ரங்காச்சாரி என்ற பெயர் கொண்ட தெலுங்கு பண்டிதர் ஒருவர் ரமண மகரிஷியிடம் 'நிஷ்காம்ய கர்மம்' பற்றி கேட்டார்.
ரமணரிடம் இருந்து பதிலே இல்லை. சிறிது நேரத்திற்கு பின்னால், ஒரு குன்றின் மேல் ஏறி நடக்கலானார். கேள்வி கேட்ட பண்டிதரும் இன்னும் சிலரும், ரமணரை தொடர்ந்து நடக்கலாயினர்.
கீழே தரையில் இருந்த ஒரு முட்கள் நிறைந்த குச்சியை கையில் எடுத்தார் ரமணர்.
பின்னர் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு மெதுவாக, அந்தக் குச்சியில் இருந்த முட்களை நீக்கலானார். அந்தக் குச்சியின் முடிச்சுகளை நேராக்கினார். பின்னர் ஒரு தடினமான இலையைக் கொண்டு, அந்த குச்சியை வழவழப்பானதாக மாற்றினார். சுற்றி இருந்தவர்கள் இவர் என்ன செய்கிறார் என்று வியந்து பார்த்துக் கொண்டு இருந்னர்.
சற்று நேரத்தில் பக்கத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஒரு சிறுவன் அந்தப் பக்கம் வர எல்லோரும் ஒதுங்கி ஆடுகளுக்கு வழி விட்டனர்.
அந்த சிறுவன் கையில் குச்சி இல்லாமல், ஆடுகளை வழிப்படுத்த சிரமப்பட்டுக் கொண்டு இருந்தான்.
அதைப் பார்த்த உடனே ரமணர், தன் கையில் இருந்த புதுக் குச்சியை, அந்தச் சிறுவனுக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
கேள்வி வினவிய பண்டிதரோ, ஆகா, என் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது என்றார்.