ஒரு காட்டில் ஒரு முயல் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது.
அதை பார்த்துக் கொண்டிருந்தது ஒரு ஆமை, “நம்மால் ஏற்கனவே வேகமாகப் போக முடியாது... இதில், முதுகில் வேறு பாரமாக ஓடு இருக்கிறது”
“முயலைப் பார்த்துப் பொறாமைப்படுவதில் பயன் இல்லை... என்னை இப்படிப் படைத்ததற்காக ஆண்டவனைத்தான் நொந்து கொள்ளவேண்டும்” என எண்ணியது.
அப்போது, அன்று இரை எதுவும் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த சிங்கம், விளையாடிக் கொண்டிருந்த முயலைப் பிடிக்கப் பாய்ந்தது.
முயல் ஒரே ஓட்டமாக ஓடி அங்கிருந்த புதருக்குள் சென்று ஒளிந்தது.
ஆமை தன் கூட்டுக்குள் முடங்கியது.
சிறிது நேரத்தில் சிங்கம் சென்றுவிட்டது.
முயல் பயத்தில் அவ்விடத்திற்கு வந்தது. ஆமை தன் கூட்டிலிருந்து தலையை நீட்டிப் பார்த்தது.
ஒவ்வொரு விநாடியும்... மரண பயத்திலேயே முயல் வாழ்நாளைக் கழிக்க வேண்டியிருக்கையில், விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள தன் முதுகிலேயே தனக்கு கூட்டைக் கொடுத்த இறைவனைத் தவறாக நினைத்தது எவ்வளவு பெரிய தவறு? என உணர்ந்தது.
இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. அந்தத் தனித்தன்மையைப் பயன்படுத்தி ஆபத்துக் காலங்களில் தப்பிக்கலாம். இதுவே இறைவன் கருணை என்பதை உணர்ந்தது ஆமை.