ஒரு தாய்க்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
அவற்றில் ஒன்று இறந்து விட்டது. நான்கு மருத்துவர்கள், மற்றும், எட்டு செவிலியர்கள் கொண்ட குழு, இரண்டு குழந்தைகளையும் அந்தத் தாயிடம் கொண்டு வந்தது.
தாய் மயக்கம் தெளிந்து பிரசவ வலியிலிருந்து கண் விழிப்பதற்காக அந்தத் தாயின் கட்டிலின் அருகில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
இந்தக் குழந்தைகளைத் தாயிடம் காட்டிவிட்டு, இறந்த குழந்தையைப் புதைப்பதற்காக அவர்கள் தயாராக இருந்தனர்.
கண்விழித்த தாய், இரண்டு குழந்தைகளையும் உற்றுப்பார்த்தார்.
ஒரு தொட்டிலில் ஒரு குழந்தை கை கால்களை ஆட்டிக்கொண்டு இருந்தது. மற்றொரு குழந்தை அசைவில்லாமல் கிடந்தது.
பின் மருத்துவர்களையும் பார்த்தார் அந்தத் தாய்.
குழந்தைநல மருத்துவர் அவரிடம், ஒரு குழந்தை இறந்துவிட்டது என்று சொன்னார்.
அப்போது அந்தத் தாய், என் வயிற்றிலே இரண்டு குழந்தைகள் உயிரோடு இருப்பதை உணர்ந்தேன், நீங்கள் மிகப்பெரிய மருத்துவர். எனக்கு நடந்தது சுகப்பிரசவம். அப்படியிருக்க, எப்படி ஒரு குழந்தை இறந்து பிறக்க முடியும்? அதற்கு வாய்ப்பே இல்லை, அந்தக் குழந்தையை என்னிடம் கொடுங்கள் என்று அதைக் கேட்டு வாங்கினார்.
அந்தக் குழந்தையை தன் தோளில் இறுக்கமாக அணைத்துக்கொண்டு கதறிக் கதறி அழுதார்.
அந்த நேரத்தில் அவரது கணவர், ஒரு குழந்தையாவது உயிரோடு இருக்கிறதே, எனவே உன்னைத் தேற்றிக்கொள், இந்த நேரத்தில் நீ அழக்கூடாது என்று, தன் மனைவியின் தோளைத் தொட்டார்.
கணவரின் கையை உதறிவிட்டார் தாய்.
புதைப்பதற்குக் குழந்தையைக் கொடு என்று மருத்துவர்களும் செவிலியர்களும் கேட்டனர்.
அவர்களை அந்தத் தாய் கண்டுகொள்ளவே இல்லை.
என்ன ஆச்சரியம். அத்தனை பேரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தாயின் அரவணைப்பில் இருந்த குழந்தை உயிர்பெற்றுக் கதறி அழுதது.
அந்தத் தாயினுடைய அன்பிற்கு முன்னால் மருத்துவம் பொய்த்துப்போனது.