப்பு வராமல் கெட்ட நண்பர்களோடு சேர்ந்து தவறான செயல்களில் ஈடுபட்டு முரடனாக மாறி இருந்தான்.
அதனால் வருத்தமடைந்த அந்தச் சிறுவனின் தாய் இறக்கும் தருவாயில், மகனிடம் ஒவ்வொரு, பவுர்ணமி அன்றும், சித்ர குப்தாய நம என்று சொல்லிக் கொண்டிரு. முடிந்தால் சித்ரா பவுர்ணமி அன்று காலை முதல் மாலை வரை சொல். உனக்கு சித்ரகுப்தனின் அருள் கிடைக்கும் என்று சொல்லி உயிரை விட்டாள்.
அதன் பிறகு, அந்தச் சிறுவன் வருடந்தோறும் சித்ரா பௌர்ணமி அன்று தன் தாய் சொன்னதைப் போலவே செய்து வந்தான்.
வயது ஏற ஏற அவனிடம் தீய பழக்கங்களும் அதிகரித்தது. ஆனாலும் சித்ர குப்தன் பெயரைத் தொடர்ந்து விடாமல் உச்சரித்து வந்தான்.
இந்தச் செயலால் சித்ரகுப்தனும் உளம் மகிழ்ந்து அவனின் காலக் கணக்கைப் புரட்டிப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்தான்.
அவன் மரணமடைய இன்னும் ஏழு நாட்களே பாக்கி இருந்தது. வாழ்நாளில் சித்ரகுப்தனாகிய தன் பெயரைச் சொன்னதைத் தவிர வேறு எந்தப் புண்ணிய காரியத்தையும் அவன் செய்திருக்கவில்லை.
அதனால் இரக்கம் கொண்ட சித்ரகுப்தன் அவன் கனவில் தோன்றி, முரடனே என் பெயரை உச்சரித்ததைத் தவிர வேறு எந்த நல்ல காரியங்களையும் நீ செய்யவில்லை. உனக்கு இன்னும் ஏழு நாட்களில் மரணம் நேரப்போகிறது. அதற்குள் உனக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு குளத்தை உண்டாக்கு. அதில் ஒரு மாடு தண்ணீர் குடித்தாலே மூணே முக்கால் நாழிகை வரை உனக்குச் சொர்க்கத்தில் இடமுண்டு. மரணமடைந்ததும் உன்னிடம் எமன், மனிதனே உன் குளத்தில் ஒரு மாடு தண்ணீர் குடித்ததைத் தவிர வேறு எந்த நல்ல செயலும் உன்னுடைய புண்ணிய கணக்கில் இல்லை. எனவே, முதலில் சொர்க்கத்தில் சிறிது நேரம் இருந்து விட்டு பின் நிரந்தரமாக நரகத்தில் இருக்கலாம். என்ன சொல்கிறாய் என்று கேட்பார். நீயும் அதை ஏற்று சொர்க்கத்துக்குப் போகச் சம்மதிக்கிறேன் என்று சொல் என்று ஆலோசனை கூறி மறைந்தார்.
முரடன் மறுநாளே குளம் ஒன்றை வெட்ட ஆரம்பித்தான். ஏழாவது நாளன்று குளத்தின் ஓரிடத்தில் சிறிய ஊற்று ஏற்பட்டது.முரடன் மகிழ்ச்சி அடைந்தான்.
ஒரு மாடு அந்த குளத்தில் இருந்த தண்ணீரைக் குடித்தது. சில நாட்கள் கழித்து முரடனின் உயிர் பிரிந்தது.
அவன் எமனின் முன் விசாரணைக்காக நிறுத்தப்பட்டான்.
அப்போது எமன் சித்ரகுப்தனை நோக்கி இந்த மானிடனின் பாவ புண்ணிய கணக்கைப் பற்றிச் சொல் என்றான்.
சித்ரகுப்தனும் "இவன் பெரும்பாவம் செய்தவன் ஆனால் ஒரே ஒரு புண்ணியம் மட்டுமே செய்திருக்கிறான். சாகும் முன் ஒரு குளத்தை வெட்டியிருக்கிறான். அதில் ஒரு மாடு மட்டுமே தண்ணீர் குடித்திருக்கிறது'' என்றான்.
இதைத்கேட்ட எமன் முரடனிடம் உனக்கு மூணே முக்கால் நாழிகை சொர்க்கத்தில் இடம் உண்டு. முதலில் சொர்க்க வாசம் அனுபவிக்கிறாயா அல்லது நரக வாசம் அனுபவிக்கிறாயா என்று கேட்டான்.
அந்த முரடனும் தனக்கு ஏற்கெனவே கனவில் சித்ரகுப்தன் கூறிய ஆலோசனைப்படி முதலில் சொர்க்க வாசமே வேண்டும் என்றான்.
இதற்கிடையே அவன் வெட்டிய குளத்தில் தண்ணீர் ஊற ஊற நிறைய மாடுகள் வந்து தண்ணீர் குடித்தன.
இதனால் அவனது புண்ணிய கணக்கும் ஏறிக்கொண்டே இருந்ததால் சொர்க்கத்திலேயே நிரந்தரமாகச் சுகமாக இருக்கலானான்.