பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி, “அர்ச்சுனா! போர்தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!'' என்றார்.
"மைத்துனரே, நீ என்னைப் போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனைத் தேரோட்டிதான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறதே... அதை மறந்து விட்டாயே! அப்படிச் செய்வது எனக்குப் பெருமை தரும் அல்லவா! நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாயே... இது என்ன நியாயம்?'' என்றான் அர்ச்சுனன்.
அர்ச்சுனனின் வார்த்தைகளைக் கிருஷ்ணர் காதில் வாங்கிக் கொண்டதாகவேத் தெரியவில்லை.
கிருஷ்ணர், "தேரை விட்டு இறங்கு!'' என்றார் கண்டிப்புடன்.
வேறு வழியின்றி அர்ச்சுனன் வருத்தத்துடன் தேரிலிருந்து கீழிறங்கினான்.
அப்போது அவர், “தேரின் பக்கத்தில் நிற்காதே! சற்றுத் தள்ளி நில்!'' என்றார் கண்டிப்புடன்.
அர்ச்சுனனால் கிருஷ்ணரின் கண்டிப்பைப் பொறுத்து கொள்ள முடியவில்லை. வெற்றி பெற்ற மகிழ்ச்சி கூட மனதை விட்டுச் சென்றுவிட்டது. ஒன்றும் புரியாதவனாய்த் தள்ளி நின்றான்.
வாடிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த கிருஷ்ணர், தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ச்சுனனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டார்.
அப்போதே அந்தத் தேர் தீப்பற்றி எரிந்தது.
"பார்த்தாயா? தேர் எரிகிறது! அதனால் தான் உன்னை இறங்கச் சொன்னேன்!'' என்றார் புன்முறுவலுடன்.
"தேர் ஏன் எரிந்தது?” என்று தெரியாமல் அர்ச்சுனன் கிருஷ்ணரைப் பார்த்தான்.
“அர்ச்சுனா! போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல ஆயுதங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவு நேரம் அதைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால், அவை வலிமையற்றுக் கிடந்தன. தேரை விட்டு நான் குதித்ததும், தேர்க்கொடியில் இருந்து அனுமனும் அங்கிருந்து புறப்பட்டு விட்டான். ஆயுதங்களின் சக்தி மோலோங்கியது. தேரும் பற்றி எரியத் தொடங்கிவிட்டது. உண்மை இப்படி இருக்க, நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னைச் சிறப்பிக்கவில்லையே என்று நினைத்து வருத்தப்படுகிறாய். வெற்றி பெற்றதும் "நான்” என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது. ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை நீ மறந்து விடாதே'' என்று அறிவுரை கூறினார்.
தேர் பற்றி எரிந்ததுபோல, அர்சுனனிடம் இருந்த ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது.
இறைவன் காரணமின்றி நமக்குத் துன்பம் எதையும் தருவதில்லை என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்.