ஒரு ஆசிரமத்தில் சீடன் ஒருவன் மரக்கன்று ஒன்றை நட்டுவிட்டு, “இறைவனே இம்மரக்கன்று உடனடியாக வளரவேண்டும், நிறைய மழை பெய்யட்டும்” என்று வேண்டினான்.
அவ்வாறே மழை அதிகம் பெய்தது. ஊறிப்போன மரக்கன்று அழுகிவிடுமோ எனப் பயந்தான் சீடன்.
இறைவா, “மழையை நிறுத்தி நல்ல வெயில் அடிக்கும்படி செய்..!” என்று வேண்டினான்.
அப்படியே வெயில் அடித்ததில் செடி வாட ஆரம்பித்தது. பதறிப்போன சீடன், “வெயிலும் வேண்டாம், மழையும் வேண்டாம், பனி பொழியட்டும்” என்று வேண்டினான்.
தட்பவெப்பம் அடிக்கடி மாறியதில் தாக்குப் பிடிக்காமல் செடி பட்டுப் போனது. இறைவனுக்குக் கருணையே இல்லை என குருவிடம் முறையிட்டான் சீடன்.
அவன் சொன்னதையெல்லாம் கேட்ட பின் குரு, “தன் படைப்பில் எதற்கு, எப்போது என்ன தேவை? என்பது இறைவனுக்குத் தெரியும். சுயநலத்திற்காக அதனை மாற்ற நினைத்து வேண்டினால் இப்படித்தான் நடக்கும்” என்றார்.
உண்மையை உணர்ந்த சீடன், மற்றொரு மரக்கன்றை நட்டுவிட்டு, “இறைவா, இனி இதை நீயேப் பார்த்துக் கொள்!” என்று வேண்ட ஆரம்பித்தான்.
சுயநலம் இன்றி இறைவனை வழிபடுவதே சிறப்பைத் தரும்.