கிறிஸ்துமஸ் பண்டிகை சமயம் ஒரு ரொட்டிக் கடையில் மிக அழகான வடிவில் பெரிய கேக் ஒன்றைச் செய்து கடையில் பார்வைக்கு வைத்தனர். விற்றால் முழு கேக்தான் விற்பனை செய்யப்பட வேண்டும். அதனைச் சிதைத்தால் அழகு போய்விடும் என்று கடை முதலாளி சொல்லியிருந்தார்.
அந்தக் கேக்கில் பாதியை விலைக்குக் கேட்டு ஒரு வாடிக்கையாளர் தொந்தரவு செய்தான்.
கடைப் பணியாள் எவ்வளவு மறுத்தும் கேட்கவில்லை.
"எல்லாம் கொடுக்கலாம் கொடு. உன் முதலாளியிடம் கேள். அவர் ஒப்புக் கொள்வார்'' என்றான்.
கடைப் பையன் முதலாளியைக் கேட்டு வருவதற்காக உள்ளே வந்தான்.
"முதலாளி, ஒரு பைத்தியக்காரன் பாதி கேக் கேட்டு என் உயிரை வாங்குகிறான்'' என்று அவன் பேச ஆரம்பித்தபோது, அந்த வாடிக்கையாளரும் தொடர்ந்து உள்ளே வந்துவிட்டார்.
அதைக் கவனித்த பையன், "மீதிப் பாதியை இவர் கேட்கிறார்'' என்று சமாளித்தான்.
நிலைமையைப் புரிந்து கொண்ட முதலாளிக்கு சிரிப்பு வந்த போதும், அந்தப் பையனின் சமயோஜிதம் குறித்துப் பெருமிதமடைந்தார்.
"சரி! சரி பாதி விற்பனை முடித்து விட்டு என்னை வந்து பார்'' என்றார்.
விற்பனை முடிந்து கடைப்பையன் முதலாளியைச் சந்தித்தான்.
"உன்னை மாதிரி கெட்டிக்கார இளைஞர்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். புதிதாக ஒரு கிளை திறக்க உள்ளேன். அதற்கு உன்னை மேலாளராக நியமிக்கிறேன்'' என்றார் முதலாளி.
மகிழ்ச்சியில் மிதந்தான் அந்த வேலையாள்.