மகாக் கஞ்சன் ஒருவன் விமான நிலையத்தைப் பார்ப்பதற்காகத் தன் மனைவியோடு வந்திருந்தான். விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும் இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி ஒருவர், “நீங்கள் இருவரும் வாருங்கள்… இந்த விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய்தான்!” என்றார்.
கஞ்சனுக்கு ஆர்வம்தான். அதற்காக, இருநூறு ரூபாய் வீண் செலவு செய்வது என்று நினைத்து, “நாங்கள் வரவில்லை” என்றான்.
எப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, “நீங்கள் பணம் தர வேண்டாம். எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இலவசமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படிச் சத்தம் போட்டுவிட்டால், இருநூறு ரூபாயைக் கட்டணமாக நீங்கள் கொடுத்துவிட வேண்டும். சம்மதம் தானே?” என்றார்.
அதற்கு சம்மதித்த அந்தக் கஞ்சன், தன் மனைவியுடன் விமானத்தில் ஏறி அமர்ந்தான். விமானம் பறக்கத் தொடங்கியது.
வானத்தில் விமானம் குட்டிக்கரணம் போட்டது. தலைகீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சிறு ஓசை கூட எழுப்பவில்லை. வேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார் விமானி.
கஞ்சனின் கையைக் குலுக்கி, “ஆமாம், பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, இதுவரை எனக்குத் தெரிந்து சிறு ஓசைகூட எழுப்பாமல் இருந்தீர்கள். என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது?” என்று கேட்டார் விமானி.
“நான் கூட, ஒரே ஒரு சமயம், என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ முயன்று அடக்கிக் கொண்டேன்!” என்றான் கஞ்சன்.
“எப்போது?” என்று கேட்டார் விமானி.
“என் மனைவி, விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது” என்றான் அந்தக் கஞ்சன்.
மயங்கி விழுந்தார் விமானி.