காட்டில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார். பக்கத்து ஊரில் இருக்கும் மக்கள் அனைவருமே அவரிடம் வந்து தங்கள் குறைகளைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். துறவியும் அவர்களுக்குத் தகுந்த அறிவுரை வழங்குவார்.
இதேப் போன்று, ஒரு நாள் செல்வன் ஒருவன் துறவியிடம் வந்து, “ஐயா நான் ஏழையாகப் பிறந்தேன், நேர்மையாக உழைத்துச் செல்வந்தன் ஆனேன். நான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை, இருந்தாலும் மக்கள் என்னைப் பணத்தாசை பிடித்தவன், கெட்டவன் என்கிறார்கள்” என்றான்.
இதற்கு நான் என்ன செய்ய வேண்டும், நீங்கள்தான் சொல்லவேண்டும் என்றவுடன் அந்தத் துறவி, “இங்கிருந்து சிறிது தூரம் போனவுடன் இரண்டு மாமரங்கள் இருக்கும் அதில் ஒன்றில் காய்கள் கிடையாது. இன்னொரு மரத்தில் மரம் நிறைய காய்கள் இருக்கும். நீ போய் அந்த இரண்டு மரத்தின் நிலைமையைப் பார்த்துவிட்டு என்னிடம் வா” என்கிறார்.
சிறிது நேரத்தில் திரும்பிய அவன், “காய்த்த மரத்தின் அடியில் நிறைய கற்கள் இருக்கின்றன. அந்த மரம் நிறைய கல்லடி வாங்கியிருக்கு, இன்னொரு மரத்தின் அடியில் எந்த ஒரு கல்லும் இல்லை” என்றான்.
உடனே துறவி, “அந்த இரண்டு மரமும் நமக்கு ஒரு உண்மையை உணர்த்துகின்றன” என்றார்.
“அதாவது ஒன்றும் இல்லாமல் இருந்தால் நம்மை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், அந்த காய்த்த மரம் போல நன்றாக உழைத்து, உண்மையாக இருந்தால் பொறாமைப்பட்டு இப்படித்தான் பேசுவாங்க... இருந்தாலும், காய்ந்த மரம் போல வளமாக இருக்க ஊராரின் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாக வேண்டும். அதற்காகக் கவலைப்படக்கூடாது, அடிபட்டாலும் நான் வாழ்ந்து காட்டுவேன்னு வைராக்கியமாக இருக்கவேண்டும்” என்று துறவி மேலும் சொன்னார்.
உடனே அந்தச் செல்வன், “யார் எப்படிப் பேசினால், எனக்கென்ன நான் என் வாழ்வைச் சிறப்பாக வாழ்வேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.