ஒருவன் ஒரு வயலைத் தாண்டி போய்க் கொண்டிருந்த போது புலி ஒன்றை எதிர்கொண்டான்.
அவன் ஓட, புலி அவனைத் துரத்தியது.
செங்குத்துப் பாறையில் ஏறியவன் அங்கு விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்த காட்டுக் கொடியின் வேரைப் பிடித்துக் கொண்டு இறங்கினான்.
துரத்திய புலி மேலே இருந்து மோப்பம் பிடித்தபடி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.
நடுங்கியபடி அவன் இறங்கி வந்த சமயம் கீழே இன்னொரு புலி அவனை அடித்துச் சாப்பிடக் காத்துக் கொண்டிருந்தது.
அந்தக் கொடி மட்டும்தான் அவனை விழாமல் தாங்கிக்கொண்டிருந்தது.
வெள்ளை, கறுப்பு என இரண்டு சுண்டெலிகள் அந்தக் கொடியை கொஞ்சம் கொஞ்சமாகக் கடிக்க ஆரம்பித்தன.
பக்கத்தில் சிவந்து பழுத்திருந்த இனிய கோவைப்பழத்தை அவன் பார்த்தான்.
ஒருகையில் காட்டுக் கொடியைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் அந்தப் பழத்தைப் பறித்தான்.
அடடா, எப்படி தித்தித்தது?