காவல்காரருக்குச் சந்தேகமாக இருந்தது.
அந்தப் பெண்ணின் தோற்றத்துக்கும், அவள் இடுப்பில் வைத்திருந்த குழந்தைக்கும் சம்பந்தமே இல்லை. அந்தப் பெண் கறுப்பாக, கிழிந்த சேலை கட்டி காலில் செருப்புக் கூட இல்லாமல் இருந்தாள். அந்தக் குழந்தையோ தங்க நிறத்தில் ராஜா வீட்டுக் குழந்தை போல இருந்தது. ஏராளமான நகைகள் அணிந்திருந்தது. உசத்தியான உடைகள் உடுத்தியிருந்தது.
‘இந்தாம்மா.. இங்கே வா’
வந்தாள்.
‘யாரு இந்தக் குழந்தை?’
‘என்னோட பிரியா’ குழந்தையை முத்தமிட்டாள். அது கலகலவென்று சிரித்தது. ‘இது போட்டிருக்கிற நகையெல்லாம் என்னுது’ என்று சிரித்தாள். குழந்தை கையிலிருந்த வளையலைக் கழற்றி அவளிடம் நீட்ட, ‘நீயே வச்சிக்க’ என்று திருப்பிக் கொடுத்தாள்.
போலீஸ்காரருக்கு சந்தேகம் வலுத்தது. ‘எந்த வீடு உனக்கு?’
அந்தப் பெண் தெருக்கோடியில் இருந்த மாளிகையைக் காட்டி ‘அதான் எங்கூடு’ என்றாள்.
போலீஸ்காரர் தீர்மானமே செய்து விட்டார். ‘வா என்னோட’ என்று அவளை அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குப் போனார். புல்தரையில் நாற்காலி போட்டு அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தவரிடம்,
‘இந்தப் பொம்பளை இந்த வீட்டைக் காட்டி எங்க வீடுன்னு சொல்றா. இந்தக் குழந்தையை என் குழந்தைங்கிறா. அது போட்டிருக்கிற நகையெல்லாம் என்னுதுங்கிறா. பிள்ளையை கடத்திகிட்டுப் போறாளோன்னு சந்தேகப்பட்டு கூட்டிகிட்டு வந்தேன்’ என்றார்.
வீட்டுக்காரர் சிரித்தார். ‘அவ எங்க வீட்டு வேலைக்காரி’
போலீஸ்காரர் அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘நீ எல்லாம் என்னுதுங்கிறே, ஐயா உன்னை வேலைக்காரிங்கிறாரு?’ என்று கேட்டார்.
‘சொல்லிப்ட்டு சிரிக்கிறாரே, அது ஏன்னு தெரியுமா?’
‘ஏன்?’
‘அவங்கள்ளாம் என்னை வேலைக்காரின்னுதான் சொல்வாங்க. அப்பத்தான் வீட்டு வேலைகளை ஒழுங்காச் செய்வேன்’
‘பின்னே ஏன் எல்லாம் என்னுதுன்னு சொன்னே?’
‘எல்லாம் என்னுதுங்கிற எண்ணம் இருந்தா திருட மனசு வராது’